பட்டினியில் வாடும் மக்களின் பசியை போக்க பொது குளிர்சாதன பெட்டியை சென்னையில் நிறுவிய மருத்துவர்!

1

உணவே நம் வாழ்வாதாரத்தின் அடிப்படைத் தேவையாக இருக்கும் ஒன்று. இன்று உலகளவில் பல லட்ச மக்கள் உண்ண உணவு இல்லாமல் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு மக்கள் பசியால் வாடுகிறார்களோ அதே அளவு பலர் உணவை வீணாக்குகிறார்கள். தினம் தினம் அனைவரின் வீட்டிலும் ஏதோ ஒரு உணவு பயனில்லாமல் குப்பைக்கு செல்கிறது. நல்ல உணவை வீணாக்காமல் மற்றவருக்கு அளிக்க பொது இடத்தில் சமூக குளிர்சாதன பெட்டியை நிறுவியுள்ளார் மருத்துவர் இஸா பாத்திமா.

சமூக குளிர்சாதன பெட்டி - பெசன்ட் நகர்
சமூக குளிர்சாதன பெட்டி - பெசன்ட் நகர்

இந்த சமூக குளிர்சாதன பெட்டி பெசன்ட் நகர் டென்னிஸ் கிளப் அருகில் அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திடிரென ஒய்யாரமாக தோன்றிய குளிர்சாதன பெட்டி அங்கு வாழும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ’ஐயமிட்டு உண்’ என்ற ஒளவையார் சொல்லுக்கு ஏற்ற அதே பெயரில் எஞ்சிய உணவை இல்லாதோருக்கு அளிக்க இந்த குளிர்சாதனப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கு எவரேனும் தங்கள் வீட்டிலோ அல்லது உணவகத்தில்லோ எஞ்சிய உணவை கொண்டு வந்து வைக்கலாம். தேவையானோர் அதிலிருந்து உணவை எடுத்துக் கொள்ளலாம்.

“ஒரு வருடத்துக்கு இந்தியாவில் மட்டும் 67 மில்லியன் டன் உணவு வீணாகிறது. வீண் செய்த இந்த உணவு 600 லட்ச மக்களின் பசியை போக்கி இருக்கும்,”

என்று பேசத் தொடங்கினார் மருத்துவர் இஸா பாத்திமா. இஸா பாத்திமா ஒரு பல் சீரமைப்பு மருத்துவர், சமூக நலனில் அதிகம் அக்கறை கொண்ட இவர் பல ஏழை குழைந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்து வருகிறார். சமூகத்துக்கு உதவிட வேண்டும் என்று எண்ணி நிறுவப்பட்டதே இந்த சமூக குளிர்சாதனப்பெட்டி.

குளிர்சாதன பெட்டி நிறுவிய இஸா பாத்திமா
குளிர்சாதன பெட்டி நிறுவிய இஸா பாத்திமா
“வீட்டில் மிஞ்சும் உணவை தெருவோரம் உள்ளவர்களுக்கு கொடுப்பேன். இது தினமும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சென்று அடைகிறது. பல மக்கள் உணவில்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று எண்ணியே இதை நிறுவினேன்,”

என்கிறார் சமூக அக்கறையுடன். திருவான்மியூர் அருகில் வசிக்கும் இவர் பெசன்ட் நகரில் இதை நிறுவக் காரணம் அங்கு வசதி உள்ளவர்களே அதிகம் உள்ளார்கள் என அனைவரும் கருத்து வைத்துள்ளோம் ஆனால் உண்மையில் உணவு மற்றும் வீடு இல்லாமல் பலரும் அங்கு இருக்கின்றனர். மேலும் பெசன்ட் நகரை ஒட்டி மீனவர்களும் வசிக்கின்றனர். அவர்களுக்கும் பயன்படும் நோக்கிலே இது அமைக்கப்பட்டது என்றார்.

மருத்துவர் இஸா பாத்திமா தனது சொந்த செலவிலும் முயற்சியிலும் இதை நிறுவியுள்ளார். இதை வைத்த சில மணி நேரத்திலே அங்கு வசிக்கும் மக்கள் அதை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பலர் தண்ணீர், பிஸ்கட், பழங்கள் என தங்களிடம் உள்ள உணவுகளை வைத்துச் சென்றனர். அவ்வழி சென்ற எளியவர்கள் மட்டுமின்றி அனைவரும் தேவையானதை எடுத்துக் கொண்டனர்.

இது வாரத்தில் 7 நாளும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். இதில் ஏற்கப்படாத சில பொருட்களை பட்டியல் இட்டுள்ளனர். அதாவது மதுபானம், சமைக்காத இறைச்சி மற்றும் முட்டை, காலாவதியான உணவு, அழுகிய பழங்கள், உறைந்த எந்த வித உணவும் இதில் வைக்கக் கூடாது. உணவைத் தாண்டி நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள ’அன்புச்சுவர்’ போல் தேவையில்லாத புத்தகம், உடை, பொம்மை, செருப்பு, பாத்திரங்கள் ஆகிய வற்றையும் வைத்தும், எடுத்தும் கொள்ளலாம். அதற்கேற்ற தனி அலமாரியும் அங்கே வைக்கப்பட்டுள்ளது.

ஒரு தனி நபரால் சமூகத்தில் சிறிய மாற்றம் கொண்டு வர முடியும் எனில் அனைவராலும் இது சாத்தியமே. இந்த நாடு நமக்கு என்ன செய்தது என எதிர்ப்பார்த்து இல்லாமல் மருத்துவர் இஸா பாத்திமா போல் நம்மால் முடிந்ததை இந்த சமூகத்திற்கு நாமும் செய்வோம்.