தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக் கொண்ட ராதிகாவின் வாழ்க்கை பயணம்!

0

ஒரு தாக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என நினைத்து விட்டால் தூரங்கள் என்பது வெறும் எண்கள் தான், அது 13870 கி,மீ என்றாலும் சரி.

இத்தனைக்கும் அவர் தொழில்முனைவரோ, ஒரு நிறுவனத்தில் உயர்பதவி வகிப்பவரோ இல்லை. அவரின் வாழ்க்கைத் தேர்வுகளை புரிந்து கொள்ளாதவர்களுக்கு அவர் ஒரு புதிர்.

ராட்ஸ் என்று செல்லமாக நண்பர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு தாய், ஒரு நடனக் கலைஞர், ஒரு மிதிவண்டி ஓட்ட வீரர் மற்றும் முக்கியமாக பொருட்களைச் சரிசெய்யும் நிபுணர். ”நான் செய்வதை சிறப்பாக விளக்க வேண்டுமானால் நான் பொருட்களை சரிசெய்து இயங்க வைக்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள் நான் ஸ்திரமாக ஒரு துறையில் இல்லாததைக் கண்டு எனக்கு கவனித்தல் குறைபாடும், அடிக்கடி தொழில்வாழ்க்கையை மாற்றும் ஒரு நபர்" எனக் கருதுவதாக கூறிச் சிரிக்கிறார்.

பள்ளி நேரம் முடிந்தபின் நடக்கும் நிகழ்ச்சிகள், பெண் குழந்தைகளைப் படிக்க வைத்தல் மற்றும் “படிப்பிற்காக புடவைகள்” (Sarees for Education) போன்றவை அவராக எடுத்துக்கொண்ட சில கொள்கைப் பணிகள். தற்போது நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் மும்முரமாக இருக்கும் அவர் அவற்றை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு அனுப்பி, விர்ஜினியாவின் சாண்டில்லிக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட 13870 கி.மீ தூரத்தை இணைத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் உதவி கேட்டு பதிந்த பதிவுகளைப் பார்த்து சென்னையிலா இருக்கிறாய் என வினவிய நண்பரிடம் “என் ஆன்மா அங்கே இருக்கிறது” என பதிலளித்திருக்கிறார். களத்தில் இறங்கி பணிபுரிதல் என்பதைக் கண்கூடாக இவரிடம் பார்க்கலாம்.

“எண்ணமும் மனமும் ஒரு புது திசையில் என்னை இழுக்கின்ற உணர்வை நான் பிறருக்கு விளக்கச் சிரமப்படுகிறேன். ஏனெனில் நான் புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவள், மேலும் அவற்றில் பெரும்பாண்மை செயல்களை நான் நன்றாகவே செய்கிறேன். பின்னர் ஏன் நான் ஒரு சராசரியான காலையில் போய் மாலையில் திரும்பும் பணியைத் தேடவேண்டும் எனப் புரியவில்லை. அதனால் எப்பவுமே என்மேல் ஒரு பரிதாபப் பார்வை விழுந்து கொண்டிருக்கும், ஆனால் அவை என்னை பாதிப்பதை நிறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டன” என்கிறார்.

மனம் சொல்வதைக் கேள்

பல்வேறு கொள்கைகளுக்காக உதவி, கல்வித் துறைக்கு மிக நெருக்கமாக சமீப வருடங்களில் ராதிகா வந்திருக்கிறார். தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பள்ளிநேரத்திற்குப் பின் நடக்கும் நிகழ்ச்சிகளில் தன்னார்வலராக பங்கேற்கிறார். அப்போதுதான் தன் செயல்களால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என உணர்ந்துள்ளார்.

"எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் மற்றும் நான் உலகெங்கும் உள்ள பெண் குழந்தைகளுக்கு, சமமாக நடத்தப்படுவதற்கான, படிப்பிற்கான உரிமை இருக்கிறதென நம்புகிறேன். எவ்வலவு சிறியதாக இருப்பினும் நாம் நம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் அப்போதுதான் நம் கூட்டு முயற்சியின் பலனாக மாற்றங்களைப் பார்க்க முடியும். என் மகள்கள் படிக்கும் பள்ளியில் தன்னார்வலராக இருக்கிறேன். அங்கு அந்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்விற்கு முன் நான் செய்வதெல்லாம் மிகக் குறைவு".

