தமிழ்நாட்டில் ரூ.9094 கோடி செலவில் 1150 கி.மீ தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும்- நிதின் கட்கரி

0

தமிழ்நாட்டில் சுமார் 1150 கி.மீ தேசிய நெடுஞ்சாலை சுமார் 9094 ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். கன்னியாகுமரியில் சுசீந்திரம் அருகே பெரிய பாலத்தையும், நாற்பது மேம்படுத்தப்பட்ட சாலைகளை துவக்கி வைத்தும், மதுரை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நரிக்குளம் குளத்தின் குறுக்கே பெரிய பாலம் அமைக்கும் திட்டத்திற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டிப் பேசினார். அடுத்த 2 ஆண்டுகளில் 1800 கி.மீ தேசிய நெடுஞ்சாலை 39,000 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

மாநிலத்தில் 902 கி.மீ நீளமுள்ள மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மாநில பொதுப்பணித் துறை தயாரித்து வருவதாகவும் இது கிடைக்கப் பெற்றப்பின் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு – மாமல்லபுரம் (29 கி.மீ), காரைக்குடி-பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் (70 கி.மீ) பெரம்பலூர்-ஆத்துார் சாலை (55 கி.மீ), சேலம்-ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலை (140 கி.மீ), ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி-விருதுநகர்-அருப்புக்கோட்டை-திருச்சுழி-பார்திபனூர் சாலை (109 கி.மீ) அடங்கும் என்றும் நிதின் கட்கரி அறிவித்தார்

மத்திய அரசின் முன்னோடி திட்டமான பாரத் மாலா திட்டத்தின் 865 கி.மீ மாநில சாலைகள் புதிய தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார் இதில் சென்னை – புதுச்சேரி (137 கி.மீ), மதுரை-நத்தம் (38 கி.மீ), மேலூர்-தஞ்சாவூர் (36 கி.மீ), திருப்பூர்- திண்டுக்கல் (90 கி.மீ) அடங்கும் என்று குறிப்பிட்டார்.

சுசீந்திரத்தில் துவங்கப்பட்ட மேம்பாலம் சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும் இத்திட்டம் சுமார் ஓராண்டு மூன்று மாதங்களில் கட்டிப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த மேம்பாலத்தினால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து போக்குவரத்து சீராகும் என்றும் அவர் கூறினார்.

நரிக்குளம் பகுதியில் அமைக்கப்பட உள்ள பெரிய பாலம் சுமார் 21.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் இத்திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த திட்டம் நிறைவேறும் போது மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக நான்கு வழிச்சாலையாக மேம்படும் என்று கட்கரி கூறினார்.