அஞ்சேல் 14 | அதீதத்தையும் அணுகு - கலை இயக்குநர் ஜெயஸ்ரீ

'பிசாசு', 'சார்லி' மூலம் கவனம் ஈர்த்ததுடன், சமகால தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரே பெண் கலை இயக்குநர் ஜெயஸ்ரீ பகிரும் அனுபவக் குறிப்புகள்!

1

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

கலை இயக்குநர் ஜெயஸ்ரீ
கலை இயக்குநர் ஜெயஸ்ரீ
'உனக்கு சினிமா வேண்டாம். நாலு பேர் தப்பா பேசுவாங்க. சரியான வருமானம் இருக்காது' - என் சினிமா ஆர்வத்தை வெளிப்படுத்தியபோது கிடைத்த அறிவுரைகள் இவை. என் திரைப் பயணமே அக்கறையுடன் கூடிய தடையில் இருந்துதான் தொடங்கியது.

என் குடும்பத்தினருக்குத் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டது சினிமா. அப்பா மத்திய அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், அம்மா இல்லத்தைக் கவனிப்பவர், அண்ணன் ஓட்டல் துறை. எனக்குக் கல்லூரிக் காலத்திலேயே சினிமா மீது ஆர்வம் மிகுந்திருந்தது. ஆனால், முறைப்படி படித்துவிட்டு திரைத்துறையில் நுழைவதற்காக வழிகாட்டுவதற்கு எவருமே இல்லை. இளங்கலை அறிவியல் முடித்தேன். அடுத்து என்ன செய்வது என்பதில் பெரும் குழப்பம். அப்போது, கல்லூரி நண்பர் ஒருவர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் குறித்து சொன்னார். அங்கு படிக்க அப்பாவிடம் கேட்டேன். அவர் 'முடியவே முடியாது' என்று மறுத்துவிட்டார். ஆனால், என் அளவுகடந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்டார். 

'சரி, நான் ஜர்னலிஸம் படிக்கிறேன்' என்றேன். எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் விண்ணப்பித்தேன். 'நீ அப்ளை பண்றது வேஸ்ட். எப்படியும் நுழைவுத் தேர்வில் உன்னால் தேற முடியாது' என்று என் மீதான உறுதியான நம்பிக்கையில் அப்பா கண்டுகொள்ளவில்லை. ஆனால், நான் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டேன். ஒருவழியாக முதுகலை இதழியல் படிப்பில் சேர்ந்துவிட்டேன். அதில் சேருவதற்கு முக்கியக் காரணம், அந்தப் படிப்பில் ஒரு சப்ஜெக்டாக 'ஃபிலிம் ஸ்டடீஸ்' இருந்ததே.

திரைத்துறையை கவனிக்க ஆரம்பித்ததுமே ஒளிப்பதிவாளர் அல்லது கலை இயக்குநர் ஆக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டேன். முதுகலைப் படிப்பு முடித்ததும், விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த ஜெய் எனும் ஒளிப்பதிவாளரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர் என் ஆர்வத்தைக் கண்டுகொண்டு, 'உனக்கு ஆர்ட் டிபார்ட்மென்ட்தான் பொருத்தமாக இருக்கும். அதற்கே முயற்சி செய்' என்றார்.

எனக்கோ சினிமாவில் கலைப் பிரிவில் ஈடுபடுவதற்கு உதவக் கூடிய படிப்புப் பின்னணி எதுவுமே இல்லை. எனினும், வடிவமைப்புகள் குறித்த அடிப்படை புரிதல் ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு, நீண்ட நாட்கள் முயன்றதில் கலை இயக்குநர் ராஜீவனை அணுகினேன். 'நேரத்துக்குத் தூங்க முடியாது. எதிர்பார்க்கிற வருவாய் இருக்காது. நினைத்ததை உடனே செய்ய முடியாது. ஆனால், உறுதியோடு பொறுமையாக இருந்தால் இந்தத் துறையில் நிச்சயம் ஜெயிக்கலாம்' என்று எடுத்துச் சொல்லி உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 

'சிறுத்தை', 'நான் மகான் அல்ல' உள்ளிட்ட நான்கு படங்களில் அவருடன் பணிபுரிந்தேன். சினிமாவில் கலை இயக்கப் பிரிவின் பணிகள், பொறுப்புகள் குறித்து நிறையவே கற்றுக்கொண்டேன். எனினும், உதவியாளர்களில் நான் மட்டுமே பெண் என்பதால் யதார்த்த சிக்கல்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. அது இன்று வரை தொடர்கிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்புதான் எங்களுக்கு களத்தில் அதிக வேலை இருக்கும். நாங்கள்தான் இரவு பகலாக படப்பிடிப்புத் தளத்தை தயார் செய்வோம். அப்போது, பெண்களுக்கென தனி கழிவறை வசதி கூட இருக்காது. இது சாதாரணமான விஷயம் அல்ல; மிகப் பெரிய அவஸ்தை. இதுபோன்ற நிலை மாற வேண்டும். தற்போது, திரைத்துறையின் டெக்னீஷியன்களாக பெண்கள் வலம்வர ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியது உரியவர்களின் கடமை.
இயக்குநர் மிஷ்கின் உடன் பிசாசு படப்பிடிப்பில் ஜெயஸ்ரீ
இயக்குநர் மிஷ்கின் உடன் பிசாசு படப்பிடிப்பில் ஜெயஸ்ரீ

கலை இயக்குநர் ராஜீவனிடம் துறை சார்ந்த அடிப்படையை நிறைவாகக் கற்றுக்கொண்ட பின், கலை இயக்கத்தில் சிறந்து விளங்குவதற்கான சூழல் மும்பையில் கிடைக்கும் என்று அறிந்தேன். கலை இயக்குநர் சாபு சிரிலிடம் உதவியாளர் ஆக சேருவதற்கு முயற்சிக்க ஆரம்பித்தேன். அவருக்கு ஆறு மாதம் தொடர்ச்சியாக மெயில் அனுப்பினேன். வேலை நெருக்கடி காரணமாக, என் மெயிலை அவரால் கவனிக்க முடியவில்லை. ஏதேதோ வழிகளில் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். எல்லாமே தோல்வி. ஒருவழியாக அவரது தொலைபேசி எண்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு மும்பை புறப்படுவது என்று முடிவு செய்தேன். இந்தத் தகவலை வீட்டில் சொன்னபோது தயக்கம் காட்டினர்.

'உனக்கு அங்க வேலை கிடைச்சுடுச்சா? தங்குறதுக்கு எல்லா வசதியும் இருக்கா? நல்ல சம்பளம் கிடைக்குமா?' என அடுக்கடுக்கான அக்கறைமிகு கேள்விகள். பெற்றோரிடம் எடுத்துச் சொன்னேன். அவர்கள் என் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டனர். "சரி, உனக்கு 10 நாள் டைம் தர்றேன். மும்பை போயிட்டு வா. எதுவும் செட் ஆகலைன்னா கிளம்பி வந்துடு" என்று சொல்லி என் பயணத்துக்கு அப்பா ஒப்புக்கொண்டார். 

மும்பைக்கு சாபு சிரில் சாரை தேடிச் சென்றேன். அவரது நம்பருக்கு "சார், உங்களுக்கு ஆறு மாதமாக மெயில் பண்ணிட்டு இருக்கேன். உங்களைப் பார்க்க மும்பை வந்திருக்கேன்" என்று மெசேஜ் அனுப்பினேன். முதல் முறையாக அவரிடம் இருந்து வந்த ரிப்ளை "எங்கே?". அதற்கு, "உங்கள் வீட்டு வாசலில்" என்று பதிலளித்தான். அவர் உள்ளே வரச் சொன்னார். என்னிடம் பேசினார்.

"இந்தி தெரியுமா? மும்பைல தங்குற வசதி எல்லாம் இருக்கா? உனக்கு படப்பிடிப்பு நாட்களில் தினமும் ரூ.800 கிடைக்கும். ஓகேவா?" என்று கடகடவென சொன்னார் சாபு சிரில்.

எனக்கு இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதில் மட்டுமே கவனம். அவர் சொன்ன எல்லாவற்றுக்குமே எதுவும் யோசிக்காமல் சரியென தலையாட்டினேன்.

"ஒரு மணி நேரத்தில் கால் பண்றேன். நீங்க கிளம்பலாம்" என்றார். நான் அந்தப் பகுதியில் காத்திருந்தேன். அவரது முதன்மை உதவியாளர் சந்தோஷிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் ஒரு ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னார். கூகுள் மேப்பில் தேடிக் கண்டுபிடித்து அந்த இடத்துக்குச் சென்றேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். "இதான் கிச்சன். இதற்கு ப்ராப்பர்ட்டி மார்க் பண்ணணும். பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு சந்தோஷ் கிளம்பிவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாம உதவியாளரா சேர்ந்துட்டோமா? வேலை கிடைச்சிடுச்சா? இது உறுதிதானா? என்ற குழப்பத்துடன் அந்தப் பணியைத் தொடங்கினேன். அப்புறம்தான் தெரிந்தது அது ஷாரூக்கானின் 'ரா ஒன்' படப்பிடிப்பு என்று!

