சின்னப்பாலம் டூ அமெரிக்கா: மீனவப் பெண் லட்சுமியின் அசத்தல் பயணம்!

13

மெத்தப் படித்தால் மட்டுமே ஊர் மெச்சுமா என்ன? மழைக்குகூட பள்ளிப் பக்கம் ஒதுங்காத லட்சுமி மூர்த்தி இன்று ஊர் மெச்சும் அளவுக்கு அமெரிக்க விருது பெற்றுள்ளார். எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாதவர் மீனவர் கிராமங்களைச் சேர்ந்த கடற் பாசி சேகரிக்கும் சுமார் 2000 பெண்களை ஒருங்கிணைத்து 'மன்னார் வளைகுடா பாசி சேகரிக்கும் பெண்கள் கூட்டமைப்பை' உருவாக்கி அதற்கு தலைவியாக இருக்கிறார். பெயரளவில் மட்டும் தலைவி அல்ல லட்சுமி. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்துக் கொண்டே கடலில் இருந்து எப்படி வருமானம் ஈட்டுவது என்ற நுணுக்கத்தை ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தவர் அவர்.

யுவர் ஸ்டோரி இணையதளத்துக்காக அவர் பிரத்யேகமாக அளித்தப் பேட்டி இதோ உங்களுக்காக...

உங்களைப் பற்றி சிறு அறிமுகம்?

என் பெயர் லட்சுமி. 46 வயதாகிறது. சாதாரண மீனவக் குடும்பத்தில் பிறந்தேன். பள்ளிப் படிப்பு வாசனையே எனக்கு இல்லை. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால் தான் முதியோர் பள்ளியில் சேர்ந்து அடிப்படை படிப்பை கற்றுக் கொண்டேன். இப்ப எழுத்துக்கூட்டி வாசிப்பேன். ஆனால் எழுதத் தெரியாது. எனக்கு 7 வயசு இருக்கும், அப்பவே, என் அப்பாவோட கடலுக்குச் செல்லத் தொடங்கினேன். அது இன்று வரை தொடருது. கடலில் பாசி எடுப்பதுதான் என் தொழில். என்னைப் போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தீவுகளில் 2000 பெண்கள் கடல் பாசி சேகரிக்கும் பணியைச் செய்கிறோம்.

உங்களுக்கு அமெரிக்க விருது கிடைத்துள்ளதே.. அது பற்றி?

ஆமாம். எனக்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் செயல்படும் கடல்சார் ஆய்வு மையம் (சீக்காலஜி) கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்காக இந்த விருதை வழங்கியிருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. சின்ன வயசுல இருந்து இயல்பா செய்துகிட்ட வந்த தொழில், நான் தெய்வமாக நினைச்சு செய்த அந்த தொழிலே இன்று எனக்கு இவ்வளவு பெரிய கவுரவத்த தேடித் தந்திருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு.

கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பில் உங்கள் பங்களிப்பு என்ன?

கடற் பாசிகளை சேகரிப்பதுதான் என் தொழில். கடலுக்குப் போனோமா பாசி சேகரிச்சோமா, அத காசாக்கினோமா என்பதல்ல இந்த தொழில். பார்த்து, பக்குவமா செய்யணும். கடற்பாசி ஒரு இயற்கை வளம். அதை எப்ப அறுக்க வேண்டுமோ அப்போதுதான் அறுக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் அதைச் செய்ய வேண்டும். முன்னாடி எல்லாம் மீனவ கிராம பெண்கள் அவங்க இஷ்டத்துக்கு கடலுக்குச் செல்வதும், பாசி அறுப்பதாகவும் இருந்தாங்க. அப்புறமா, 'மன்னார் வளைகுடா பாசி சேகரிக்கும் பெண்கள் கூட்டமைப்பை' உருவாக்கி அதற்கு நான் தலைவியா பொறுப்பேற்ற பின்னர் நிலைமை மாறிடுச்சு. ஒரு மாசத்துல 12 நாள் மட்டுமே கடல் பாசி அறுப்புக்கு போவோம். அதாவது அமாவாசைக்கு பின் 6 நாள், பவுர்னமிக்கு பின் 6 நாள். இந்த கால இடைவெளியில் போனால்தான் கடல்பாசி சரியா வளந்திருக்கும். அறுப்புக்கு தயாராக இருக்கும். அதை அறுத்துக் கொண்டுவந்து உள்ளூர் மீனவர்கள் கி ட்ட வித்துடுவோம். மரிக்கொளுந்து பாசி, கட்டங்கோரை பாசி என இரண்டு வகை பாசியை அறுத்தெடுத்து வருவோம். இவற்றிக்கு வெளிநாட்டுச் சந்தையில் நல்ல மவுசு. எங்ககிட்ட இருந்து ஈர பாசியை வாங்குற மீனவர்கள் அதை பதப்படுத்தி பாடம் செய்து தனியார் நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்றாங்க.