மக்கள் தங்களை நேரடியாக பாதிக்காத ஒரு விஷயத்திற்காக முன்னெடுக்க வைப்பதில் ராதிகா ஒரு எளிமையான உத்தியை கடைபிடிக்கிறார். தான் செய்வதைப் பற்றி மிகவும் துடிப்புடனும், வெளிப்படையாகவும் பேசுகிறார். மக்கள் தன் நிலையில் இருந்து அவற்றை நினைத்துப் பார்க்கையில் அவர்களுக்கும் புரிந்துபோய் தானாக அதை ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஆரம்பத்தில் தான் செய்வது சரிதானா என்கிற எண்ணமெல்லாம் வந்திருக்கிறது. “கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அந்த கணத்தில் வாழ்ந்து புதிதாக கற்றுக் கொள்ளுதல், உதவுதல், தெரிந்தவற்றைப் பகிர்தல், இதைச் செய்வதற்குத்தான் நான் இருக்கிறேன் என உணர்ந்துகொண்டிருக்கிறேன். ஒரு பொருளையோ வாய்ப்பையோ உருவாக்கி மாற்றங்களைக் கொண்டு வருகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்.

கல்விக்காக 'புடவை'

ராதிகாவின் இந்த வருட முன்னெடுப்புகளில் முதல்நிலை வகிப்பது “கல்விக்காக புடவை”. 100 நாள் புடவை உடுத்தும் சவால் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக்கப்பட்டு பெண்களை புடவை உடுத்த ஊக்குவிக்கும் முயற்சியில் ஒரு சிறு மாற்றம் கொண்டுவந்து அதன் மூலம் அருமையான பலன் கிடைக்க வைத்தார் இவர்.

ராதிகா உடுத்தும் ஒவ்வொரு புடவைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறார். அதனால் அந்த வருட முடிவில் சேர்ந்திருக்கும் கணிசமான தொகையை, மனம் உறுத்தாமல் கொடுக்க முடிகிறது. அந்தத் தொகை பெண் கல்விக்காக செலவழிக்கப் படுகிறது.

இந்தத் திட்டம் எனக்கு சில கசப்பான தருணங்களைத் தந்தது. நிறைய பேர் இதை பிரபலமாகும் உத்தி என நினைத்தார்கள். சில நண்பர்களையும், என் எழுத்துலக வாழ்வில் சிலவற்றையும் இழந்தேன். ஆனால் பல புதிய தொடர்புகளை, மதிப்பில்லா வாய்ப்புகளை இது உருவாக்கியுள்ளது. மொத்தத்தில் ஒரு அருமையான முயற்சி.

புடவை இந்தியாவோடும் இந்திய மக்களோடும் எங்களை இணைக்கிறது, அது தனித்தன்மையான, எங்களின் வேர்களுக்கான அடையாளம். புடவையைப் போல் இந்திய அடையாளத்தை பறைசாற்றக் கூடியது எதுவுமில்லை.

இந்தியப் பெண்கள் புடவையை சிறப்பானத் தேர்வாய் பார்ப்பதில்லை என்னும் நிலையில் இவர் வேறுவிதமாகச் சொல்கிறார். ‘எல்லா தலைமுறைகளும் எல்லா குழுக்களும் புடவையை ஒரு அழகான ஆடையாகப் பார்க்கிறார்கள். இந்த முன்னெடுப்பு புதிதல்ல ஏனெனில் இங்கு மொழி, மாநிலம் என்ற வேறுபாடு இன்றி அமெரிக்கர்கள் மத்தியிலும் புடவை பிரபலம்”.

