உடன்பிறப்புக்களே... விடை பெறுகிறேன்! 

கருணாநிதியின் கடந்த கால புகைப்படத் தொகுப்பில் மூழ்குவதன் மூலம், ‘கலைஞர்’ என்கிற தனிமனிதரை உணர்ந்து கொள்வதோடு, ‘உழைப்பே உயர்வு’ என்ற உன்னதத் தத்துவத்தையும் உணரலாம்.

0

மு.க - தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெயர். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. பெரியாரின் பேச்சும் அண்ணாவின் எழுத்துகள் இவரை கவர்ந்ததால் 14 வயதில் அரசியலுக்கு வந்தார்.

பட உதவி: கூகுள் இமேஜஸ்
பட உதவி: கூகுள் இமேஜஸ்

1942-ல் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழா திருவாரூரில் நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட வி.ஐ.பி பேராசிரியர் அன்பழகன். அப்போது தொடங்கிய அந்தத் தோழமை கருணாநிதியின் இறுதிநாள் வரை தொடர்ந்தது. 

கருணாநிதி வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களான `ராஜகுமாரி’, `மந்திரிகுமாரி’, `மருதநாட்டு இளவரசி’ படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 1954-ல் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து உருவாக்கிய `மலைக்கள்ளன்’ திரைப்படம் இருவருக்கும் ஒரு மைல் கல்லானது. 

1950ல் வெளியான பராசக்தி படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்த திரைப்படத்தின் வசனங்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. இதனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நலிந்தது.

1969-ல் அண்ணா மறைந்தார். யார் முதல்வர் என்ற போட்டி நாவலருக்கும் கருணாநிதிக்கும் இடையில் பலமாக இருந்தது. அதில் கருணாநிதியே வெற்றி பெற்றார். அப்போதுதான் அண்ணாவைப்போல் தம்பிகளுக்குக் கடிதம் எழுதவும் தொடங்கினார். 

முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றிருந்ததை அறிந்த இந்திரா காந்தி “கலைஞர் கலகக்காரர் ஆயிற்றே, மத்திய அரசுடன் எப்படி ஒத்துழைப்பார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ”நாங்கள் மத்திய அரசின் உறவுக்கு கை கொடுப்போம். அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று கூறினார் கருணாநிதி.

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே’ என்று சொல்லும்போது, அந்த வாக்கியத்துக்குக் கூடுதல் நிறுத்தமும் அழுத்தமும் கொடுப்பார்; அதில் கொஞ்சம் உருக்கமும் இருக்கும். தி.மு.க தொண்டன் மட்டுமல்ல, கேட்பவர் யாராக இருந்தாலும் அதில் கொஞ்சம் மயங்கித்தான் போவார்கள்.

1972-ல் கருணாநிதி-எம்.ஜி.ஆருக்கு இடையில் இருந்த முரண்பாடுகள் பனிப்போராக மாறியது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி, திருக்கழுக்குன்றத்தில் பேசிய எம்.ஜி.ஆர், ``கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் கணக்குக் காட்ட வேண்டும்” என்றார்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய, வாஜ்பாஜ்,தேவ கவுடா, மன்மோகன் சிங், நரசிம்மராவ், ஐகே.குஜரால், மோடி உள்ளிட்ட 14 பிரதமர்களை பார்த்தவர் கருணாநிதி.

தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு 1976 பிப்ரவரி 15-ம் தேதி சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ’விடுதலைப் புலிகளை ஆதரித்து இலங்கை-இந்தியாவின் நட்பு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார் என்றார். ”தி.மு.க-வின் ஆட்சி கலைக்கப்பட அதுதான் காரணம் என்றால், தி.மு.க-வுக்கு அதைவிடப் பெருமை இருக்க முடியாது” என்று பதிலடி கொடுத்தார் கருணாநிதி. 

அரசியலில் தொடங்கி கட்சி, கூட்டணி என அனைத்திலும் கருணாநிதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது முரசொலி மாறனுக்கு தெரியும். அந்த அளவுக்கு கருணாநிதியின்  எண்ணமாகவும் நிழலாகவும் திகழ்ந்தார் முரசொலி மாறன். கடந்த 2003 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் மறைந்தபோது, கருணாநிதி அழுதது, அனைவரையும் கண்கலங்க வைத்தது.

பட உதவி: தி ஹிந்து
பட உதவி: தி ஹிந்து

‘அண்ணா! உன் இதயத்தை எனக்கு இரவலாக கொடு! நான் அங்கு வரும்போது, உன்னிடம் திரும்பித் தருகிறேன்’ என்று பேரறிஞர் அண்ணா இறந்த போது இரங்கற்பா வாசித்தார் கலைஞர் கருணாநிதி. இப்போது, அந்த தம்பி, அண்ணன் துயில் கொள்ளும் இடத்தில் நிரந்தரமாக ஓய்வெடுக்க வந்து, இதயத்தை திருப்பியளித்துள்ளார்.

Related Stories

Stories by Jessica