விபத்தில் இழந்த மகளின் நினைவாக தொடங்கி, வீடுவீடாக வர்த்தகம் செய்து நிர்மா சோப்பு நிறுவனத்தை வளர்த்த கர்சன்பாய் படேல்!

2

கர்சன்பாய் படேல் தனது மகளை ஒரு கார் விபத்தில் இழந்தார். அவளின் நினைவாக அவர் தொடங்கிய ப்ராண்டை தன் சொந்த குழந்தையை போல பாவித்து வளர்த்தெடுத்துள்ளார் என்றால் மிகையாகாது. ‘சப்கி பசந்த் நிர்மா’ அதாவது ‘எல்லாருடைய விருப்பமும் நிர்மா’ என்ற பொருள் தரும் விளம்பர வாசகத்தை அறியாதோர் இருக்கமுடியாது. வீடு வீடாக சென்று விற்றுவந்த அந்த பொருள் இன்று இந்திய சோப்பு சந்தையில் 20 சதவீத பங்கையும், சலவை சோப்பு சந்தையில் 35 சதவீத பங்கையும் வகிக்கிறது. 

கர்சன்பாய் 1969 இல் நிர்மா எனும் இந்திய சலவை சோப்பு தொழிலை தொடங்கினார். அப்போது வெகு சிலரே இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். அதுவும் பெரும்பாலும் சர்வதேச நிறுவனங்கள் ஆகும். நடுத்தர வர்கம் மற்றும் ஏழை மக்களை குறிவைத்து இருந்த வர்த்தகத்தில், குறைந்த விலையில் சலவை சோப்புக்கான தொழில் வாய்ப்பு அதிகமாக இருந்தது. கர்சன்பாய், சலவை சோப்பை தனது வீட்டின் பின்புறத்தில் தயாரித்து, அகமதாபாத் அருகில் உள்ள கோக்ரா எனும் இடத்தில் விற்றுவந்தார். வீடு வீடாக சென்று ஒரு கிலோ சோப்பை 3 ரூபாய்க்கு விற்றுவந்தார். அப்போது பிரபல ப்ராண்டுகள் ஒரு கிலோ சோப்பை 13 ரூபாய்க்கு விற்றுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

80’ களில் நிர்மா சந்தையில் நீடிக்க எப்படி போராடி வந்தது என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை செய்தி வெளியிட்டது. அப்போதுதான் கர்சன்பாய் ஒரு அற்புதமான ஐடியாவை கொண்டுவந்தார். நிர்மாவை பிரபலப்படுத்த மாபெரும் விளம்பர பிரச்சாரம் ஒன்றை தயார் செய்தார். அதில் வெள்ளை ப்ராக் அணிந்த தனது மகளின் படத்தை போட்டு, மனதை கவரும் பாடல் ஒன்றை தயார் செய்து விளம்பரப்படுத்தினார். அந்த நிர்மா பாடல் இந்தியா முழுதும் பிரபலமாகி மக்கள் அனைவரும் அந்த சோப்பை வாங்க கடைகளில் குவிந்தனர். இருந்த சோப்புகள் விற்றுத்தீர்ந்தது. நிர்மாக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தனது உற்பத்தியை பெருக்கினார் கர்சன்பாய். அந்த வருடம், சலவை சோப்புகளின் விற்பனையில் நிர்மா முதல் இடத்துக்கு சென்றது. அவரின் போட்டியாளரான, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சர்ஃப் சோப்பை காட்டிலும் நிர்மா உயர்ந்த இடத்தில் இருந்தது. 

இந்த ஆண்டு, கர்சன்பாய் LafargeHolcim’ சிமெண்ட் தொழிலை 1.4 பில்லியன் டாலருக்கு வாங்கி, தான் ஒரு தலைசிறந்த தொழிலதிபர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த டீலின் மூலம் ராஜஸ்தான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிர்மாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொழில்முனைவு என்பது மனதார செய்யும் ஒன்று. கூச்ச சுபாவம் கொண்ட கர்சன்பாய், நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர். நிர்மா இஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பயிற்சி மையத்தை 1995 இல் தொடங்கினார். பின், நிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை 2003 இல் துவக்கினார். 2004 இல் நிர்மாலேப்ஸ் எடுகேஷன் ப்ராஜக்டை தொடங்கி, அதில் தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் வழிக்காட்டும் பணிகளை செய்துவருகிறார். 2010இல் கர்சன்பாய் படேலுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. 

கட்டுரை: Think Change India 

Stories by YS TEAM TAMIL