இந்தியாவின் சிறந்த தொழில்முனைவராக தேர்வாகி பிரதமரை சந்திக்க உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த 21-வயது இளைஞர்!

2

ஜல்பாய்குரியில் ’ஹோப் டீ கார்டன்’ என்கிற பெயரில் ஒரு சிறிய டீ எஸ்டேட் கிராமத்தில் ஒரு சிறுவன். அந்த கிராமத்தில் தொடர்ந்து வாழவேண்டுமெனில் எந்தவித கனவு குறித்தும் கவலைப்படக்கூடாது என்று அச்சிறுவனிடம் கூறினார்கள். ஆனால் அச்சிறுவன் மூன்று வகையான போக்குவரத்தைப் பயன்படுத்தி 108 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு செல்வார் என்றோ, தனது பயணத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார் என்றோ தனது திறமைதான் தன்னுடைய விதியை தீர்மானிக்குமே ஒழிய தன்னைச் சுற்றியுள்ள சூழல் அல்ல என்பதை அறிந்திருப்பார் என்றோ அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இன்று அவரது கண்டுபிடிப்பிற்காக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் அவரை முன்னணி இளம் தொழில்முனைவோர் என பாராட்டி முதலிடத்திற்கு தேர்வு செய்துள்ளது. இன்னும் சரியாக மூன்று மாதத்தில் பிரதமர் மோடி அவரை பாராட்ட உள்ளார். அவர்தான் அப்கார்டை (UpCart) உருவாக்கிய அமித் அகர்வால்.


இளம் வயது வாழ்க்கை மற்றும் வளர்ச்சி

நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தார் அமித். இருந்தும் பாதுகாப்பான ஒரு பணியில் சேருவதை மட்டுமே அவர் இலக்காக கொண்டிருக்கவில்லை. பின்னகுரி என்கிற இடத்திலுள்ள பள்ளியில் படித்தார். இந்தப் பள்ளி 108 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. காலை ஐந்து மணிக்கு கண் விழிப்பார். பேருந்தில் பள்ளிக்குச் செல்வார். பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல ஒரு ஜீப்பில் செல்லவேண்டும். அந்த ஜீப்பில் ஏறும் இடத்திற்குச் செல்ல அவரது அப்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் செல்வார். ”அங்கு வாழ்க்கை சவால் நிறைந்ததாகவும் பரிதாபகரமாகவும் இருந்தது. என்னுடைய அம்மாவும் அப்பாவும் வாழ்க்கையை நடத்த அதிகம் போராடினார்கள். என்னுடைய எதிர்காலம் குறித்த அவர்களது கனவுதான் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்தது.” என்றார்.

இறுதியில் சில்லிகுரி என்கிற பகுதிக்கு மாறினார்கள். அங்கிருந்த டெல்லி பப்ளிக் ஸ்கூலில் சேர்ந்தார் அமித். குழந்தைப் பருவத்தில் கூச்ச சுபாவமுள்ளவராக தனிமையிலேயெ இருந்தார். சிறப்பான வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ளவேண்டுமெனில் மெட்ரோ நகரத்தில் எவ்வாறு படிக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டு விரைவில் மாறினார்.

”அவர்கள் நினைத்தது தவறு என்று நிரூபிக்க விரும்பினேன். ஆகவே நான் கடுமையாக உழைத்து 91 சதவீதம் எடுத்தேன். பொதுவாக எல்லோரும் எதைத் தேர்ந்தெடுப்பார்களோ அவ்வாறு இல்லாமல் Inspiria Knowledge Campus for BBA-வில் சேர்ந்தேன்.” என்றார்.

அவர் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு வழக்கமான வார இறுதி நாள். அன்று திடீரென்று தொழில்முனைவிற்கான எண்ணம் உதித்தது. அமித்தின் அம்மா ஒரு பயணத்தை முடித்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். அவரால் அவரது பெட்டிகளை மாடிக்கு தூக்கிச் செல்ல முடியவில்லை. அமித்தின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது.

