குப்'பை' விளம்பரம்: தூய்மை டெல்லிக்கு புது வியூகம் வகுத்த 3 இளைஞர்கள்!

0

"நான் காரில் சென்று கொண்டிருந்தேன். சிக்னலில் வண்டி நின்றது. அப்போது, இன்னொரு காரில் ஒரு பெண் ஜன்னலைத் திறந்து சாக்லெட் கவர் பேப்பரை சாலையில் வீசினார். நான் சட்டென காரில் இருந்து இறங்கினேன். அந்தப் பெண்ணிடம், கீழே போட்ட குப்பையை அப்புறப்படுத்திவிட்டு, நம் சாலையை தூய்மையாக வைத்துக்கொள்ள உங்களால் ஆனதைச் செய்யுங்கள் என்று சொன்னேன்" என்று தன் சாதாரண அன்றாட வாழ்க்கையின் ஃப்ளாஷ்பேக் ஒன்றை விவரிக்கிறார் விபுல் அகர்வால்.

அன்றைய தினம் 24 வயது இளைஞர் விபுலின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், நம் சாலையை நாமே அசுத்தப்படும் போக்கு என்பது எங்கும் எப்போதுமே நடக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது. வீதியில் நின்றுகொண்டு கூவிக்கூவி வாய்ச்சொல்லில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே போதாது என்பதை அவர் உணர்ந்தார். 'தூய்மை இந்தியா' திட்டம் மூலம் மத்திய அரசும், போக்குவரத்துக் கட்டுப்பாடு முதலான நடவடிக்கைகள் மூலம் மாநில அரசும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பல முன்முயற்சிகளை எடுத்தாலும்கூட, தூய்மையான டெல்லி என்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியம் என்று அவர் உணர்ந்தார்.

நண்பர்கள் நிகில் குப்தா (24), சோம்வீர் சொலான்கி (23) ஆகியோரும் விபுல் உடன் இணைந்து புதிய வியூகம் வகுக்க முன்வந்தனர். இவர்கள் மூவருமே இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள். விபுல் தனது 16-வது வயதில் தொடங்கிய சமூக அமைப்பு ஒன்றில் இவர்கள் மூவருமே தொடர்ந்து இயங்கி வந்தனர். 2013-ல் இம்மூவரும் இணைந்து 'மை சிட்டி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, சுற்றுச்சூழல் விவகாரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தூய்மையை முதன்மை நோக்கமாகக் கொண்ட 'மை சிட்டி' முதலில் சிக்கிமில் களமிறங்கியது. இப்போது, தலைநகர் டெல்லி பகுதியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

முதற்கட்ட நடவடிக்கையாக, ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களை இம்மூவரும் சந்தித்துப் பேசி கள நிலவரத்தை ஆய்வு செய்தனர். தங்கள் வாகனங்களில் வரும் பயணிகளில் பலரும் சாலையில் குப்பை போடுவதை சர்வசாதாரணமாக செய்வதாக ஓட்டுநர்கள் கூறினர். வீண் வாக்குவாதம் வரலாம், சரியான கட்டணத்தை இழக்க நேரிடும் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பயணிகளிடம் ஓட்டுநர்கள் பலரும் எதையும் தட்டிக் கேட்பது இல்லை. முடிவாக, பயணிகளுக்கு நெருடலை ஏற்படுத்தி விழிப்புணர்வூட்ட வேண்டும்; ஓட்டுநர்களுக்கும் இயன்ற வரையில் உதவ வேண்டும் என்று மூவரணி தீர்மானித்தது வியூகத்தை வகுத்தது.

