தன் கிராமத்து பெண்களை சிறு தொழில் புரிய ஊக்குவித்து, தொழில்முனைவர்கள் ஆக்கிய காஞ்சிபுரத்தை சேர்ந்த சாந்தா!

1

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளின்படி, பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவருகிறது. இந்த வீழ்ச்சி குறிப்பாக ஊரக இந்தியாவில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் பணிக்கு செல்வது, 2005இல் 49 சதவீதமாக இருந்தது. தற்போது அது 36 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயதாகும் சாந்தா இந்த பிரச்சனையை எதிர்த்து தொடர்ந்து வீருடன் போராடி வருகிரார். 

வறுமையில் சிக்கித்தவித்த குடும்பத்தில் பிறந்த சாந்தாவிற்கு இளம் வயதிலேயே திருமணம் முடித்துவிட்டனர். திருமணத்திற்கு பிறகு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோடப்பட்டினம் என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்த சாந்தா, வறுமையில் வாடும் தனது குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்ல முடிவெடுத்தார். வேலைக்கான போதிய கல்வி தகுதி இல்லையென்றாலும் வேருவழியின்றி இந்த முடிவெடுத்தார். 

தனது ஊரில் உள்ள அரசு அலுவலகத்தில் தற்காலிக பணிகளை செய்யத்தொடங்கினார் அவர். பேருந்து கட்டணத்துக்கான வருமானம் மட்டுமே அவருக்கு அந்த பணியில் கிடைத்தது. ஆனால் தனது திறனையும், திறமையும் அங்கே வளர்த்துக்கொள்ள அந்த வேலை அவருக்கு உதவியது. 

அந்த நேரத்தில், சுய உதவி பெண்கள் குழுவை பற்றி கேள்விப்பட்ட சாந்தா, நுண்கடன் வசதிகள் பற்றி அறிந்து கொண்டு தனது வறுமையை வெல்ல வழி தேட புறப்பட்டார். சுய உதவி குழுவில் உள்ள ஒவ்வொரு நபர் செய்யும் முதலீட்டுக்கு சமமான நிதியை வங்கிகள் கடனாக அளிக்கும் அதுவும் குறைந்த வட்டிவிகிதத்தில். இதற்கு அந்த குழு, ஒரு நல்ல தொழில் ஐடியாவை வங்கியிடம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வங்கிகள் கடன் அளிக்கும். 

சாந்தா இது போன்ற குழுவை அமைக்க தனக்கு தெரிந்த பெண்களிடம் சேரச்சொல்லி கேட்டுக்கொண்டார். ஆனால் பலரும் வறுமையின் காரணமாக இதில் சேருவது கடினமாக இருந்தது. விடாமுயற்சியின் பயனாக இரண்டு ஆண்டுகள் கழித்து 20 பெண்கள் அடங்கிய குழுவை அமைத்தார் சாந்தா. ஆளுக்கு 10 ரூபாய் முதலீடு செய்ய முன்வந்தனர். 

“நான் இந்த முயற்சியில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். என் கிராமத்தில் இருந்து இதை தொடங்க ஆசைப்பட்டேன்,” என்று சாந்தா பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார். 

சாந்தா அமைத்த குழு, பசுக்கள் வாங்கி அதில் பால் விற்பனையில் ஈடுபட்டனர். வங்கியும் இவர்களது முயற்சியில் நம்பிக்கை கொள்ள துவங்கியது. 

“இன்று வங்கிகள், ஆண்கள் மீதுள்ள நம்பிக்கையை விட எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது,” என்கிறார் சாந்தா. 

2009 இல் ஒரு பெரிய வெற்றி சாந்தாவை நோக்கி வந்தது. சென்னையை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் தங்களது பேக்கிஜிங் பணியை கொடுக்க ஒரு குழுவை தேடிக் கொண்டிருந்தார். அந்த வாய்ப்பு சாந்தா குழுவிற்கு வந்தது. இருப்பினும் அந்த பணியை செய்ய இடம் தேடுவதற்கும், குழு உறுப்பினர் பெண்களை அதை செய்ய ஒப்புக்கொள்ள வைக்கவும் பல போராட்டங்களை சந்தித்தே  வெற்றிப்பெற்றார் சாந்தா. 

இன்று, 26 பெண்கள் சேர்ந்து, பேக்கேஜிங் யூனிட் ஒன்றை நடத்தி அதில் சுமார் 5000 பைகளை ஒரு வாரத்தில் பேக் செய்கின்றனர். வருமானத்துடன், திறனையும் வளர்த்து கொண்ட இந்த பெண் தொழில்முனைவோர்கள் தங்களது வறுமையை ஒழித்தும் சமூகத்தின் பல கொடுமைகளை களையவும் தங்கள் வழியில் வெற்றிகரமாக பயணிக்கின்றனர். சாந்தா இந்த குழுவின் ஊக்கமிகு சக்தி. அருகாமை கிராமங்களில் வாழும் பெண்களையும் தங்களை போன்று சுய உதவி குழுக்கள் அமைத்து தொழில் புரிய உதவியும் வருகிறார். 

கட்டுரை: Think Change India