2015 ஆம் ஆண்டில் இந்திய தொழில்முனை நிறுவனங்களின் உயரிய பயணம் !

0

தொழில்முனை நிறுவனங்களின் பயணம் இந்த ஆண்டு ஏற்ற இறக்கம் கொண்டே இருந்தது - ஏற்றங்கள் மிகுதியாகவே காணப்பட்டன. சுய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்முனை நிறுவனங்கள் முதல் அலிபாபா, இன்ஃபோசிஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் முதலீடுகள் என இந்த வருட செய்திகளை இவை ஆக்கிரமித்தன. ஆனால் 2016 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் இந்தத் தருணத்தில் தொழில்முனை நிறுவனங்கள் சற்று அவநம்பிக்கையுடனே பார்க்கின்றன. கடந்த ஆண்டில் ஏற்ற இறக்கங்கள் சில துறைகளை லாபத்திலும் சிலவற்றை வெகுவாக பாதிக்கவும் செய்தது.

இந்த வருடத்தின் முக்கிய தருணங்களை யுவர்ஸ்டோரி இங்கே பட்டிலயிடுகிறது.

பணமே ஆதாரமாக

32 முதலீடுகளுடன் செகோயா காப்பிடல் இந்தியா இந்த வருடம் அதிக முதலீடுகளை செய்த நிறுவனமாகவும், அடுத்தபடியாக டைகர் குளோபல் இன்வஸ்ட்மென்ட்ஸ் 29 முதலீடுகள் செய்துள்ளன. இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களும், ரத்தன் டாட்டா, நாராயண முர்த்தி, குனால் பாஹ்ல் போன்ற ஜாம்பவான்கள் தொழில்முனை நிறுவனங்களில் முதலீடு செய்ய முன் வந்தது ஆச்சர்யம் அளித்தது.

சீனாவின் மிக பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா இந்தியா நோக்கி தன பார்வையை திருப்பியது. பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு தவிர பெங்களூரை சேர்ந்த அலைபேசி மற்றும் வர்த்தகம் சார்ந்த இன்கூபடரிலும் முதலீடு செய்தது. இதனை தொடர்ந்து மற்றொரு பெரிய சீன நிறுவனமான சியோமி, தனது ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தளவாடங்களுக்காக இந்தியாவில் கட்டமைப்பு வசதி அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. இதைத் தவிர தொழில்முனை நிறுவனங்களிலும் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறியது.

டாக்ஸி புரட்சி

டாக்ஸி யூனியன் (மும்பை மற்றும் கேரளா) மற்றும் அரசு தடைகள் என எல்லாவற்றையும் கடந்து தனியார் கார் ஆக்ரிகேட்டர்ஸ் தங்களது பயணத்தை தொடர்ந்தார்கள். ஓலா மற்றும் உபெர் வாகன ஓட்டிகள் தங்களது போனஸ் பணத்தை அவ்வப்போது குறைப்பதாக குற்றம் சாட்டினாலும், இதையும் மீறி இந்த இரு நிறுவனங்களுமே தங்களது சேவையை விரிவாக்கியது. இதே போல் மேரு மற்றும் ஜுக்னூ நிறுவனமும் வளர்ச்சி கண்டன. அமெரிக்க டாக்ஸி ஆக்ரிகேட்டர், உபெர் நிறுவனத்திற்கு இந்தியா இரண்டாவது பெரிய சந்தை. ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய தொழில்முனை நிறுவனங்களில் முதலீடு செய்யவுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015 மூன்றாம் காலாண்டில் அரசின் ஆணைக்கேற்ப தனது எல்லா வாகனங்களையும் CNG பயன்பாட்டுடன் இயக்கத் தொடங்கியது ஓலா. ஆனாலும் தங்களின் சேவையை தலைநகரத்தில் தொடர நீதிமன்றத்தில் போராடி, சில கோட்பாடுகளுடன் பெற முடிந்தது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தனது Advisory for Licensing, Compliance and Liability of On-demand Information Technology-based Transportation platforms’ படி தொழிநுட்பம் சார்ந்த அக்ரிகேட்டர் மற்றும் டாக்ஸி நிறுவனங்களையும் வேறுபடுத்தியது. வாகன ஓட்டிகள் அனைவரும் காவல்துறை சரிபார்ப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் அக்ரிகேட்டர்ஸ் சொந்த வாகனங்கள் மற்றும் ஓட்டிகளை அமர்த்தக்கூடாது என்றும் டாக்ஸி சேவையை அளிப்பதாக முன்னிறுத்தக் கூடாது எனவும் கூறியது.

