2017: சமூகத்தின் வேரில் இருந்து மாற்றத்தை உண்டாக்கும் பஞ்சாயத்து தலைவர்கள்!

இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்களை, நகரங்களுக்கு இணையாக வசதிகளையும் பெற்று வளர்ச்சிப் பெற வேண்டும் எனப் போராடி அதில் வெற்றியும் கண்டுள்ள சில பஞ்சாயத்துத் தலைவர்களின் சாதனைக் கதைகள்!

0

கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் என சிறிய பதவி கிடைத்து விட்டாலே கிடைத்தவரை அரசுப் பணத்தை சுருட்டி தங்களது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து வைக்கலாம் எனக் கருதாமல், தங்களது பொறுப்பை உணர்ந்து கடமையைச் சரிவர செய்பவர்கள் தான் உண்மையான தலைவர்கள்.

அப்படியாக அதிகாரிகளால், இயற்கையால் என பலதரப்பட்ட காரணங்களால் புறக்கணிக்கப்பட்ட தங்களது கிராம மக்களின் நலனுக்காக, சொந்தக் காசையும் செலவிட்டு போராடி, அரசின் உதவியைப் பெற்றுத் தந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஏராளம். அவர்களில் கடந்தாண்டு ஊடக வெளிச்சம் கிடைக்கப் பெற்றவர்கள் சிலர்.

இதோ, அப்படிப்பட்ட சில பஞ்சாயத்து தலைவர்கள் பற்றிய செய்தித் தொகுப்பு உங்களுக்காக...

மது குடிக்க தடை விதித்த ஜப்னா சௌஹான்

ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தர்ஜுன் என்ற கிராம பஞ்சாயத்து தலைவி ஜப்னா சௌஹான். 22 வயதே ஆன இவர் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த வயது பஞ்சாயத்து தலைவர் ஆவார்.

ஏழ்மையான குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்துள்ள ஜப்னா, கல்லூரி படிப்பை முடித்த கையோடு சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஒரே வருடத்தில் தனது ஊரில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்த ஜப்னாவை பஞ்சாயத்து தலைவியாக்கி மக்கள் அழகு பார்த்துள்ளனர்.

பஞ்சாயத்து தலைவியானதும் தனது கிராம மக்கள் மது அருந்த தடை விதித்து அதிரடியாக ஒரு புதிய சட்டத்தை அவர் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் எதிர்ப்பை சந்தித்தாலும் பின்னர் மக்களால் இந்தத் திட்டம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

9 குளம் வெட்டிய சுமதி

சென்னைக்கும் திருவள்ளூர்க்கும் இடையே உள்ளது அதிகத்தூர் கிராமம். மழைக்காலத்தில் வெள்ளத்தில் மிதப்பதும், கோடையில் தண்ணீருக்கு காய்வதும் என சென்னை குழம்பிக் கொண்டிருக்க, அதிகத்தூரோ தண்ணீர் நிறைவு கிராமமாக தனித்துவத்துடன் மிளிர்கிறது.

ஊரைச் சுற்றி இருக்கும் ஏரிகளை சீரமைத்து, அதன் வழியாக போகும் கால்வாய்களை ஒழுங்குப்படுத்தி, கால்வாய்களுக்கு இடையில் தடுப்பணைகளை கட்டியுள்ளார் சுமதி. இதுதவிர கால்வாய்க்கு இடையில குளங்களையும் வெட்டியுள்ளார். ஊர்மக்கள் உதவியோடு சுமார் 9 குளங்களை வெட்டி கிராமத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துள்ளார். பஞ்சாயத்துத் தலைவி சுமதியைப் பற்றி இந்தச் செய்தியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்...

650 கழிவறைகள் கட்டிய மலர்க்கொடி

courtesy: IndiaSpend
courtesy: IndiaSpend

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது மேல்மருங்கூர் பஞ்சாயத்து. இதன் தலைவியாக கடந்த 2011-ல் பொறுப்பேற்றார் மலர்க்கொடி தனசேகர். அரசியல் தலையீடு, நிதி உதவிகள் மறுப்பு, என்று பல தடைகளை தாண்டி, தன் கிராமத்தில் சாலை வசதி, சுத்தமான குடிநீர் வசதி, கழிவறை வசதி என அனைத்தையும் அவர் செய்து காட்டியுள்ளார்.

மிகக் குறைந்த செலவில் ‘ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின்’ கீழ் 650 கழிவறைகள் கட்டி, தனது கிராமத்தை ஒரு சிறந்த முன்மாதிரி கிராமமாக மற்றவர்களுக்கு முன் உயர்த்திக் காட்டியுள்ளார் மலர்கொடி. கழிவறைகள் கட்ட ஆன செலவில், கிராமவாசிகள் கொடுக்க இயலாதவர்களுக்காக தன்னிடம் இருந்து 1 லட்ச ரூபாய் கொடுத்து செலவிட்டுள்ளார். இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

850 வீடுகள் கட்டிய ‘ஓடந்துறை’ சண்முகம்

கோவை மாவட்டத்தில் நீலகிரி மலைக்குக் கீழே 12 குக்கிராமங்ளை உள்ளடக்கிய பசுமையான கிராம பஞ்சாயத்து தான் ஒடந்துறை. இங்கு பத்து ஆண்டுகள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சண்முகம், தனது கிராமம் முன்னேற வேண்டும் என ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து, இன்று தேசிய அளவில் ஓடந்துறையை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருக்கிறார்.

இங்கு வாழும் மக்களில் 20 சதவீதத்தினர் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைகளாக இருந்ததால், அவர்கள் சரியான வீடுகள் இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான வீடுகள் கட்டித்தர சண்முகம் முயற்சித்தபோது, அதற்கு ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டன. ஆனால், தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி இன்று அவர்களுக்கென சுமார் 850 வீடுகளைக் கட்டித் தந்துள்ளார் சண்முகம். அவர் தாண்டி வந்த தடைகளையும், சோதனைகளை சாதனையாக்கிய கதையையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

எம்பிஏ படித்த முதல் பஞ்சாயத்து தலைவி 

ராஜஸ்தானின் டாங் மாவட்டத்தில் உள்ளது 'சோடா' எனும் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி சாவி ரஜாவத். படிப்பை முடித்ததும் கை நிறைய சம்பளத்துடன் பல்வேறு நிறுவனங்களில் இவருக்கு வேலை கிடைத்தது. ஆனால், சமூகத்தின் வேரில் இருந்து மாற்றத்தை உண்டாக்க விரும்பிய அவர், அதற்காக களத்தில் இறங்கி செயல்படுவது என முடிவு செய்தார்.

அதன்படி, தனது வேலையை உதறிய சாவி, தனது கிராமத்திலேயே பஞ்சாயத்துத் தலைவி ஆனார். எந்தக் கட்சியையும் சாராத சாவி, தனது கிராமத்தில் நல்ல குடிநீர், சூரிய மின்சக்தி, சாலை வசதிகள், கழிப்பறைகள் மற்றும் ஒரு குளம் என அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே தனக்கே உரிய பாணியில் தன் கிராமப்புற தூய்மைக்கு வழி செய்திருக்கிறார் சாவி. இந்தியாவின் முதல் எம்பிஏ படித்த பஞ்சாயத்துத் தலைவி என்ற பெருமையைப் பெற்றுள்ள சாவியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள..