ஃபேஸ்புக் பயனர்களில் அதிக எண்ணிக்கையுடன் இந்தியா முதல் இடம்!

0

ஃபேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கையில் இந்தியா, அமெரிக்கா-வை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. 241 மில்லியன் பயனர்களுடன் இந்தியாவும், 240 மில்லியன் பயனர்களுடன் அமெரிக்காவும் உள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் உலகம் முழுவதிலும் இருந்து 2 பில்லியன் புதிய பயனர்களை ஃபேஸ்புக் பெற்று வருவதாகவும் The Next Web அறிக்கை தெரிவித்துள்ளது.  

ஃபேஸ்புக் விளம்பரதாரர்ளிகடம் அளித்துள்ள பயனர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இச்செய்தியை அந்த தளம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை விட இரண்டு மடங்கு வேகமாக இந்திய பயனர்கள் எண்ணிக்கை கூடி வருவது இதில் இருந்து தெரிகிறது. மேலும் அந்த அறிக்கையின் படி, இந்திய பயனர்களின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது. இதுவே அமெரிக்காவில் 12 சதவீத வளர்ச்சி மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளது. 

ஆனால், இந்திய மக்கள் தொகை கணக்கில், வெறும் 19 சதவீத மக்கள் மட்டுமே ஃபேஸ்புக் பயன்படுத்துவதாகவும், சமூக ஊடகங்களின் பங்கு இந்தியாவில் குறைவாகவே இருப்பதாகவே  கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் இந்தியர்களில் ஆண்களே அதிகமாகவும் இருப்பது ஆய்வுகளில் தெரிகிறது.

ஆனால் அமெரிக்காவில், பயனர்களில் 54 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்திய பயனர்களில் பாதிக்கும் பேற்பட்டோர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபேஸ்புக் தனது காலாண்டு மற்றும் 2016-ம் ஆண்டின் வருவாய் பட்டியலை வெளியிட்டபோது, அதில் சீரான வளர்ச்சியும், அதிகரிக்கும் பயனர்களின் எண்ணிக்கையும் தெளிவாக வெளிவந்தது. 8.8 பில்லியன் டாலர் வருவாய், 3.56 பில்லியன் டாலர் லாபம் மற்றும் 1.23 பில்லியன் பயனர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாக ஃபேஸ்புக் அறிக்கை வெளியிட்டது. இதில் 1.15 பில்லியன் மக்கள் தங்கள் மொபைல் போனில் இருந்தே சமூக தளங்களை பார்வையிடுவதாகவும் கூறப்பட்டது. 

கட்டுரை தகவல் உதவி: IANS