அன்பை பறிமாறிய காதலர்களிடம் அத்துமீறிய போலீஸ்: ஃபேஸ்புக் லைவ் மூலம் அம்பலப்படுத்திய ஜோடி! 

0

கேரளா போலீஸ் ஒரு ஜோடிக்கு அபராதம் விதித்தனர். ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் லைவ் வீடியோவாக வைரலாக போக காவல்துறை அதிகாரி மன்னிப்பு கேட்டுள்ளார். 

இயற்கை அழகு வாய்ந்த கேரளா, கல்வித்தகுதி அதிகம் உடைய மக்களும், அரசியல் விழிப்புணர்வு உள்ளோரையும் கொண்ட மாநிலம் ஆகும். இத்தனை இருந்தும் மக்கள் அங்கே இன்னும் பழமைவாத எண்ணங்களுடன் இருப்பது அண்மையில் நடந்த சம்பவம் நிரூபித்துள்ளது. 

கடந்த வாரம், திருவனந்தபுரத்தில் உள்ள பார்க் ஒன்றில் ஒரு ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களை அணுகிய இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள், பொது வெளியில் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத் தொடங்கினார்கள். விஷ்ணு விச்சு என்ற அந்த இளைஞர் தன் வருங்கால மனைவியின் தோளில் கைகளை போட்டு அமந்திருந்தார். போலீசார் அதட்டியதும் பயந்து போய் அசிங்கப்படுவார்கள் என்று நினைத்த அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. விஷ்ணு, உடனடியாக அந்த நிகழ்வை வீடியோ எடுத்து தன் போனில் இருந்து ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கினார்.  

வீடியோவில் அந்த பெண் போலீசார், இவர்கள் கட்டிக் கொண்டிருந்ததாகவும், முத்தமிட்டு கொண்டிருந்ததாகவும் கத்துவது பதிவாகியது. ஆனால் அந்த ஜோடி தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று அடித்து பேசினார்கள். அவர்கள் அவ்வாறு செய்திருந்தால் அதற்கான அத்தாட்சியை காவல்துறையினரிடம் கேட்டு விவாதித்தனர். அவர்கள் சொல்வதை போல் தவறாக தாங்கள் நடந்து கொள்ளவில்லை என்று தைரியமாக எதிர்த்து பேசினார்கள்.

விஷ்ணு பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

“நாங்கள் என்ன தவறாக நடந்து கொண்டோம் என்று சொல்லுங்கள்? நாங்கள் என்ன முத்தமிட்டு கொண்டோமா? அல்லது கட்டிக் கொண்டோமா? இங்கே கேமராக்கள் உள்ளது. தோளின் மீது கை போட்டதற்கு எங்களை இப்படி அசிங்கப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை,” என்றார். 

பெண் கான்ஸ்டபிள், மேலும் இரண்டு ஆண் காவல்துறையினரை அழைத்து, இந்த ஜோடியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கே பொது இடத்தில் தொந்தரவு செய்ததற்கு அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா, அவர்களது வீடியோவை பார்த்த பின்னர், மன்னிப்பு கோரினார். தன் துறையினர் செய்த தவறான நடவடிக்கையை கண்டித்தார். தனது ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டது...

இந்த புகாரை பற்றி அறிந்து மனம் வருந்துகிறேன். அந்த ஜோடியிடம் கடுமையாக நடந்து கொண்ட பெண் காவல்துறையினரின் மேல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ளேன். இது போன்று நடந்திருக்கக்கூடாது. பொது இடத்தில் உள்ள ஜோடியினரை தொந்தரவு செய்ய யாருக்கு அதிகாரம் இல்லை. நம் நாட்டில் பொதுவெளியில் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்ள சுய கட்டுப்பாட்டை மட்டும் பின்பற்றுகிறோம். ஆனால் சட்டப்படி அதற்கு எந்த தடையும் இல்லை. 

ஆனால் பொது மக்கள் சிலர் பொது இட அன்பு பரிமாறுதலை விரும்பாமல், சிலமுறை காவல்துறையினரை அழைத்துவிடுகின்றனர். நாங்கள் அதை நிராகரிக்கமுடியாது. அதனால் அந்த இடத்துக்கு சென்று நிதானமாக எடுத்து சொல்வது எங்கள் கடமை. சில சமயம் குறைந்த வயதுடைய பெண்கள் தவறான ஆண்களால் தவறாக பயன்படுத்தப் படுகிறார்கள். அதனால் அது போன்ற குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

காவல்துறை சட்டத்தை நிலைநாட்டும் அமைப்பு மட்டுமே, நல்ல நடத்தையை சமூகத்தில் பாதுகாப்பவர்கள் அல்ல. அதனால் காவல்துறையினரான நாங்கள், எங்கள் கடமையை மனசாட்சி படி செய்ய வேண்டும். இதன் அடிப்படையே, சமூகத்தில் வாழும் மக்களிடையே சகஜமாக பேசி, புரியவைத்து, சமூகத்தில் பாதுகாப்பை ஏற்படுத்துவதே முக்கியமாகும். அதே சமயம் பொது மக்களின் தனிப்பட்ட மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் காக்கப்பட வேண்டும். 

இந்த சமபவம் மூலம் குடிமக்கள் தங்களின் உரிமைகளை அறிந்திருக்கவேண்டும் என்றும் தவறிழைக்காத போது அதற்கு பயந்து அடிபணியாமல், தைரியமாக அதை அதிகாரிகளிடம் விவாதித்து நியாயம் பெறவேண்டும் என்று உணர்த்துகிறது.