ஒரு வழியாக தீர்வு கிடைத்தது. அதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள டாக்ஸிகளிலும் ஆட்டோக்களிலும் குப்பைகளை போடுவதற்காக பை விநியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது. முதல் நான்கு மாதங்களில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் இந்தத் திட்டத்துக்கு வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

களத்தில் செயல்திட்டம்

"டாக்ஸி சங்கத்தினர், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் என பல தரப்பினரையும் சந்தித்துப் பேசி முறைப்படி அனுமதி பெற்றோம். எங்களது திட்டம் குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினோம்" என்று தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரிக்கிறார் விபுல்.

மூவரின் இந்த முன்முயற்சிக்கு 'என் நகரம் - இது நம் நகரம், தூய்மையாக வைத்திருப்போம்' என பெயரிடப்பட்டது. 'எந்த ஒரு விஷயத்தையும் தனிப்பட்ட முறையில் அணுகும்போது எவரும் நிச்சயம் ஈடுபாடு காட்டுவர்' என்று அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஓர் உளவியல் ஆய்வின் அடிப்படையில்தான் தங்கள் முன்முயற்சிக்கு இப்படி ஒரு பெயர் வைத்திருப்பதாக விபுல் கூறுகிறார்.

'மை சிட்டி' முதற்கட்டமாக டாக்ஸி, ஆட்டோக்களில் 100-க்கும் மேற்பட்ட பைகளை பொருத்தினர். அந்தப் பையில் பயணிகள் இடும் குப்பைகள் மாலையில் மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும். இதற்கு, ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நலல் வரவேற்பு கிடைத்துள்ளது.

எதிர்காலத் திட்டம்

தற்போது மூவரும் தங்கள் தனிப்பட்ட சேமிப்பில் இருந்து தொகையை எடுத்துதான் பைகளை வாங்கி வாகனங்களில் பொருத்தி வருகின்றனர். இதை நீண்ட நாட்களுக்கு இப்படியே செயல்படுத்துவது இயலாதது. "பைகளில் விளம்பரங்களைப் பதியத் தொடங்கியிருக்கிறோம். எத்தனையோ சிறு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள் மக்களைப் போய்ச்சேர வேண்டும் விரும்புகின்றனர். அவர்களுக்கு சரியான இடமாக இதுவே இருக்கக் கூடும். பைகளில் விளம்பரம் செய்வதன் மூலம் பயணிகளின் நேரடிப் பார்வையில் கவனத்தை ஈர்க்க முடியும்" என்று விபுல் விவரிக்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, "ஒரு என்.ஜி.ஓ. என்ற முறையில் நாங்கள் வெவ்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கும் பலன் கிடைக்கும். இது நல்ல விளம்பர யுக்தியாக ஒரு பக்கமும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கை மறுபக்கமும் இத்திட்டம் இரட்டிப்புப் பலனைத் தருகிறது" என்று கூறும் அவர், இந்தத் திட்டத்தை அரசுடன் இணைந்து செயல்படுத்தவும் முடியும் என்று நம்புகிறார்.

மூன்று இளைஞர்களும் கொண்டுள்ள தெளிவான தொலைநோக்குப் பார்வை இதுதான்: இந்தியாவை உலகிலேயே தூய்மையான நகரமாக்க வேண்டும். அதற்கு இப்போதைக்கு டெல்லியை முன்னுதாரணமாக்க வேண்டும். இது மிகப் பெரிய இலக்குதான் என்றாலும், அதைச் சாத்தியப்படுத்த முடியும் எனும் அவர்கள், "வாகனங்களில் பைகளைப் பார்க்கும் மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நம் பொருளாதார வளர்ச்சியின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து செயல்படுவர்" என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.

ஆக்கம்: ஸ்னிக்தா சின்ஹா | தமிழில்: கீட்சவன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

சமூகப் பொறுப்பு முன்முயற்சிகள் தொடர்பு கட்டுரைகள்:

ராஜஸ்தானில் 850 குழந்தை திருமணங்களைத் தடுத்துள்ள க்ரிதி பாரதி!

உங்கள் குப்பைத் தொட்டிதான் ராகுலின் பொக்கிஷங்களின் புதையல்!