மெருகேறுதல்

அமெரிக்க வாழ்க்கை ராதிகாவை சுதந்திரமானவராகவும், சுயசார்பு கொண்டவராகவும் ஆக்கியிருக்கிறது. சவால்களை ஏற்கையில் இது கை கொடுக்கிறது. அமெரிக்காவில் குடிபுகுந்தோர் தங்கள் எல்லா முயற்சிகளுக்கும் தாங்களே பொறுப்பேற்பதால், அந்தச் சூழல் அவர்களை வலுவானவர்களாக ஆக்கி விடுகிறது. வீட்டு வேலையாளோ ஆதரவான குடும்பமோ இல்லாத நிலையில் பெண்கள் எல்லா வேலைகளும் திறம்பட கவனிக்கும் திறனைப் பெற்று விடுகின்றனர். இது ஒரு நல்ல விஷயம் என்கிறார்.

சென்னையில் வளர்ந்த ராதிகா, சங்கர் நேத்ராலயாவில் கண் சிகிச்சை நிபுணருக்கான கல்வி கற்றார், மூன்று விசா மறுப்புக்குப் பிறகு இந்தியாவிலேயே கல்வியைத் தொடர்ந்தார். ஏப்ரல் 1997ல் மூன்று வருட ப்ரஸல்ஸ் வாழ்க்கைக்குப் பின் தன் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்.

இரண்டு குழந்தைகளுடன் ராதிகா, பல இடர்பாடுகளுக்கிடையே இன்ஃபர்மேஷன் சிஸ்டம்சில் தன் பட்ட மேற்படிப்பை முடித்தார். “நான் மருத்துவம் படிக்கவேண்டும் என ஆசைப்பட்ட என் தந்தையை ஏமாற்றிவிட்டதாக நினைப்பேன். ஆனால் இப்போது அந்த எண்ணங்களை விட்டுவிட்டேன்.”

சிலகாலம், ராதிகா டேட்டா அனலிஸ்ட் ஆக வேலை பார்த்தார். மூன்றாவது முறை தாயான பின்னர் வலைப்பூ எழுதுதல் பக்கம் திரும்பினார். வலைப்பூவின் மூலமாக பல பெண்களைச் சந்தித்து அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்கிறார்.

விடாமுயற்சி

2009ல், இரண்டு கால் மூட்டுகளிலும் தசைநார்கள் கிழிந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தது. மிகுந்த சிரமத்தோடு சோர்ந்து போன மனத்தை தயார் செய்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் வாழ்க்கையில் சந்தித்ததிலேயே இது மிகப்பெரிய சவால்.

தயவு தாட்சண்யமே இல்லாத குளிர்காலமும், கடினமான சிகிச்சை முறைகளும் என்னைப் பாடாய்ப் படுத்தின. மூன்று மாதம் அனைத்திற்கும் பிறரையே சார்ந்திருக்கும் நிலை அயர்ச்சியையும், வெறுப்பையும் தந்தது. அதை மாற்ற அவர் மிதிவண்டி செலுத்துதலைத் தேர்ந்தெடுத்தார்.

வாஷிங்டன் பகுதி மிதிவண்டி ஓட்டிகளின் பெண்கள் பிரிவை அணுகி தன் முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.

கடந்த குளிர்காலத்தில் 50 மைல், மிதிவண்டியில் சென்றேன். என்னை நினைத்து மகிழ்வாகவும் பெருமையாகவும் இருந்தது. என்னால் 10 மைல்கள் மூட்டுவலியால் நடக்க முடியாது ஆனால் இந்தத் தொலைவை நான் மிதிவண்டியில் கடந்திருக்கிறேன். 

'செய்வன திருந்த செய்' எனப் பொருள் தரும் ஒரு லத்தீன் பழமொழியில் ஸ்திரமான நம்பிக்கை கொண்டு “ஒரு குறிக்கோளை நோக்கி நாம் நகரத் தொடங்கினால் என்றாவது ஒரு நாள் மக்கள் நம் எண்ணத்தைப் புரிந்து கொள்ளுவார்கள். அவர்களோ அவர்கள் ஒப்புதலோ நமக்கு முக்கியமில்லை. ஆனால் அது நம்மை முழுமையாக வெற்றிக் கோட்டில் சென்று சேர்க்குமானால் அதைப்போன்ற ஆனந்தம் எதுவும் இல்லை” என முடிக்கிறார்.

ஆக்கம் : Tanvi Dubey | தமிழில்: Sowmya