”அந்த பெட்டிகளை தூக்குவது எனக்கும் சிரமமாகவே இருந்தது. உடனே ரிக்ஷாகாரரை அழைத்து எங்களது சாமான்களை எங்களது தளத்தில் வைக்கச் சொன்னோம். இந்த சிறிய வேலைக்கு அதிகமானத் தொகையை செலுத்தினோம். பெட்டிகளுக்கு சக்கரம் இருப்பது சாத்தியப்படும்போது தரையிலும் மாடிப்படிகளிலும் உருளும் விதத்தில் ஏதாவது ஒன்றை ஏன் கண்டுபிடிக்க முடியாது என்று தோன்றியது.” என்றார்.

வெகு விரைவில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு

”நான் இதைச் செய்யவேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வந்தனர். அமைதியாக அவர்களை எதிர்த்துப் பேசாமல் இருப்பதுதான் என்னுடைய அணுகுமுறை. என்னுடைய பணியை சிறப்பாகச் செய்து அதையே என்னுடைய பதிலாக முன்வைத்தேன்.” கண் இமைக்கும் நேரத்தில் மணித்துளிகள் நாட்களாகவும், நாட்கள் வாரங்களாகவும் மாறி அந்த வெற்றிகரமான தருணத்தை அடைந்தேன். இறுதியில் உறுதியான ஒரு தயாரிப்பாக அப்கார்ட் (UpCart) உருவானது.

அப்கார்ட் சுமைகளை மாடிக்கு எடுத்துச் செல்ல உதவுவதுடன் பிற பயன்பாட்டிற்கும் உகந்ததாக உள்ளது. அதிலுள்ள கைப்பிடியானது கடினமாக இல்லாமல் எளிதாக பயன்படுத்தும் விதத்தில் 360 டிகிரி சுற்றும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணத்தின்போது நீங்கள் எதையும் பைகளிலிருந்து எடுக்கவேண்டாம் என்று நினைக்கையில் அதற்கேற்றவாறு இந்த தள்ளுவண்டிக்குள் இருக்கும் அடுக்குகளை சிறிய அலமாரிகள் போலவே பயன்படுத்திக்கொள்ளலாம். மாடிப்படிகள் அல்லது பாறைபோன்ற கடினமான நிலப்பரப்பு என எப்படிப்பட்ட பகுதியிலும் உருண்டு செல்வதற்கு இதன் ட்ரை-ஸ்டார் வீல் மெகானிசம் உதவும். மொத்தம் ஆறு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் கைப்பிடியை லாக் செய்வதற்கு அதிலுள்ள பட்டன் உதவும்.

பானங்களை வைக்கும் வசதியுடன் கூடிய லேப்டாப் ட்ரே, ஒரு பெரிய சலவை பை, இரண்டு ஷூ பைகள் உள்ளிட்ட நான்கு அலமாரிகள் அதனுள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அதன் அடிப்பகுதியில் சுருங்கி மூடப்படும் விதத்தில் உள்ளது. உள்ளிழுக்கப்படும் விதமானது வலுவான இருப்பதனால் அலமாரிகள் உறுதியாக இருக்கும். சில வினாடிகளில் உடனடியாக சுருங்கி மெல்லிய பைக்குள் வைக்கும்விதத்தில் அமைந்திருக்கும் இந்த மடிக்கும் இயந்திரநுட்பமானது கொண்டு செல்வதற்கு எளிதாக இருப்பதுடன் குறைவான இடம் மட்டுமே தேவைப்படும்.

இதனுள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு அமைப்பு பயனாளியின் தொலைபேசியுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். இதனால் பயனாளிகள் தங்களது சாமான்களை எளிதாக கண்காணிக்க முடியும். மேலும் இதனுள் அருகாமையில் இருப்பதை உணர்த்தக்கூடிய உணர்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பயனாளியின் பெட்டிகள் பொருட்களை கொண்டு செல்லும் சுழல் மேடையை அடைந்ததை பயனாளிக்கு உணர்த்தும்.

