உங்களின் சிறு தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல 6 எளிய வழிகள்!

ஸ்டார்ட் அப்பில் சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தை கடக்க நேரிடுவது இயற்கைதான். ஆனால் இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும்!

1

ஸ்டார்ட்-அப்'கள் சாகசங்களும் கேளிக்கைகளும் நிறைந்ததாகும். அதைத் துவங்குவது ஒரு மகிழ்ச்சி நிறைந்த காலகட்டமாகும். நிச்சயமற்ற காலகட்டம், வெற்றி மற்றும் தோல்வி, வினோதமான நேரங்களில் திட்டமிடல், புதிதாக ஒன்றிணைத்தல் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதே ஸ்டார்ட் அப்பாகும். தொழில்முனைவில் அதற்கே உரிய பல சலுகைகளும் உண்டு. ஒன்றுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து பயனுள்ள ஒன்றை உருவாக்கும் சக்தியை அளிக்கிறது. 

பத்து முதல் இருபதாண்டுகளுக்கு முன்னர் ஸ்டார்ட் அப்கள் அதிகமாக இல்லை. முட்டாள்கள் மட்டுமே ரிஸ்க் எடுப்பார்கள் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால் சிறந்த முதலீட்டாளர்கள், இசையமைப்பாளர்கள், ஓவியர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் ரிஸ்க் எடுப்பது ஆச்சரியமாக உள்ளதல்லவா? ஐன்ஸ்டன், பீத்தோவன், பில் கேட்ஸ், அம்பானி போன்றோர் புகழ்பெற்றவர்களாக இருப்பினும் ஒவ்வொருவரும் வேதனை மிகுந்த சோதனையான காலகட்டத்தை கடந்திருப்பார்கள். இருப்பினும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறினார்கள்.     

பட உதவி: Shutterstock
பட உதவி: Shutterstock

ஸ்டார்ட் அப்கள் தோல்வியடைவதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு ஸ்டார்ட் அப்பும் வெற்றி பெறும்போது எண்ணற்ற பிற ஸ்டார்ட் அப்கள் தோல்வியடைகின்றன. ஸ்டார்ட் அப்கள் தோல்வியடைவதற்கான சில காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

வணிக மாதிரியின் சிக்கல்

அதிகமான வாடிக்கையாளர்களையும் ஃபாலோயர்களையும் பெறவேண்டும் என்பதே எந்த ஒரு வணிகத்திற்கும் அடிப்படைத் தேவையாகும். அடுத்த கட்டமாக இவர்களைக் கொண்டு ஒரு சில உத்திகளை பின்பற்றி வணிகத்தில் பணம் ஈட்டவேண்டும்.

இப்படிப்பட்ட விஷயங்களில் யதார்த்தத்தை மீறிய நம்பிக்கை ஒருவருக்கு இருக்கக்கூடாது. வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும் அவர்களை நிறுவனத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உகந்த வகையில் மாற்றுவதற்கும் ஆழ்ந்த திட்டமிடலும் ஆய்வும் அவசியம். ஒரே நாளில் திடீரென்று அவர்களை அடைவது சாத்தியமற்றதாகும். எப்போதும் அவ்வாறு நடக்காது. ஸ்டார்ட் அப் யோசனையை துவங்குவதற்கு முன்பே வணிக மாதிரி குறித்த முழுமையான ஆராய்ச்சி அவசியம்.

தயாரிப்பின் தரத்தை பரிசோதித்தல்

நீங்கள் மிகச்சிறந்த வணிக திட்டத்தை வடிவமைத்து வைத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்த்தவாறான முடிவு இறுதியில் அமையாது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இறுதியான தயாரிப்பு அல்லது சேவையின் தரத்தை நிறுவனர்கள் பரிசோதிக்காததுதான் அதற்கு முக்கியக் காரணமாகும்.

வாடிக்கையாளர்கள் சிறந்த தர்த்தையே எதிர்பார்ப்பார்கள். எந்தவிதமான குறைபாடுகள் ஏற்பட்டாலும் நிச்சயம் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். ஒரு ஸ்டார்ட் அப் ஒழுங்கற்ற நிறுவனமாக மாறுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

பணப்புழக்கம்

பெரும்பாலான நிறுவனர்கள் தங்களிடமுள்ள நிதி குறைவதை உணர்வதில்லை. மிகவும் தாமதமாகவே இதை உணர்கின்றனர். ஒரு ஸ்டார்ட் அப்பிடம் நிலையான பணப்புழக்கம் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதற்கேற்றவாறு உத்திகளை நிறுவனர்கள் கையாளவேண்டும்.

ஒரு தொடக்க நிறுவனம் வெற்றியடைவதற்கு வாடிக்கையாளர்களை பெறுவதற்கான செலவை ஒரு வருடத்திற்குள் திரும்பப்பெறவேண்டும்.

ஆதரவு இல்லாத நிலை

புதுத்தொழிலின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முறையான சட்ட விதிமுறைகள் அவசியம். வளர்ந்து வரும் தொழி்முனைவோருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் எளிதான தீர்வுகளை நாட்டின் அரசாங்கம் வழங்கவேண்டும்.

உதாரணத்திற்கு இந்திய அரசாங்கம் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டத்தை துவங்கியது. ஆனால் அதில் ஒரு சில குறைபாடுகள் உள்ளது. இத்திட்டம் மற்றும் அதன் பலன்களை அணுகுவதிலுள்ள சிக்கல்கள் அவற்றை பெறுவதற்கு தடையாக உள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள ஸ்டார்ட் அப்கள் வெற்றியடைய இப்படிப்பட்ட திட்டங்களில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

எதிர்மறை கருத்துக்களை கையாளும் விதம்

ஆரம்ப கட்டத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துக்களை சேகரிப்பதற்கு பயப்படக்கூடாது. இந்த கருத்துக்களே தயாரிப்பின் தரத்தை மதிப்பிட உதவும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையை மேம்படுத்தவும் உதவும்.

சில நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்போது விமர்சனங்களும் கருத்துக்களும் பிரச்சனையை புரிந்துகொள்ள உதவும். இதுவே நிறுவனம் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும். எனவே கருத்துக்கள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவசியம்.

மேலாண்மை குழுவை பரிசோதித்தல்

திட்டங்களை உறுதிப்படுத்தி தயாரிப்பு மற்றும் சேவையை வழங்குவதற்கு முன்னால் தேவையான அடிப்படை விஷயங்களில் ஆய்வு செய்திருப்பது அவசியமாகும். எனவே வலுவான மேலாண்மைக் குழுவினால்தான் ஸ்டார்ட் அப்பின் நீண்ட கால வளர்ச்சி சாத்தியப்படும்.

தேவையான ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளாதது, திட்டங்களை மோசமாக செயல்படுத்துவது போன்றவை மோசமான தரத்தைக் கொண்ட தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்க வழிவகுக்கும். இதனால் வாடிக்கையாளர் அதிருப்தி அடைவார்கள். ஆகவே நிறுவனர்கள் தொடர்புடைய மேலாண்மைக் குழுவின் பண்புகளை தொடர்ந்து மதிப்பிடவேண்டும்.

உங்கள் நிறுவனம் பயனிக்க விரும்பும் பாதையை நீங்கள் முன்னரே ஆய்வு செய்வது முக்கியமாகும். இதனால் பல சிக்கல்களைத் தவிர்க்கமுடியும். அடுத்த லேரி பேஜ் நீங்களாகக்கூட இருக்கலாம்.

ஆங்கில கட்டுரையாளர் : பவிக் சர்கேதி