சமீபத்தில் வெளியான ஒற்றை-இரட்டை (odd -even) வாகன பயன்பாடு ஆணை நிறுவனங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஓலா, மேரு மற்றும் பேருந்து அக்ரிகேட்டர் ஜிப்கோ போன்ற நிறுவனங்கள் ஜனவரி மாதம் அமலுக்கு வரவுள்ள இந்த ஒற்றை-இரட்டை வாகன பயன்பாட்டிற்கு தங்களை தயார்ப் படுத்திக் கொண்டிருக்கின்றன .

அரசு கொள்கைககள்

தொழில்முனை நிறுவனங்களின் வளர்ச்சி மேலும் இச்சூழலை வளர்க்க அரசைத் தூண்டியது. ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சரவை தொழில்முனை நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கோடு, Alternative Investment Funds (AIFs) மூலமாக முதலீடு செய்ய வழி வகுத்தது. இதில் அந்நிய தனி நபரும் முதலீடு செய்யலாம்.

இதை ஆதரிக்கும் விதமாக செபி (SEBI) சில கோட்பாடுகளை தளர்க்கவும் முன்வந்தது. தொழில்முனை நிறுவனங்களுக்கான கட்டுப்பாட்டு கட்டமைப்பு குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளார் நாராயணமுர்த்தி. இதன் மூலம் நிதி திரட்ட உள்நாட்டு பரிமாற்றம் விதிமுறைகளை தளர்த்தியும், IPO முறைகேடுகள் மூலம் வரும் நிதியை முதலீட்டார்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும் இக்குழு ஏதுவாக்கியது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களால் திரும்ப எடுத்து செல்ல இயலாத பணத்தை உள்நாட்டுப் பணமாக கருத்தில் கொள்வதாக எடுக்கப்பட்ட முடிவு இதெற்கெல்லாம் முத்தாய்பாக அமைந்தது.

இது ஒரு புறம் இருந்தாலும் சமீபத்தில் புதுடில்லி உயர் நீதிமன்றம் 21 ஆன்லைன் வர்த்தகத்தை FDI விதிகளை மீறிவுள்ளதாகவும் அவற்றை விசாரிக்கும் படியும் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதில் சில நிறுவனங்கள் அந்நிய முதலீட்டை பெறவில்லை என்பது முரண்பாடாக அமைந்தது. அந்நிய முதலீட்டை பெற வகுக்கப்பட்டுள்ள நெறிகள் சில தெளிவற்றதாக இருப்பதால் இதை பயன்படுத்த நிறுவனங்கள் யோசிக்கவே செய்கின்றன.

சர்வதேச களம்

சில தொழில்முனை நிறுவனங்கள் சர்வதேச களம் கண்டன. விடுதியில் தங்க வழி வகுக்கும் நிறுவனமான ஜோஸ்டேல், வியட்நாம் நாட்டில் கால் பதித்தது. ஒன்றரை மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ள ஹோட்டல் புக்கிங் நிறுவனம் 'ரூம்ஸ் டுநைட்' துபையில் தனது சேவையை விரிவாக்க உள்ளது. எட்டு மில்லியன் டாலர் நிதியை பெற்றுள்ள ஆன்லைன் பஸ் டிக்கட்டிங் நிறுவனம் 'ரெட்பஸ்' தெற்காசிய நாடுகளில் விரிவாக்கம் செய்தது. ஜுக்னூ நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிவைத்தது.

ஓலா நிறுவனம் தனது சர்வதேச விரிவாக்கதிற்காக Didi Kuaidi, GrabTaxi மற்றும் Lyft போன்ற நிறுவனங்களுடன் புரிந்தணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த நான்கு நிறுவனங்களும் இணைந்து ஏழு பில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது. Didi  Kuaidi நிறுவனம் மற்ற மூன்று நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம் சீனாவில் 360 நகரத்தில் தனது சேவையை அளிக்கிறது.  Lyft நிறுவனம் அமெரிக்காவில் 200 நகரங்களில் உள்ளது.  GrabTaxi நிறுவனம் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்த் போன்ற நாடுகளில் சேவை அளிக்கிறது. இந்த கூட்டின் மூலம் சர்வதேச நாடுகளுக்கு பயணிப்பவர்கள் ஒரே செயலியை கொண்டு இவர்கள் இடம்பெற்றுள்ள எல்லா நாடுகளிலும் சேவையை பெற முடியும். 2016 ஆம் ஆண்டு முதல் இது உபெர் நிறுவனத்திற்கு பலத்த போட்டி தரும்.

