பொறியியல் பாடங்களை ஆன்லைனில் வழங்க தயாராகும் ஆப்!

1

உலகின் ஒரு முனையில் இருந்து கொண்டு மற்றொரு முனையில் இருக்கும் ஒரு பொருளை ஆன்லைன் மூலம் நம்மால் வாங்க முடிகிறது. பொருள்கள் மட்டுமல்லாமல் அறிவு சார்ந்த பல புத்தகங்களையும் ஆன்லைனில் படிக்கிறோம். என்னதான் புத்தகத்தில் படிக்கும் திருப்தி ஆன்லைனில் கிடைக்காவிட்டாலும், இ-புக்ஸ் நினைக்கும் நேரத்தில் எல்லாம் படிக்கும் வசதியை நமக்கு அளிக்கிறது. இது போன்று புத்தங்கங்களை எல்லாம் டிஜிட்டல் ஆக்குகிறது Swift ePublishing நிறுவனம்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் மோகன்தாஸ் சண்முகம். 19 வருடங்களாக டிஜிட்டல் துறையில் அனுபவம் பெற்ற மோகன்தாஸ் 2009-ல் இந்நிறுவனத்தை தொடங்கினார். 13 வருடம் வெளிநாட்டில் டிஜிட்டல் நிறுவனத்திற்கு பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டே இந்த நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

“நான் 23 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளேன் அங்கு செய்த பணி அனுபவத்தை கொண்டு சுயமாக ஒரு தொழில் தொடங்க முன் வந்தே இந்த நிறுவனத்தை தொடங்கினேன். வெளிநாட்டில் நல்ல நெட்வொர்க் இருந்ததால் அயல் நாட்டில் இருந்தே என் தொழில் பயணத்தை தொடங்கினேன்,”

என அனுபவங்களை பற்றி பேசினார் மோகன்தாஸ்.

இந்நிறுவனம் பழைய புத்தகங்கள் அல்லது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப புத்தகங்களை ஆன்லைன் வடிவில் அளிக்கிறது. 60-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்துடன் இணைத்துள்ளார்கள். மேலும் சென்னையை தலைமையமாகக் கொண்டு கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, இந்தியா போன்று 23 நாடுகளில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

தற்பொழுது நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், வெளியீட்டாளர்கள், மின்வள ஊடகங்கள் ஆகியோருக்கு அவர்கள் தேவைக்கேற்ப ஆன்லைன் புத்தகங்களை அளிக்கின்றனர். Swift ePublishing நிறுவனம் இதற்கு அடுத்தகட்டமாக ’Univguru’ என்ற ஆப்-ஐ வெளியிட திட்டமிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொறியியல் பாடத்தை மையமாகக் கொண்டே அமையும்.

“டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் வெளியீட்டு சேவைகள் வழங்குனரான எங்களுக்கு, மாணவர்களுக்கும் அவர்களின் ஆய்வு பொருட்களுக்கும் உள்ள இடைவேளி புரிகிறது. இதை பூர்த்தி செய்யவே நாங்கள் எண்ணுகிறோம்.”

மாணவர்கள் தங்கள் வகுப்பிற்கு தேவயான புத்தகங்களை வாங்கலாம், வகுப்பில் குறிப்பு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த ஆப் மூலம் ஒரு தலைப்புக்குத் தேவயான அனைத்தையும் எந்நேரத்திலும் அனுகலாம். கீ-வோர்ட் மூலம் அவர்களுக்கு தேவையான பாடத்தை தேடி படிக்கலாம்.

“இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் வெளியீட்டாளர்களுக்கும் பயனுள்ளதாய் அமையும். மாணவர்கள் ஒரு புத்தகத்தை பல நகல் எடுப்பது போல் இதில் செய்ய முடியாது. அனைவரும் வாங்க வேண்டும்,”

என வெளியீட்டாளர்களின் பார்வையில் பேசுகிறார் மோகன்தாஸ். மேலும் இந்த ஆப்-ல் மாணவர்களால் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் சுய மதிப்பீடு செய்ய முடியும். அதன் மதிப்பீடுகளை கொண்டு துறை பேராசிரியர்கள் பகுப்பாய்வு செய்யலாம். பேராசிரியர்களும் தங்களுக்கேற்ப வினா விடையை தயாரிக்கலாம். அதுமட்டுமின்றி இந்த ஆப்-ல் புக்மார்கிங் மற்றும் முக்கிய வரிகளை குறித்து வைக்கலாம், கூகுள் செய்வது போல் ஒரு வார்த்தை வைத்து தேவையான உள்ளடக்கத்தை தேடலாம். இன்னும் பல அமைப்புகள் univguru ஆப்-ல் உட்புகுத்தயுள்ளனர்.

“இப்பொழுது univguru-ன் மாதிரியை வெளியிட்டுள்ளோம். ஆனால் முழு பகுதியை வெளியிட 20 லட்ச ரூபாய் வரை முதலீடு தேவை. முதலீட்டாளர்களை எதிர்ப்பார்த்து உள்ளோம். இதுவரை எங்கள் மாதரியை பல்கலைகழகமும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர்,” என்றார் நம்பிக்கையுடன்.

இன்னும் 3 மாதத்தில் இந்த ஆப்-ஐ வெளியிட உள்ளனர். அடுத்த கல்வி ஆண்டிற்குள் இதை வெளியிடவே நோக்கமாக கொண்டுள்ளனர் Swift ePublishing நிறுவனர்கள். முதலில் இந்தியாவில் இதை வெளியிட்டு அதன் வரவேற்பை பொருட்டு மற்ற ஆசிய நாடுகளுக்கு எடுத்து செல்ல உள்ளனர்.

இந்நிறுவனம் ஆவணங்களை டிஜிட்டல் ஆக்குவது மட்டுமல்லாமல் அவசர மீட்பு ஆப் (Emergency Rescue app) ஒன்றையும் உருவாகியுள்ளனர். பயன்பாட்டின் அடிப்படையில் இதுவே முதல் அவசர மீட்பு ஆப் ஆகும். இது உங்களுக்கு நெருங்கிய 6 பேரின் எண்களை இணைத்துக்கொள்ள வேண்டும். ஆபத்தின் பொது ஒரு பட்டனை அழுத்தினால் அது ஆப்புடன் இணைப்பில் இருப்பவர்களுக்கு இடத்துடன் அபாய அறிவிப்பு அளித்துவிடும். இப்பொழுது சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதன் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

Stories by Mahmoodha Nowshin