அது அற்புதமான அனுபவம். என் நம்பிக்கையைக் கூட்டிய நாட்கள் அவை. ஆயினும், நடைமுறைப் பிரச்சினைகள் மட்டுமே என்னைத் துரத்தின. படப்பிடிப்புக்குத் தேவையான ஒரு பொருளை 5 ரூபாய்க்கும் வாங்கலாம், 500 ரூபாய்க்கும் வாங்கலாம், 5,000 ரூபாய்க்கும் வாங்கலாம். புது ஊர் என்பதால் எங்கு போய் எப்படி வாங்குவது என்பதே தெரியாது. ஆனால், எல்லாவற்றையும் சரியான நேரத்தில் கச்சிதமாக செய்து முடித்தாக வேண்டும். இல்லையென்றால் பயங்கர சொதப்பல் ஆகிவிடும். இப்படி எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டும். எப்படி சமாளித்தேன் என்பதே எனக்குத் தெரியவில்லை.

எனக்கு எங்கிருந்து அப்படி ஓர் உத்வேகம் வந்தது என்றே இன்றுவரை கேள்விக்குறி. எந்த முன்னேற்பாடும் இல்லாமல் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் மும்பை கிளம்பினேன். எங்கெங்கோ தங்கினேன். சாபு சிரில் சாரிடம் வாய்ப்பும் கிடைத்தது. இப்போது அப்படி ஓர் அதீத நம்பிக்கை எனக்கு இருக்குமா என்றால் சந்தேகமே. என் கனவுத் தொழிற்சாலையில் ஈடுபட வேண்டும் என்ற தீராக் காதல், நான் தேர்ந்தெடுத்தது சரியான பாதைதான் என்பதை என் வீட்டாருக்கு நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஆகியவைதான் என்னை உந்தி மும்பை வரை தள்ளியது.

நம் வாழ்வில் சாதகமான திருப்புமுனை ஏற்படுவதற்கு சில நேரங்களில் நம்பிக்கை மட்டுமல்ல... அதீத நம்பிக்கையுடனும் அணுகுவது அவசியம் என்பதை உணர்ந்த தருணம் அது.
படப்பிடிப்புத் தளத்தில் கலை இயக்குநர் ஜெயஸ்ரீ
படப்பிடிப்புத் தளத்தில் கலை இயக்குநர் ஜெயஸ்ரீ

சரியாக 10 நாட்கள் 'ரா ஒன்' படப்பிடிப்பில் வேலை இருந்தது. "சார், நான் சென்னை கிளம்புகிறேன்" என்றேன். "சரி கிளம்பு" என்றார் சாபு சிரில் சார். எனக்கு மீண்டும் ஒன்றுமே புரியவில்லை. என்னை அவர் உதவியாளராக சேர்த்துக்கொண்டாரா இல்லையா என்பது அப்போதும் உறுதியாகத் தெரியவில்லை. சென்னை திரும்பிய பிறகு தினமும் அவருக்கு ரிப்ளையை எதிர்பார்க்காமல் மெசேஜ்களை அனுப்பினேன். ஒருநாள் அவரிடம் வந்த மெசேஜ்: ஹைதராபாத் புறப்பட்டு வரவும்.

உடனே கிளம்பினேன். அங்கு அதே 'ரா ஒன்' படத்துக்கான 20 நாட்கள் படப்பிடிப்பு. அங்கு மொழி தெரியாது. இடம் தெரியாது. சீனியர் சந்தோஷின் உறுதுணையுடன் சமாளிக்க முடிந்தது. அந்தப் படப்பிடிப்பில் ஒரே ஆறுதல் என்றால், தமிழ் பேசும் ஒரே நபராக ஒளிப்பதிவாளர் மணிகண்டன் சார் இருந்ததுதான்.

திரும்பவும் சென்னை வந்தேன். மீண்டும் மேசேஜ் அனுப்பினேன். "சார் நான் உங்க அசிஸ்டெண்ட் ஆயிட்டேனா? நான் என்ன பண்ணணும்?" என்று கேட்டேன். "ப்ளீஸ் ஷிஃப்ட்" என்று பதில் வந்தது. எப்படியோ வீட்டில் அனுமதி பெற்றுக்கொண்டு மும்பைக்கு மூட்டையைக் கட்டினேன். இரண்டரை ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன். 'சன் ஆஃப் சர்தார்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றினேன்.

'பெண் என்பதால் மட்டுமே பெரிய கலைஞர்களிடம் பணிபுரிய எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது, வேலை கற்றுக்கொண்ட பின் பட வாய்ப்புகளும் எளிதில் கிடைக்கிறது' என்ற பேச்சுகளை எதிர்கொண்டிருக்கிறேன். இது மிகப் பெரிய அபத்தம். சினிமா சூழலை வெறுக்கும் குடும்பத்துடன் சண்டை போட்டு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தது தொடங்கி, கலை இயக்குநர்களிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றி பின்னர் கலை இயக்குநர் ஆனது வரையில் எனது இந்தப் பயணம் இலகுவானது அல்ல. கரடு முரடான பாதைகளையும் உள்ளடக்கியது.

என்னை இங்கு 'ஒரே பெண் கலை இயக்குநர்' என்று அடையாளப்படுத்துகிறார்கள். இந்த நிலை கண்டு மகிழ்வதா வருந்துவதா என்று கூட தெரியவில்லை. தமிழ் சினிமாவில் நான் முதல் பெண் கலை இயக்குநர் அல்ல. 80-களில் மோகனாம்பாள் என்பவர் கலை இயக்குநராக இருந்திருக்கிறார். 'சகலகலா வல்லவன்' உள்ளிட்ட படங்களில் பங்காற்றி இருக்கிறார். ஆனால், அவரைப் பற்றி எவ்வளவு தேடியும் முழுமையான குறிப்புகளை அறிய முடியாததுதான் மிகப் பெரிய துயரம். இப்போது கலை இயக்குநராக ஒரு பெண் இயங்குவதால் சந்திக்க நேரிடும் நடைமுறைச் சிக்கல்களை அறிகிறேன். எதிர்கொள்கிறேன். அந்தக் காலக்கட்டத்தில் மோகனாம்பாள் இதைவிட மிகப் பெரிய போராட்டங்களைக் கடந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது.

இதனிடையே, திரைத்துறை குறித்து வெளியே பேசும் தவறான புரிதல்கள் பற்றிய தெளிவு கிடைத்ததால், என் துறை சார்ந்து இயங்குவதற்கு வீட்டிலும் ஊக்கமும் உத்வேகமும் கிடைத்தது. என் பெற்றோரின் உறுதுணையே எனக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. 

மும்பையில் உதவியாளராக இருந்தபோது ஏற்பட்ட அற்புதமான அனுபவங்களும், எதிர்கொண்ட பிரச்சினைகளையும் சுருக்கமாக பகிர விரும்புகிறேன். அத்துடன், 'பிசாசு', 'சார்லி' உள்ளிட்ட படங்களில் பங்குவகித்த அனுபவம், ஆண்கள் சூழ் திரைத்துறையில் எதிர்கொண்ட பிரச்சினைகள், திரைத்துறையை நான் அணுகிய விதம் முதலானவை குறித்தும் அடுத்த அத்தியாத்தில் பகிர்கிறேன்.

ஜெயஸ்ரீ (30): சமகால தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரே பெண் கலை இயக்குநர். மிஷ்கினின் 'பிசாசு' மூலம் அறிமுகம். மலையாளத்தில் 'சார்லி' மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர். கேரள ஃபிலிம் க்ரிட்டிக் விருது பெற்ற சிறப்புக்குரியவர். திரைக்குப் பின்னால் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் சினிமாவில் பெண்கள் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர்களில் மிக முக்கியமானவர். தென்னிந்திய சினிமாவில் பாலினப் பாகுபாடு களைவதற்கு, அனைத்துப் பிரிவுகளில் பெண்கள் களம் கண்டு சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவதுடன், அதற்கான ஊக்கத்தை ஆர்வமிக்க பெண் கலைஞர்களுக்கு அளித்து வருபவர். தன் கலை இயக்கத் திறமையால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய நாட்களை விரைவில் இவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

'அஞ்சேல்' தொடரும்...

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 13 | நேர்த்தி நோக்கி செல் - இயக்குநர் ஸ்ரீகணேஷ் [பகுதி 2]

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்