நயன்தாரா, சிந்து, சைனா; தென் இந்தியாவின் அதிக வருவாய் ஈட்டும் பெண்கள்: ஃபோர்ப்ஸ் பட்டியல் 2018

ஹிந்தி நடிகர் சல்மான் கான் அதிக வருவாயுடன் 3-வது முறையாக இப்பட்டியலில் முதல் இடத்திலும், பெண் பிரபலங்கள் தீபிகா படுகோன் மட்டுமே முதல் 10 இடத்தில் உள்ளார்.

0

இந்த ஆண்டிற்கான அதிக வருவாய் ஈட்டும் 100 இந்திய பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் மற்றும் தென்னிந்திய கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர். 

ஹிந்தி நடிகர் சல்மான் கான் ரூ.253.25 கோடி வருவாயுடன் மூன்றாவது முறையாக இப்பட்டியலில் இடம்பெற்று முன்னிலை வகிக்கிறார்.

பட்டியலில் இடம்பெற்ற தென்னிந்திய பிரபலங்கள்:

தென்னிந்திய திரைத்துறையில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே பெண் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டுமே.

நயன் 15.17 கோடி ரூபாய் வருவாய் என்ற மதிப்பில் 69-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

நடிகர்கள் கமல் ஹாசன், ராம் சரண் மற்றும் விஜய் தேவர்கொண்டாவை பின்னுக்குத் தள்ளி நயன்தாரா முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து மற்ற துறையில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த பெண்களில், பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவர் ரூ.36.5 கோடி வருவாயில் 20வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 20வதில் இடம் பெற்றுள்ள இளைய பிரபலம் இவர். பி.வி சிந்துவை போல அதே துறையைச் சேர்ந்த சாய்னா நேவால் 16.54 கோடி மதிப்பை பெற்று 58வது இடத்தில் உள்ளார்.

தென்னிந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள 3 பெண்கள் இவர்கள் மட்டுமே. தென்னிந்தியா படங்களில் நடித்த நடிகை தாப்சி பண்ணு 15.48 கோடி ரூபாய் வருவாய் பெற்று 67வது இடத்தில் உள்ளார்.

இவர்களை தொடர்ந்து மற்ற தென்னிந்திய பிரபலங்களில் முதல் 15க்குள் இடம்பெற்றுள்ள இரண்டு கலைஞர்கள் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. 

ஏ ஆர் ரஹ்மான் 66.75 கோடி வருவாயுடன் 11வது இடத்திலும், ரஜினி 50 கோடி ரூபாய் வருவாயுடன் 14வது இடத்தையும் பெற்றுள்ளனர். ரஜினி தற்போது நடித்து வெளிவந்த 2.0 படமே இந்த இடத்தை பிடிக்கக் காரணமாய் அமைந்துள்ளது.

நடிகர்களில் ரூ.30.33 கோடி வருவாயில் நடிகர் விஜய் 26வது இடம், விக்ரம் 29வது இடம், மகேஷ் பாபு, சூர்யா, விஜய் செதுபதி மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் 33, 34, 35 மற்றும் 36வது இடத்தை பிடித்துள்ளனர். இதில் இடம்பிடித்துள்ள மற்ற நடிகர்கள் நடிகர் தனுஷ், மம்மூட்டி, அல்லு அர்ஜுன், கமல் ஹாசன், ராம் சரண் மற்றும் விஜய் தேவர்கொண்டா.

இவர்களை தொடர்ந்து மற்ற இடங்களை பிடித்தவர்கள் கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், ஜடேஜா, கே எல் ராகுல் மற்றும் புவனேஸ்வர் குமார்.

பட உதவி: இந்தியா டுடே
பட உதவி: இந்தியா டுடே

முன்னிலை வகிக்கும் பிரபலங்கள்:

சல்மான் கானை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பது கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்த ஆண்டு ரூ.228.09 கோடி வருவாய் பெற்று இந்த இடத்தை பிடித்துள்ளார் இவர். அக்ஷய் குமார் மற்றும் தோனி 3வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர். 

முதல் பத்திற்குள் இடம்பிடித்துள்ள ஒரே பெண் பிரபலம் நடிகை தீபிகா படுகோன். 112.8 கோடி ரூபாய் வருவாய் பெற்று 4வது இடத்தில் உள்ளார் இவர்.

இந்த பட்டியலில் மொத்தம் 18 பெண்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்; அதில் 3 பெண் பிரபலங்கள் மட்டுமே தெனிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தீபிகா படுகோன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்றாலும் முதன்மையாக இந்தி படங்களிலே பணிபுரிகிறார்கள்.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: ஃபோர்ப்ஸ்

Related Stories

Stories by YS TEAM TAMIL