அவரது திட்டம் முறையாக உருவெடுக்கத் துவங்கியபோது ஒரு விதமான அச்ச உணர்வும் இருந்தது. அவர் தங்கிய பகுதி மற்றும் அவரது பின்னணி ஒரு நிறுவனத்தைத் துவங்க அவருக்கு ஒரு தடையாக இருக்கும் என பயந்தார். மேலும் இளம் வயதில் ஒரு தொழில்முனைவில் ஈடுபடுவது அவரது குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிரானது. “அப்கார்டிற்கு அங்கீகாரம் கிடைத்தே ஆகவேண்டும் என்கிற மன உறுதியும் அர்ப்பணிப்பும் அனைத்து பயங்களையும் கடந்து செல்ல உதவியது.” என்றார்.


தயார்நிலை

2016-ம் ஆண்டில் NASSCOM E-Summit-ல் வெற்றி பெற்றார். செலவை மனதில் கொண்டு அவரது தயாரிப்பை மேம்படுத்த R&D துவங்கினார். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்காக நடத்தப்பட்ட தேசிய தொழில்முனைவோர் வாரத்தில் அவரது கல்லூரியின் மூலம் பங்கேற்றார். தேசிய தொழில்முனைவோர் நெட்வொர்க் (GEN) இந்தத் தளத்தை வழங்கியது.

மூன்று வாரங்கள் அனைவரது முன்னிலையிலும் தொகுத்து வழங்குதல், நேர்காணல் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்தியா முழுவதிலிருந்தும் பங்கேற்ற 21,08,000 பங்கேற்பாளர்களில் 112-வது இடத்தை பிடித்தார் அமித்.

”கூட்டத்தில் பேசுவது என்பது எனக்கு ஒரு சவாலாகும். எனக்கு இது எப்போதும் பயத்தை உண்டாக்கும். இந்த பயத்தை போக்கி என்னை தயார்படுத்திக்கொள்ள இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்.” என்று நினைவுகூர்ந்தார்.

”அடுத்த வாரம் அமித்திற்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு அதிகாரப்பூர்வமான கடிதம் கிடைத்தது. அதில் செப்டம்பர் 28-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் பிரதமர் ‘இந்தியாவின் 10 முன்னணி இளம் தொழில்முனைவோரை’ பாராட்ட உள்ளார் என்றும் அதில் அமித்தும் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “இறுதி தரவரிசையைத் தேர்ந்தெடுக்க அடுத்த பத்து நிமிடங்களில் ஆன்லைன் குழு நேர்காணல் இருப்பதாக அமைச்சகத்திலிருந்து திடீர் அழைப்பு வந்தது. பதட்டத்துடன் லாக் இன் செய்து சிறப்பாகவே நேர்காணலை சந்தித்தேன். மறுநாள் காலை 9.33 மணிக்கு நான் முதலிடத்தை பிடித்துவிட்டதாக தெரிவித்து என்னை வாழ்த்தி ஒரு அழைப்பு வந்தது.” என்று நினைவுகூர்ந்தார்.

இதனிடையில் அமைச்சகத்திலிருந்து மண்டல அளவிலான பாராட்டுடன் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதாக உறுதியும் அளிக்கப்பட்டது. தயாரிப்பு தயாராகி காப்புரிமைக்காக அனுப்பப்பட்டுள்ளது. காப்புரிமை கிடைத்ததும் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளார் அமித். முதலில் சந்தையிலிருந்து கிடைக்கும் பதிலை ஆராய உள்ளார். அதன்பின் நடவடிக்கை துவங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் விற்பனையை துவங்க திட்டமிட்டுள்ளார். இதன் விலை சுமார் 2,000 ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் இந்தப் பிரிவில் பலர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதில் ஒருவரது தயாரிப்பின் பெயரும் அமித். எனவே அந்தப் பெயரை தீர்மானிப்பதற்கு முன் அந்தக் குழுவை அணுகி அவர்களது அனுமதியை பெற்றார். இறுதியாக பலரது தயாரிப்புகள் மிகப்பெரிய அளவில் இயந்தரமயமாக இருக்கும் நிலையில் அமித்தின் அப்கார்ட் ஒரு ஸ்மார்ட் தயாரிப்பு என்பதால் நிச்சயம் தனித்து விளங்கும் என்று நம்புகிறார் அமித்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா