'கர்மா சர்க்கிள்' மூலம் தொழில் முனைவோர் தங்களுக்குள் உதவிக்கொண்டு மற்றவர்களுக்கும் உதவலாம்...

0

திறமையும் அனுபவமும் வாய்ந்த தேர்ந்த தொழில்முனைவோரை இணையம் அல்லது நேரடியாகத் தொடர்பு கொள்ளும் இடமாக கர்மா சர்க்கிள் எனும் பொதுத்தளம் இயங்குகிறது. அங்கு மற்ற தொழில்முனைவோர்களின் அறிவுரைகள் பெற்று, அவர்களுடைய நேரத்திற்கும் அறிவுரைக்கும் நன்றி சொல்லி அதனை பிறருக்கும் அளிக்கலாம். அந்தத் தளத்தில் இப்போது 3000 தேர்ந்த அனுபவமுடையவர்கள் இருக்கிறார்கள்.

ஆஃபிஸ் ஹவர் என்பது மேலைநாடுகளில் நடைமுறையில் உள்ள ஒன்று. சாதித்த தொழில்முனைவோர் தங்கள் நேரத்தை வளரும் தொழில்முனைவோருக்கு வழிகாட்டலில் செலவிடுகிறார்கள். சமீபத்திய வருடங்களில் இந்தியர்கள் பலர் தொழில் துறையில் சாதனை புரிந்திருப்பதனால், இந்தக் கோட்பாட்டை இந்தியாவிலும் வெற்றி பெற வைக்கலாம்.

கர்மா சர்க்கிள் அணி

'கர்மா சர்க்கிள்' தீபக் கோயலால் 2015 ல் தொடங்கப்பட்டது. இப்போது அந்தக் குழுவில் ஏழு பேர் இருக்கிறார்கள். இதற்கு முன் தீபக் பேக்பேக் என்னும் ஒரு புது நிறுவனத்தில் இணை நிறுவனராகவும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருந்தார். அந்நிறுவனம் மார்க் க்யூபனாலும் வேறு சில முதலீட்டாளர்களாலும் நிதியளிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன் அவர் இந்தியா ஹோம்ஸ் நிறுவனத்தில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருந்தார். அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலான்மைத் துறையைத் தொடங்கி வளர்த்ததில் அவர் பெரும்பங்கு வகித்தார். இதுமட்டும் அன்றி அவர் டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்று மேலான்மை பட்டத்தை ஹாஸ் மேலான்மையியல் பள்ளியில் பெற்றவர்.

கர்மா சர்க்கிளுக்கு டில்லியிலும் அமெரிக்காவிலும் பணியாளர்கள் இருக்கிறார்கள். தொடக்கத்தில் கணினி இணையப் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டு இப்போது ஆண்ட்ராய்ட் கைபேசிகளுக்கான செயலியை வெளியிட்டுள்ளார்கள்.

எதிர்காலம் கைபேசிகளில் என்று தெரிந்துவிட்ட படியால் அந்தத் துறையில் இப்போது கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அதற்காக கணினி இணைய அமைப்பை நிறுத்திவிடவும் இல்லை. இதைப்பற்றி சந்தைப்படுத்துதல் பிரிவுத் தலைவர் கரண்தீப் தங் கூறுவதாவது,

கைபேசிகளில்தான் எங்கள் கவனம் என்றாலும் எங்கள் இணைய தளத்தில் மாற்றங்கள் கொண்டுவந்து ஒரே மாதிரியான பயன்பாட்டு அனுபவம் கிடைக்கச் செய்கிறோம். எங்கள் எல்லா தொடர்பு வழிகளிலும் இதை பிரபலப்படுத்தி, கார்ப்பரேட் மற்றும் முன்னாள் மாணவர்கள் அமைப்புகளுடன் சேரப் பார்க்கிறோம்.

இப்போதைக்கு முதலீட்டாளர்களின் உதவியுடன் தொடங்கப்பட்டிருக்கும் கர்மா சர்க்கிள் அறிவுரை வழங்குபவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் இலவச சேவை அளிக்கிறது. இன்னும் ஒரு வருடம் இதே போல இருந்து பின் இதனை காசாக்குதல் பற்றித் திட்டமிடலாம் என்று இருக்கிறார்கள். தற்போதைக்கு ஆண்டிராய்ட் மென்பொருள் மட்டும் வெளியிட்டிருக்கும் இவர்கள் ஏப்ரலில் ஐ ஃபோனுக்கு மென்பொருள் வெளியிட இருக்கிறார்கள். கணக்கு துவங்க நினைப்பவர்கள் தங்கள் அடிப்படை விவரங்கள், பணி குறித்த தகவல்கள், ஒரு மாதத்தில் எத்தனை முறை ஆலோசனை பெற விருப்பம் என்பதை உள்ளிட்டு கணக்கு துவங்கிக் கொள்ளலாம்.

அதற்குப் பின் ஆலோசனை பெற விரும்புவோர் தங்கள் துறை மற்றும் தேவைகளுக்கான திறனாய்வாளர்களைத் தேர்வு செய்து, தங்கள் சுயவிவரத்தை அனுப்பி ஒரு கலந்தாய்வுக்கு ஒப்புதல் கேட்பர். ஆலோசனை வழங்குபவரும் தன்னைப்பற்றிய தகவல்களை, திறன்களை உள்ளீடு செய்கையில் அவை தேடும் தேவைக்கேற்ப மற்றவர்களைச் சென்றடையும்.

அடுத்தபடியாக ஆலோசனை வேண்டுபவருக்கு, கர்மா நோட் அனுப்ப அல்லது வேறு ஒருவருக்கு உதவ என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதன்பின் பிற விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒரு கலந்தாய்வு விண்ணப்பம் அனுப்பப்பட்டு ஒரு வரிசை எண் தரப்படும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் ஒரு சாட் சாளரம் திறந்து இருவரும் அதில் தொடர்பு கொள்ள வழிவகுக்கும்.

"கலந்தாய்வுக்குப் பின்னர் ஆலோசனை பெற்றவர் ஒரு கர்மா நோட் அனுப்ப வேண்டும். அது ஒரு பின்னூட்டமாக இல்லாமல் நன்றி சொல்லும் விதமாக இருக்கும். அதேபோல் அந்த ஆலோசனை வழங்குபவரின் திறன்களுக்குச் சான்றளிக்கலாம்" என்கிறார் தீபக்.

இந்த மென்பொருள், விளையாட்டின் அடிப்படையான புள்ளிகள் பெறுதல் என்னும் கோட்பாட்டைச் சேர்த்து மேலும் இதைப் பயன்படுத்த வைக்கிறது. ஒரு கர்மா நோட் அனுப்புகையில் இரண்டு புள்ளிகளும், ஒரு கர்மா நோட் பெறுகையில் பத்து புள்ளிகளும் தரப்படும். இதன் நோக்கம் ஒரு கர்மா வலையை உருவாக்கி தேவைப்படுகையில் பயன்படுத்துதல் தான்.

சிறப்பு அம்சங்கள்

அறிமுகம் செய்தல்

பயனாளர்கள்; ஆலோசனை வேண்டுபவர்களையும், வழங்குபவர்களையும் பரஸ்பர அறிமுகம் செய்து வைக்க முடியும். அவரால் அந்த கலந்தாய்வு விண்ணப்பம் என்ன நிலையில் இருக்கிறது என்று அறிய முடியும்.

கர்மா ஃபீட்

பயனர்கள் இந்தத் தளத்து மேம்பாடுகளையும் நிகழ்வுகளையும் இங்கு காண முடியும். மேலும் கேள்விகளைப் பொது வெளியில் கேட்டு பதில்பெற முடியும்.

குழுக்கள்

கர்மாசர்க்கிள் பயனர்கள் துறை வாரியாக, நிறுவனம் வாரியாக, முன்னாள் மாணவ அமைப்புகள் வாரியாக குழுக்களாக இயங்க வழிசெய்கிறது.

இரகசியக் காப்பு

கலந்தாய்வுகளில் பங்குபெறும் இருவர் தங்களுக்குள் அனுப்பிக்கொள்ளும் செய்திகள் வேறு யாருக்கும் காண்பிக்கப்பட மாட்டாது. ஒருவர் அனுப்பும் கர்மா நோட் அவரின் சுயவிவரத்தில் காண்பிக்கப்படும் என்றாலும், பயனர்கள் அதை மறைக்கவும் வசதிகள் உள்ளன.

கர்மாசர்க்கில் நன்கு கட்டமைக்கப்பட்டு நிறங்களையும் வார்ப்புருக்களையும் பயன்படுத்திச் செய்யப்பட்ட மென்பொருள். பயன்படுத்த எளிதானது. சந்தேகங்கள் இருந்தாலும் அவற்றை 'ஹவ் இட் வொர்க்ஸ்' பகுதியில் தீர்த்துக்கொள்ளலாம்.

திறன்களையும் சிறப்புச் சொற்களையும் கொண்டு தேடுகையில் பல பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. மற்றவருக்குச் செய்வதும், கர்மா நோட்டுகள் அனுப்புவதும் இதை மேலும் அழகாக்குகிறது, ஆர்வம் கொள்ள வைக்கிறது. கலந்தாய்வுகளை திட்டமிடலுக்கான வசதி மூலம் வேலையை எளிதாக்குகிறது.

எவ்வாறு மேம்படுத்தலாம்

துறை, திறன் வாரியான ஒரு தரவரிசைப் பட்டியல் ஒரு ஆரோக்கியமான தொழில்முறைப் போட்டியை உருவாக்கும். அது ஆலோசனை கேட்பவர்களை சிறப்பான நபர்களை அணுக உதவும். ஒரு பயனரின் சுயவிவரம் லிங்க்ட் இன்னிலிருந்து நேரடியாக எடுக்கப்படுகிறது. அதில் மாற்றம் செய்யும் வசதி வருமாயின் இன்னும் மேம்படும்.

கர்மா சர்க்கிள் ஒரு ஆரோக்கியமான தொழில்சார்ந்த கலந்தாய்வுத் தளம். தொழில் சார்ந்த வாட்ஸாப் என இதனைக் கூறலாம். ஒரு புது நிறுவனத்தின் வெற்றியானது அது எவ்வளவு தூரம் தேவை-இருப்பு இடைவெளியை நிறைவு செய்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. அனுபவமிக்க பணியாளர்களும், இந்தியா, சிலிக்கான் பள்ளத்தாக்கு இரண்டு இடங்களிலும் பணியாற்றி இருக்கும் நிறுவனரும் உள்ளதால், ஆலோசனை பெற மிகச்சிறந்த இடம். இதன் மூலம் பொருள் ஈட்டும் முயற்சியில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

ஆக்கம்: ஹர்ஷ்த் மல்லையா | தமிழில்: சௌம்யா சங்கரன்

செயலி பதிவிறக்கம்: karma circle

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்