ஜாம்பவான்கள் பல,  ஆனால் குறையும் உணவுப் பிரியர்கள்

ஓலா, ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், இன்மோபி, எம்யு சிக்மா போன்ற நிறுவனங்கள் இடம்பெற்ற யூனிகார்ன் பட்டியலில் பேடிஎம், ஜோமாடோ, குவிக்கர் போன்ற நிறுவனங்களும் இணைந்தன. அமெரிக்காவில் கால் பதிக்க அர்பன்ஸ்பூன் நிறுவனத்துடன் ஒப்பந்தம், உணவு விநியோகத்துக்கு தனி செயலி மற்றும் நவம்பர் மாதத்தில் 300 ஊழியர்கள் வெளியேற்றம் என வருடம் முழுவதும் ஜோமாடோ செய்தியில் இடம்பெற்றது. ட்ரிப்ஹோப்போ என்ற சுற்றுலா திட்டமிடும் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொண்டது.

பல உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள் சரிவை சந்தித்த தருணத்திலும் ஜோமாடோ தன்னை நிலை நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. நிதி பற்றாக்குறையின் காரணமாக ஸ்பூன்ஜோய், ஈட்லோ மற்றும் டாசோ நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை கண்டது. 200 ஊழியர்களை வெளியேற்றியதுடன் சில நகரங்களில் தனது கிளையை மூடவும் செய்தது டைனிஅவுல்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் போர்பஸ் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்தது யூனிகார்ன் சக்தியை நிலைநாட்டியது. ஸ்னாப்டீல் நிறுவனம் தொழிமுனை நிறுவனங்களில் ஒரு மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய முன்வந்தது. பெப்பர்டாப், க்ரோஃபார்ஸ், ஜுங்கூ போன்ற மளிகை விநியோக பட்டியலில் ஃப்ளிப்கார்ட், ஓலா, அமேசான் போன்ற நிறுவனங்களும் இணைந்தன.

ஆன்லைன் வர்த்தக முன்னேற்றம்

நிறுவனங்களை கையகப்படுத்துதல், செயலி வழி வர்த்தகம் மட்டுமே, மில்லியன் டாலருக்கும் மேலாக நிதி திரட்டல், பண்டிகைக் கால சலுகை என ஆண்டு முழுவதும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செய்திகளில் இடம்பிடித்தன. பேடிஎம் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் நுழைந்தது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் தங்களது லைட் மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியது.

முந்தைய வருடத்தை போல சலுகைகள் இல்லாவிட்டாலும் பண்டிகை கால வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவிலேயே இருந்தது. மேம்பட்ட தளவாடங்கள், விநியோக சங்கிலி ஆகியவை மேலும் வர்த்தகத்தை செழிப்பாக்கியது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலிருந்தும் வர்த்தகம் பெற்றதால் முன்பை விட விற்பனை மூன்று மடங்கு வரை உயர்ந்தது.

இது முடிவல்ல...

"ஸ்டார்ட்அப் இந்தியா ஸ்டாண்ட்அப் இந்தியா" பிரச்சாரம் ஜனவரி 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உற்சாகமான ஆண்டின் முடிவில் விடை கிடைக்காத பல கேள்விகள் இருக்கவே செய்கின்றன. நூறு மில்லியன் டாலர் பட்டியலில் க்ரோஃபார்ஸ் மற்றும் 'ஓயோ ரூம்ஸ்' நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.. இவை அடுத்த ஜாம்பவான் என்ற நிலையை பெறுமா? பலமொழிகளில் ஸ்னாப்டீல் மற்றும் குவிக்கர் தங்கள் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. பிராந்திய மொழிகள் உயர்வுக்கு இது வித்திடுமா? இன்போசிஸ் நிறுவனம் ஆறு தொழில்முனை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது, இதில் ஒன்று மட்டுமே இந்திய நிறுவனம், இந்த போக்கு தொடருமா? இந்திய தொழில்முனை நிறுவனங்களால் இவர்களை ஈர்க்க முடியுமா? உபெர் நிறுவனம் ஹைதராபாத் நகரில் தனது சர்வதேச அலுவலகத்தை அமைக்க ஐம்பது மில்லியன் டாலரை முதலீடு செய்கிறது. அதிகப் போட்டி உள்ள சூழ்நிலை போக்குவரத்தை சீரமைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆக்கம்: ஆதிரா ஆ நாயர் | தமிழில்: சந்தியா ராஜு