12 நாள் மட்டுமே பாசியை அறுப்பதால் எங்களுக்கு போதுமான ஓய்வும், கடற் பாசி வளர்ச்சியும் உறுதியாகுது. இது மட்டும் இல்லீங்க. மீன் பிடி தடை காலம் வரும்போதும் நாங்கள் 2 மாதங்களுக்கு கடற்பாசி அறுப்புக்குச் செல்வதில்லை. கடற் பாசியில்தான் குட்டி குட்டி மீன்கள் அதிகளவில் குஞ்சு பொரித்து இனப் பெருக்கம் செய்யுது. எங்க தொழிலுக்காக கடல் வாழ் உயிரின அழிப்பை செய்யக்கூடாது என்பதில் நாங்க உறுதியாக இருக்கிறோம்.

உங்கள் தொழில் வளம் எப்படி இருக்கு? உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

எங்க தொழில் நல்லாதாங்க போகுது. ஆனா, சிறு சிறு தடங்கலும் இருக்கு. குறிப்பிட்டுச் சொல்லணும்னா அடையாள அட்டை பிரச்சினை. ஆண்களுக்கு இருப்பதுபோல் எங்களுக்கு அடையாள அட்டை இல்லை. அவர்கள் மீனவர் அடையாள அட்டை வைத்திருப்பதால் நிம்மதியாக தொழில் செய்ய முடிகிறது. ஆனால், எங்களுக்கென்று தனியாக அடையாள அட்டை இல்லை. இதனால், 21 தீவுகளில் உள்ள வனத் துறையினர் கடல் பாசி அறுக்க தடை விதித்ததோடு மட்டுமின்றி அபராதமும் விதிக்கிறார்கள். இதற்கு அரசு ஒரு தீர்வு செய்து தரணும். சுதந்திரமாக தொழில் செய்ய முடிந்தால் எங்களால் இன்னும் சுயமாக அதிகம் சம்பாதிக்க முடியும். இப்ப எங்க 'மன்னார் வளைகுடா பாசி சேகரிக்கும் பெண்கள் கூட்டமைப்பு' மூலம் கடல் பாசி சேகரிக்கும் பெண்களுக்கும் பயோமெட்ரிக் அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்திருக்கிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புறோம்.

அதேபோல, நாங்க சேகரிச்சு தர பாசியை மீனவர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் சேகரித்து லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால், கடலில் கஷ்டப்பட்டு இறங்கி பாசி சேகரிக்கும் எங்களுக்கு பெரிய லாபம் ஏதுமில்லை. இதுவே அரசாங்கம், தீவு பகுதியிலேயே ஒரு பிளான்ட் தொடங்கி எங்ககிட்ட இருந்து பாசியை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்தா எங்களுக்கு நேரடி வருமானம் குறிப்பிடும் அளவுக்கு கிடைக்கும்.

அதுமட்டும் இல்லீங்க, மீன் பிடி தடைக் காலத்துல ஆண்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதுபோல கடல் பாசி சேகரிக்கும் எங்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்த விருது என்ன மாதிரியான ஊக்கத்தை அளித்திருக்கிறது?

நிச்சயமாக நல்ல ஊக்கம் தருது. எந்த ஒரு வேலைக்கும் அங்கீகாரம் கிடைக்கும்போது அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும்கிற உத்வேகம் பிறக்கும். அதுமாதிரி எங்கள் பெண்கள் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த கவுரவம் இது. கடல் தான் எங்க தொழில் ஆதாரம். அந்தக் கடலை பாதுகாப்பதும் நாங்களே. நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப பார்த்ததைவிட இப்போ பவளப் பாறைகள் ரொம்ப உயரமா நிறைய வளர்ந்திருக்கு. இதுக்கு எங்க பங்களிப்பும் ஒரு காரணம். இயற்கை வளத்தை பாதுகாக்க மெத்த படிக்கணும்னு அவசியம் இல்ல. அடிப்படை அறிவு இருந்தா போதும். எங்க அறிவுக்கு எட்டினது நாங்க ஒரு குழுவா சேர்ந்து செஞ்சோம். இன்னிக்கு அதற்கான பலன் கையில் கிடைச்சிருக்கு. இப்ப இந்த விருதோட ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிச்சிருக்காங்க. அதை குழு பெண்கள் நலனுக்காகவும் எங்க சின்னப்பாலத்துல உள்ள பள்ளிக்கூடத்துக்கு மேற்கூரை அமைப்பதற்காகவும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

நாங்க ஒன்றா இருந்து இன்னும் சாதிப்போம். இயற்கையை பாதுகாப்போம்!

மீனவப் பெண்களை ஒருங்கிணைத்து இயற்கை வளத்தை பேணி, தொழில் முன்னேற்றத்துக்கும் வழி செய்து சின்னப்பாலத்தில் இருந்து விருது பெற அமெரிக்கா சென்றுள்ள லட்சுமிக்கு யுவர் ஸ்டோரியின் சபாஷ், சல்ய்யூட். Seacology Award