உலகைச் சுற்றும் சாகசத் தம்பதியர்!

0

புதுப்புது நாடுகளுக்கு பயணித்து, பல வித புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை அப்டேட் செய்து கொண்டே இருப்பது அற்புதமாக நிலை, இல்லையா?

அந்த கனவில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், மோனிகா மோஹேவும், ஷாரிக் ஷர்மாவும்! உலகின் ஒவ்வொரு அடியையும், மோட்டார் பைக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது, இந்த இருவர் குழு. திருமணப் புகைப்படக்காரர்களான இவர்கள், உலகம் முழுதும் சுற்றும் தங்கள் சாகசக் கதைகளை பகிர்ந்துக் கொண்டு, உலகம் சுற்ற விரும்பும் பிறர் திட்டமிடவும் வழிகாட்டுகிறார்கள். இவர்களின் பயணக் கதை, கேட்க வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், ஆனால், முழுமையாக ஐந்து வருடங்கள் மெனக்கெட்டு, இந்த பயணத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள் !

“இது ஒரு நொடியில் எடுத்த முடிவல்ல. ஏறத்தாழ ஐந்து வருடங்கள், இந்த பயணத்திற்கு திட்டமிட்டோம். பெரும்பாலும் இந்தியர்கள், வேலைகளில் மூழ்கி, ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதைப் போன்ற பயணங்களை எல்லாம், டிவியில் வரும் சாகச நிகழ்ச்சிகளில் மட்டும் தான் பார்ப்பார்களே தவிர, ஒரு போதும் இதைப் போல பயணிக்கவே மாட்டார்கள். இணையம் மூலமாக ஒரு ஹோட்டலை புக் செய்து விட்டு, அங்கேயே தங்கி இருந்தால், அந்த இடத்தின் உண்மையான அழகை எப்படிப் பார்க்க முடியும்?”

அடிப்படை தயாரிப்புகள்

எனினும், ஒரு மோட்டார் பைக்கில் உலகைச் சுற்றி பயணிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. மோனிகாவும், ஷாரிக்கும் பயணிக்கும் ட்ரயம்ப் டைகர் 800XC பைக், அவர்களுடைய பயணப்பொருட்கள், உபகரணங்களை சுமக்கக் கூடியது தான் என உறுதிப்படுத்திக் கொண்டப் பிறகு தான் பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

பைக்கின் இருபுறமும் பொருத்திக் கொள்ளக் கூடிய பைகளையும், காற்றுப் புகாத ‘ட்ரை பேக்’களையும் பயணத்தின் போது, உபயோகிக்க பரிந்துரைப்பவர்கள், “பைக்கின் பின்புறம் வைக்க வேண்டிய பொருட்களுக்காக, புகைப்படக்காரர்களும், இசைக் கலைஞர்களும் தங்கள் பொருட்களை வைக்க பயன்படுத்தும் பெலிக்கன் கேஸ் வைத்திருக்கிறோம்” என்கிறார்கள்.

கூடாரம் அமைக்கப் பயன்படும் பொருட்கள், மற்ற சிறிய பொருட்கள் எல்லாம் ஒரு பயணப் பைக்குள் வைத்து, அந்தப் பையை எலாஸ்டிக் வடம் கொண்டு பெலிக்கன் கேஸுடன் இணைத்திருக்கின்றனர்.

வாழ்நாள் சாகசமாக இருந்தாலும் கூட, பாதுகாப்பு தான் முதன்மை என்றும், அதை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்துபவர்கள், தரமான பயணப் பொருட்களையும், தலைக்கவசத்தையுமே உபயோகப்படுத்துகின்றனர்.

மாசுக் கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம்

கண்டம் விட்டு கண்டம் தாண்டி பயணிக்கும் போது பைக்கை என்ன செய்வீர்கள்? என்றால் ‘பைக்கை விமானத்தில் போட்டு அதையும் எடுத்துக் கொண்டுப் போவோம்’, என்கிறார்கள். அது எத்தனை சவாலான வேலையாக இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள். சில நாடுகளில், எடுத்துச் செல்லப்படும் வாகனம் திரும்பிக் கொண்டு வரப்படும் என்பதை உறுதியளிக்கும் ‘கார்னெட் டி பாசேஜ்’ ஆவணத்தை சமர்ப்பித்தல் கட்டாயம் செய்ய வேண்டியது.

சம்பிரதாயங்கள், வழக்குகள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முழு உலகை சுற்றுவதற்கு இவர்களுக்கு எப்படி பணம் கிடைத்தது?

“இந்த பயணத்திற்கான பொருளாதார தேவைகளை கவனித்துக் கொள்வது நாங்களே தான். இதற்காக, ஐந்து வருடங்களாக சேமித்து வைத்திருக்கிறோம். பெரிய தியாகங்கள் எதையும் செய்ய வில்லை. சிறு சிறு மாற்றுத் தேர்வுகளே போதும். சில நாட்கள், விலையுயர்ந்த உணவகத்தின் உணவை தியாகம் செய்தால், துருக்கி செல்வதற்கான பயணச் செலவை சமாளிக்க முடியும். ஆறு அல்லது எட்டு முறை செய்யும் தியாகம் போதும். எல்லாமே, மனநிலையில் தான் இருக்கிறது”. பயணத்தின் போது விடுதிகளில் ஏற்படும் செலவை சமாளிக்க, ‘கவுச்-சர்ஃபிங்’ என்ற இணையதளம் உதவியுடன், முன்னாள் சாகசப் பயணிகளின் வீடுகளில் தங்கிக் கொள்கின்றனர்.

கவுச் சர்ஃபிங் அனுபவங்கள்

இதுவரை, 33000 கிலோமீட்டர் சாலை வழியே பயணித்திருக்கிறார்கள். இடையிடையே தங்கள் பணி வாழ்க்கையையும் கவனிக்க வேண்டியிருப்பதால், அடுத்த நான்கு அல்லது ஐந்து வருடங்கள் முழுக்க, பல நாடுகளுக்கு பயணிப்பதாய் திட்டமிட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பல முறை விமானத்தில் பயணிக்கும் தம்பதியின் கரியமில தடத்தின் அளவு பற்றிப் பேசிய போது,

'எங்கள் மோட்டர் பைக் எப்போதுமே, மாசு பரிசோதனை செய்யப்பட்டு தான் இருக்கும். அதிக மைலேஜ் கிடைக்க வேண்டி, சரியான வேகத்தில் தான் பைக்கை செலுத்துவோம். பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், ‘மாசுக் கட்டுப்பாட்டிற்கும்’ அது உதவுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், பாத்திரங்களை பயன்படுத்த மாட்டோம். தண்ணீர் நிரப்பி எடுத்து செல்லும் பாட்டில்களையும், சீல் செய்யக் கூடிய பைகளில் தான் உணவையும் வாங்குவோம். ரீ-சார்ஜ் செய்யக்கூடிய பாட்டரிகளை தான் பயன்படுத்துவோம். இயன்ற அளவு குறைந்த பொருட்களைத் தான் எடுத்துச் செல்வோம். நாங்கள் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த காடுகளிலும், மற்ற இடங்களையும் மதித்து, அதன் இயல்பு நிலையிலேயே தான் விட்டுவிட்டு வருவோம்.”

பல தம்பதியினர், ஒரு வாரம் முழுக்க இருபத்து நான்கு மணி நேரம் ஒன்றாய் இருப்பதன் விளைவே இனிமையாக இல்லாத போது, பல நெருக்கடியான சூழல்களை ஒன்றாக சந்திக்க நேரும் இவர்களுக்கு இடையே உறவு எப்படியிருக்கிறது?

“முந்தைய இரவு சின்ன விஷயத்திற்கு சண்டை போட்டுக் கொண்டோ, வாக்குவாதம் செய்துக் கொண்டோ உறங்கியிருந்தாலும் கூட, மறுநாள் காலை எதோவொரு சிறு குடிசையிலோ, அல்லது, வேறு ஒரு வீட்டின் கட்டிலிலோ விழித்தெழும் போது, ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்வோம். அது தான் முக்கியமும் கூட..”

மோனிகாவிற்கு, வண்டியின் சத்தம் மற்றும் காற்றின் இரைச்சலை சமாளித்து, ஷாரிக்கிடம் பேச கத்திக் கொண்டே இருப்பது தான் கஷ்டமாக இருக்கிறதாம்.

நார்வேயின், படகு நிலையம் ஒன்றின் காத்திருப்பு அறையில் உறங்கியது தான், தனக்கு நேர்ந்த மிகச் சிறந்த அனுபவம் என்கிறார் மோனிகா “அன்று நாங்கள் கண்ட காட்சிகள் எல்லாம், அவ்வளவு அழகாக இருந்தது” என அதை நினைவு கூறுகிறார்.

பயணப் பிரியர் மற்றும் பிரியைகளுக்கு. அவர்களுடைய ஒரே அறிவுரை “ உங்கள் வேலை மிக முக்கியமான ஒன்று; வேலையை உதறிவிட்டு நடையைக் கட்டக் கூடாது. தீவிரமாக உழைத்து, எல்லாவற்றையும் திட்டமிடுங்கள். வாழ்நாள் சாகசங்களுக்கு,உழைப்பும் தேவையான ஒன்று தான்” என்பது.

பல தேசங்கள் கண்டு மகிழ்ந்திருக்க, வாழ்த்துக்கள் !

ஆக்கம் : Bahar Dutt | தமிழில் : Sneha