அஸ்பாடா நிறுவனத்திடம் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி பெற்றது சென்னை WayCool நிறுவனம்! 

0

SunnyBee என்ற பெயரில் இயங்கும் WayCool Foods and Products என்ற நிறுவனம் 2.7 மில்லியன் அமெரிக்க டாலர் சிரீஸ் ஏ நிதியை, அஸ்படா இன்வெஸ்மெண்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதை அறிவித்துள்ளது. ஜூலை 2015-ல் தொடங்கிய இந்நிறுவனம், பழங்கள் மற்றும் காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று சிறு வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்கள், சமையற்கூடங்களுக்கு விற்பனை செய்கிறது. ஹைப்ரிட் மாடலில் இயங்கும் இந்த நிறுவனம் உற்பத்தி மற்றும் சப்ளை வளையத்தில் நேரடியாக இருமுனைகளை இணைத்து இயங்குவதால் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் பெற்று வருகிறது. 

WayCool, ஒரு முழுமையான வர்த்தகத்தை உற்பத்தியாளர் முதல் வாடிக்கையாளர் வரை கொண்டு செல்வது அதன் சிறப்பு. வாடிக்கையாளர்களுக்கு ப்ரெஷ்ஷான காய்கறிகள், மற்றும் பழங்களை குறைந்த நேரத்தில் விளைநிலத்தில் இருந்து கொண்டு சேர்க்கிறது. 

‘அஸ்பாடா இன்வெஸ்மெண்ட்’ நிறுவனம் இந்தியாவில் உள்ள பிரபல வென்ச்சர் கேப்பிடல் நிறுவனமாகும். குறிப்பாக விவசாய பொருட்கள் விற்பனை, நிதி சம்மந்தப்பட்ட சேவைகள், கல்வி, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. அதன் படி, WayCool நிறுவன பணிகளை கூர்ந்து ஆராய்ந்து, அவர்களின் சந்தை மாதிரி, வர்த்தக வழிமுறைகளை நன்கு ஆய்வு செய்த பின்னர், அதில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளனர். 

WayCool இணை நிறுவனர் சஞ்சய் தாசரி பேசுகையில்,

“பழங்கள், காய்கறிகள் சந்தையை ஒழுக்குப்படுத்தி, ஒருங்கிணைக்க அதிக வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளது. இத்துறையில் பல நிறுவனங்கள் இருப்பினும், எங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தது எங்கள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறது. முதலீடு குறித்து மகிழ்ச்சி அடைவதோடு, இது தொடக்கம் மட்டுமே மேலும் அஸ்பாடா உடன் தீவிரமாக செயல்படவேண்டும் என்று எண்ணுகிறோம். இதன் மூலம் எங்களின் கனவுகளை நினைவாக்க முனைப்புடன் செயல்படுவோம்,” என்றார்.

WayCool நிறுவனம் பெற்றுள்ள இந்த நிதியை கொண்டு தொழில்நுட்ப தளத்தை மேலும் கட்டமைக்கவும், சப்ளை செயினில் உள்ள குறைபாடுகளை களைந்து, தங்களின் கொள்முதல் ஆதாயங்களை விரிவுபடுத்தவும் உள்ளது. மேலும் நிறுவனத்தின் கட்டமைப்பையும் பெருக்கி, மற்ற தென்னக நகரங்களில் தங்களின் சேவையை தொடங்கவிருக்கின்றனர். கூடுதலாக அஸ்பாடா முதலீடு செய்துள்ள மற்ற நிறுவனங்களோடு இணைந்து சில பணிகளை செய்யவும் WayCool திட்டமிட்டுள்ளது.  

தற்போது WayCool நிறுவனத்தில் சுமார் 180 ஊழியர்கள், இந்தியா முழுதும் பணிபுரிகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில், 350 டன்களுக்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தியுள்ளனர். பலவாரியான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இவர்கள், 1500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை ஆர்டர்கள் எடுக்கின்றனர். சிறு வணிகர்கள், பெரிய ஹோட்டல்கள், சில்லறை கடைகள் என்று பல வாடிக்கையாளர்களை கொண்டுள்ளனர். நிறுவனத்தின் முக்கிய இலக்கான, சிறு விவசாயிகளுக்கு கைக்கொடுத்து அவர்களின் விளைப்பொருட்களை நல்ல லாபத்தில் விற்றுத்தரவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். அதற்காக தங்களின் கொள்முதலில் கவனம் செலுத்தி திட்டமிட்டு செயல்படுகின்றனர். 

WayCool-ல் முதலீடு செய்துள்ளது பற்றி பேசிய அஸ்பாடா’வின் தலைமை நிதி அதிகாரி குஷால் அகர்வால்,

“பொதுவாக இந்தியாவில், விவசாயப் பொருட்கள் உற்பத்தியில், பொருட்கள் பல கட்டங்களில் கைமாறி, வாடிக்கையாளர்களை வந்தடைவதற்குள் அதிகமான விரயம் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் மற்றும் தரமில்லா பொருட்கள் என்ற நிலைதான் பெரும்பாலும் நிலவுகிறது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வாக WayCool இயங்குவதால், விளைச்சலுக்கு பின்னான விற்பனை சங்கிலியில் ஒரு சரியான பாலமாக அமைந்து விவசாயப் பொருட்களை வாடிக்கையாளர்களுடன் சரியான சமயத்தில், தேவையான அளவிற்கு, விலைக்கு, தரமான பொருளை கிடைக்க வழி செய்கிறது. இது போன்று முனைப்புடன் செயல்படுவோர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் விவசாய பொருட்களின் வர்த்தக சங்கிலியை வலுப்படுத்துவதால் செலவும் குறைக்கப்பட்டு தரமான பொருட்கள் சென்றடைய உதவுவதால் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்றார். 
 

முதலீடு பெற்றதை பற்றி WayCool-ன் மற்றொரு இணை நிறுவனர் கார்த்திக் ஜெயராமன் கூறுகையில்,

“பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த துறையில் பணிபுரிய தனியார் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அதே சமயம் வர்த்தக சங்கிலியில் லாபத்துடன் செயல்படவும் வாய்ப்பு உள்ளது. அஸ்பாடா உடனான இந்த கூட்டணி, எங்களின் செயல்பாடுகளுக்கு மேலும் வலு சேர்த்து, இந்திய விவசாய வர்த்தக சங்கிலியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.”  

SunnyBee ( WayCool Foods and Products) தொடங்கிய கதை மற்றும் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள: விவசாயிகளும், விற்பனையாளர்களும் பரஸ்பர இலாபம் காண உதவும் 'சன்னிபீ'