நவீன கேமிங் மையத்தை நிறுவிய சென்னை கல்லூரி மாணவர்!

2

படிக்கும் வயதில் அனைவருக்கும் விளையாட்டு மீது அதிகம் ஈர்ப்பு இருக்கும். நாளடைவில் தொழிநுட்ப வளர்ச்சியால் அந்த ஈர்ப்பு கணினி விளையாட்டை நோக்கிச் சென்றுவிடும். அதனால் இந்த நூற்றாண்டில் வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ’Gaming’ மீது மோகம் அதிகம் ஆகி கொண்டு வருகிறது. இது போல் கேமிங்கில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு கேமிங் மையத்தை திறந்துள்ளார் ஹேம்னாத்.

ஹேம்னாத், லயோலா கல்லுரியில் பி.எஸ்.சி விஸ்காம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர். கேமிங் மீது கொண்ட ஆர்வத்தால் சுயமாக ’Tagbot Gaming Centre (TGC)’ மையத்தை ராமாபுரம் அருகில் நிறுவியுள்ளார்.

தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த காலத்தில் அனைவர் வீட்டிலும் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி உள்ளது, எனவே அவரவர் வீட்டிலேயே கணினியில் விளையாடிக்கொள்வார்கள்; ஆனால் TGC-க்கு வருவதற்கானக் காரணத்தை விளக்குகிறார் ஹேம்னாத்.

”எங்கள் கேமிங் மையத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் அனைத்துமே மேம்படுத்தப்பட்ட விலையுயர்ந்த தொழிநுட்பமாகும். நம் வீட்டில் விளையாடும் வீடியோ கேமை தாண்டி அவர்களால் வாங்க முடியாத விளையாட்டை TGC-யில் விளையாடலாம்,” என்கிறார் ஹேம்னாத்.

இங்கு PC மற்றும் playstation கேம்களை சிறந்த தொழில்நுட்பத்துடன் எந்தவித தடையும் இன்றி விளையாடலாம். விளையாட்டின் முழு அனுபவத்தையும் அளிக்க அதிநவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் டேபிள் டென்னிஸும் இங்கு உள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 40/50 ரூபாய் மட்டுமே வசுலிக்கப்படுகிறது. ஆன்லைனில் விளையாடப்படும் விளையாட்டுகள் வாடிக்கையாளர்களின் ஈமெயில் அல்லது சமூக வலைதளத்துடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் விளையாடுவோர் எப்பொழுது வேண்டும் என்றாலும் விட்ட இடத்திலிருந்து விளையாடலாம். மேலும் Whatsapp மூலம் உங்கள் கணினி/ கன்சோலை முன் பதிவு செய்துக்கொள்ளலாம்.

“ஊரை விட்டு வந்து விடுதியில் தங்கி கல்லூரி அல்லது அலுவலகத்திற்கு செல்லுபவர்களுக்கு விளையாடும் வாய்ப்பு அமையாது மற்றும் தேவையான உபகரணங்கள் இருக்காது. பெரும்பாலும் அவர்களை மனதில் கொண்டே இதைத் தொடங்கினேன்,” என்கிறார் ஹேம்னாத்.

சிறு வயது முதலே கேமிங் மீது கொண்ட ஆர்வமே இந்த மையம் தொடங்க காரணமாய் இருந்தது என்கிறார். பள்ளி பொதுத் தேர்வு எழுதும் போதுக் கூட தனக்கு படிப்பின் மீது அதிகம் ஆர்வமில்லை என்கிறார். தற்போது இறுதி ஆண்டு கல்லூரியில் படிக்கும் இவர் கடந்த ஏப்ரல் மாதமே இந்த மையத்தை நிறுவினார்.

“தொழில் தொடங்கும் எண்ணத்தை நான் வீட்டில் தெரிவித்தப் போது என் பெற்றோர்கள் மறுத்தார்கள், ஆதரவும் தரவில்லை. கடன் உதவி பெற்றே இதை தொடங்கினேன்.”

அதிநவீன தொழில்நுட்பம் பயன் படுத்துவதால் இதற்கு செலவு அதிகம். தன் தந்தை மூலம் 25 லட்சம் கடன் உதவி பெற்று நிறுவியுள்ளார். தொடங்கி 5 மாதம் ஆன நிலையில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் முகநூலை தவிர வேறு எங்கும் ஹேம்னாத் விளம்பரம் செய்யவில்லை.

“இந்த தொழிலில் ஆபத்து அதிகம், கணினி மற்றும் அதன் விளையாட்டை பற்றி தெரிந்தால் மட்டுமே நடத்த முடியும். ஒரு லட்சம் மதிப்புள்ள மென்பொருள் பயன் படுத்தப்பட்டுள்ளது, அதில் ஏதேனும் பழுது என்றால் அது நமக்கு நஷ்டமே மேலும் இதை எப்பொழுதும் புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்,” என்கிறார்.

தற்போது மாலை கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதால், தான் கல்லூரிக்கு வரும் நேரத்தில் தன் நண்பர்கள் மையத்தை பார்த்து கொள்வதாக கூறினார்.

விளையாடுபவர்கள் தங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிட TGC ஏற்ற இடமாக அமைகிறது என்றும், ஒரே எண்ண ஓட்டத்துடன் இருக்கும் சக வாடிக்கையாளர்களுடன் விளையாடுவது நட்புறவை மேம்படுத்துகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin