லயோலா கல்லூரி ‘LIBA' தொடங்கி உள்ள இன்குபேஷன் மையம்: 2020’க்குள் 10 ஸ்டார்ட்-அப்’கள் அடைகாக்கப்படும்! 

0

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள வணிக நிர்வாகப் பள்ளி LIBA’வின் அங்கமான ’பேராசிரியர் சிகே.பிரஹலாத் செண்டர் பார் எமெர்ஜிங் இந்தியா இனிஷியேடிவ் செண்டர்’, விரைவில் ஸ்டார்ட் அப்’ களை ஊக்குவித்து வழிநடத்தும் அடைகாக்கும் மையம், அதாவது இன்குபேஷன் செண்டர் ஒன்றை நிறுவப்போவதாக அறிவித்துள்ளது. இதில் அடைகாக்கப்படும் தொடக்க நிறுவனங்கள் சமூக தொழில்முனைவு நோக்குடன் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. LIBA’ வின் வருடாந்திர பட்டம் வழங்கும் விழாவில் இந்த அறிவிப்பு வெளிவந்தது. மேலும் இந்த அடைகாக்கும் மையம் மூலம் 2020க்குள் சுமார் 10 ஸ்டார்ட்-அப்’ கள் வழிநடத்தப்படும் என்று கூறி உள்ளனர். 

இந்தியா ஸ்டார்ட்-அப் துறையில் பெரும் வளர்ச்சியை சந்தித்து வரும் இவ்வேளையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இடையே சமூக தொழில்முனைவு எண்ணத்தை ஊக்கப்படுத்தவே இந்த அடைகாக்கும் மையத்தை தொடங்குவதாக  லயோலா கல்லூரி அறிவித்தது. இந்த மையம், தனியாக ஒரு குழுவை அமைத்து, சமூக தொழில்முனைவோர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான அலுவலக இடத்தையும் கல்லூரி வளாகத்துக்குள் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இதைத்தவிர, தொழில்முனைவு குறித்த ஆலோசனை சேவைகள், பயிற்சிகள், கருத்தரங்குகள், மற்றும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை பலமாக்க உழைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். 

இது பற்றி LIBA’ வின் இயக்குனர் ஃபாதர் க்ருஸ்டீ எஸ்ஜே அவர்கள் பேசியபோது,

“இந்தியா; புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க தொழில் வளர்ச்சிகளை ஊக்கப்படுத்தும் இடமாக வேகமாக வளர்ந்து வருகிறது. பேராசிரியர் சிகே.பிரஹலாத் மையம், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதற்கு புதிய தீர்வுகளை வழங்க நினைப்போருக்கு வழிகாட்டியாக செயல்படும். தொழில் மாடலுடன் கூடிய, புதிய பிசினஸ் ஐடியாவுடன், முதலீடுகள் பெற வழி உள்ள தொழில்முனைவோர்களை இந்த மையம் ஊக்குவிக்கும். தொழில்முனைவோர்களும் தங்களின் சமூக நிறுவனம் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த இம்மையம் உதவும். சமூக தொழில்முனைவுகளுக்கு போதிய வெளிச்சமும், அதில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், முதலீடுகளை பெறவும் தொழில்முனைவர்களுக்கு இம்மையம் வழிகாட்டும் சேவைகளை புரியும்,” என்றார்.  

இந்த மையம் பற்றிய அறிவிப்புடன் பல்வேறு பல புதிய முயற்சிகள் பற்றியும் LIBA அறிவித்தது. மாணவர்கள் இடையே தொழில்முனைவு எண்ணத்தை ஏற்படுத்த, ‘செண்டர் ஆப் எக்சலன்ஸ் ஃபார் பினினஸ் அனாலிடிக்ஸ் அண்ட் லிபா இன்பர்மாடிக்ஸ் செண்டர்” (Centre of Excellence for Business Analytics and LIBA Informatics Centre, a CSR initiative) என்ற LIBA’வின் சமூக பொறுப்பு முயற்சியை பற்றியும் வெளியிட்டனர். இதில் மாணவர்களின் பங்கோடு, பேராசிரியர்கள் இணைந்து, சிறு-குறு தொழில் புரியும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்குபேஷன் செண்டர் பற்றி மேலும் பேசிய பாதர் க்ரிஸ்டீ, 

“பேராசிரியர் சிகே.பிரஹலாத் மையம், வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 10 தொடக்க நிறுவனங்களை அடைகாத்து வழிக்காட்ட திட்டமிட்டுள்ளது,” என்றார்.