பெட்ரோல் பங்க், விமான நிலையங்களில் இன்று நள்ளிரவு முதல் பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது!

0

ரூ. 500, ரூ. 1000 மதிப்புள்ள நோட்டுகள் இனி சட்டப்பூர்வமாக செல்லத்தக்கவையல்ல என்று அறிவித்தபிறகு, குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு பழைய நோட்டுகள் செல்லும் என அரசு விதிவிலக்கு அளித்து இந்த பழைய நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தன. இவ்வாறு செல்லத்தக்க பிரிவுகள் குறித்த காலவரையை அரசு அவ்வப்போது நீட்டித்து வந்தது. தற்போது சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கும் மட்டுமே பழைய ரூ.500 நோட்டுகள் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பண நோட்டுகளை தயாரிப்பது, அனுப்பி வைப்பது, பங்கீடு செய்வது ஆகிய செயல்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அதிகமான ரொக்கம் நடைமுறையில் தொடர்ந்து உலவி வருகிறது. டிஜிட்டல் முறையிலான பரிமாற்றமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறியுள்ளது. இவை வரும் நாட்களில் மேலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படும் என்று எதிர்பார்க்கப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 

பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளிடையேயும் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய்-எரிவாயு விற்பனை மையங்கள் டிஜிட்டல் முறையில் தொகையை பெறுவதற்கு சிறப்பாக தகுதி பெற்றுள்ளன என்பதையும் காண முடிகிறது. 

எனவே, 2016 டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவிலிருந்து பழைய ரூ. 500 நோட்டுகளை பெறுவதற்கென விலக்கு அளிக்கப்பட்டிருந்த பொதுத்துறை எண்ணெய்-எரிவாயு விற்பனை மையங்கள், இந்த விதிவிலக்குப் பட்டியலிலிருந்து நீக்கப்படும். எனினும் பழைய ரூ.500 நோட்டுகளை பெறுவதற்கான விதிவிலக்குப் பட்டியலில் சமையல் எரிவாயு தொடர்ந்து நீடிக்கும் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதைப் போன்றே, விமானப் பயணத்திற்கான பயணச்சீட்டுகளை வாங்குவதும் இந்த விதிவிலக்குப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. பணமல்லாத/ டிஜிட்டல் முறையில் தொகையைப் பெறுவதற்கான வசதிகளைக் கொண்டதாக விமான பயணச்சீட்டுகளுக்கான கவுண்ட்டர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் சட்டபூர்வமான பணத்தை கொடுத்தோ அல்லது பணமல்லாத வகையிலோ தொகையை செலுத்துவதற்கு போதுமான கால அவகாசம் பயணிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனவே, இன்று நள்ளிரவிலிருந்து பழைய ரூ. 500 நோட்டுகள் மூலம் விமானப் பயணச் சீட்டுகளை வாங்குவதற்கான அனுமதி விதிவிலக்கு பட்டியலிலிருந்து நீக்கப்படும். ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த இதர பிரிவுகள் அத்தகைய அறிவிப்புகளின் அடிப்படையில் பழைய ரூ. 500 நோட்டுகளை ஏற்றுக் கொள்வது தொடரும் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.