ஏழை மக்களுக்கு சுகாதார தீர்வுகள் கிடைக்க ஆராய்ச்சி பணியை விட்டு களப்பணியாற்றும் விஞ்ஞானி!

0

சுவாதி சுபோத் ஒரு விஞ்ஞானி. மருத்துவர் அல்ல. நோயாளிகளுடன் உரையாடவும் பயிற்சி பெறவில்லை. இருப்பினும் இவர் சமூகத்தின் அடிநிலையில் இருக்கும் மக்களின் போராட்டங்களை உணர்ந்திருந்தார். இவரது ஆய்வகம் எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் இருக்கும் மருத்துவ மையங்களிடையே அமைந்துள்ளது. நோயாளிகளும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் ஐந்தே நிமிடங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதற்காக இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து திரளாக வந்து வாரக்கணக்கில் டெல்லியில் தங்கியிருப்பதைப் இவர் பார்த்திருக்கிறார்.

இந்த அனுபவம் சுவாதியை மனதளவில் பெரிதும் பாதித்தது. இதனால் 41 வயதான இவர் ஆய்வகத்தில் மேற்கொள்ளும் பணியைத் தாண்டி இந்தியாவில் இன்றளவும் அடிப்படை சுகாதார வசதி இல்லாத கிராமப்புறங்களில் ’1 மில்லியன் ஃபார் 1 பில்லியன்’ (1 Million for 1 Billion) என்கிற முயற்சி வாயிலாக பணியாற்ற தீர்மானித்தார். 

புதிய பாதை வகுத்தல்

சுவாதி டெல்லியின் மையப்பகுதியில் வளரந்தார். இவரது குழந்தைப்பருவம் கிளாசிக்கல் நடனம், ஸ்பானிஷ் கிடார் போன்ற மேற்கத்திய வாத்தியங்கள், புத்தகங்கள், தடகளம், கைப்பந்து போன்றவற்றால் நிறைந்திருந்தது. பயோகெமிஸ்ட்ரி போன்ற துறைகள் துவக்கநிலையில் இருந்தபோதும் அவர் உயிரியில் பிரிவை அதிகம் ரசித்தார். இவரது ஆர்வம் காரணமாக டெல்லி பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வி நிறுவனத்தில் பயோகெமிஸ்ட்ரி பிரிவிற்காக தேர்வானார். இறுதியாக டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் பிஎச்டி பெற்றார்.

இவர் டாக்ட்ரேட் பணியின் ஒரு அங்கமாக ரோடா வைரஸ்கான உள்ளூர் தடுப்பூசியை உருவாக்குவதில் பங்களித்தார். இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட பலர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த தடுப்பூசி சந்தையில் கிடைக்கிறது.

சிஎஸ்ஐஆர்-ல் விஞ்ஞானியாக சேர்ந்தார். விரைவான, மலிவான, எளிதாக அணுகக்கூடிய சுகாதார தீர்வுகளை வழங்குவதற்கான ஆய்வு மேற்கொள்ள ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவை உருவாக்கினார். அவர்கள் உருவாக்கிய டிஎன்ஏ சார்ந்த நோய் கண்டறியும் முறைக்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்தார். இதில் நோயின் முன்னேற்றத்தை கணிக்க நோய் உண்டாக்கும் டிஎன்ஏ பயன்படுத்தப்படும். இதைக் கொண்டு சிறப்பான சிகிச்சை வாய்ப்புகளை ஆராயலாம்.

15 ஆண்டுகளுக்கும் மேல் இந்தத் துறையில் பணியாற்றியதால் இதில் காணப்படும் இடைவெளியை அவரால் எளிதாகக் கண்டறிய முடிந்தது. அதாவது ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் சில அசாதாரண பணிகளின் உண்மையான பலன் அதற்கான தேவையிருப்போரை சென்றடைவதில்லை என்பதை உணர்ந்தார்.

”ஆராய்ச்சிகளில் பில்லியன் கணக்கில் செலவிடப்பட்டாலும் பெரும்பாலான மக்களால் அடிப்படை சுகாதார வசதியையே அணுகமுடிவதில்லை. இதனால் பலர் உயிரிழக்கின்றனர். பலருக்கு பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகின்றன. நான் எய்ம்ஸ்-ல் படித்த காலத்தில் இருந்தே பொது சுகாதாரத்தில் ஆர்வம் ஏற்படத் துவங்கியது. இந்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வந்ததால் என்னுடைய ஆய்வகப் பணியிலிருந்து வெளியே வந்து செயல்படத் துவங்கினேன்,” என்றார் சுவாதி.

அங்கீகாரத்தைக் காட்டிலும் சமூக நலனில் கவனம் செலுத்துதல்

சுவாதி தான் ஈடுபடும் பணியை மேலும் அர்த்தமுள்ளதாக்க விரும்பினார். அதேபோல் அவரது சகோதரரான மாணவ் சுபோத்தின் எண்ணங்களும் சுவாதியின் கருத்துகளை ஒத்திருந்தது. 1M1B அல்லது 1 மில்லியன் ஃபார் 1 பில்லியன் மாணவ் அவர்களின் முயற்சியாகும். ஒரு மில்லியன் நபர்களை மேம்படுத்தி ஒரு பில்லியன் நபர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே அவரது விருப்பம். தொழில்முனைவு பயிற்சியளிப்பதில் அவருக்கு இருந்த நிபுணத்தும் சுகாதார ஆய்வில் சுவாதிக்கு இருந்த அனுபவமும் இணைந்து 1M1B முயற்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. சுகாதாரப் பிரிவில் இருக்கும் இடைவெளியை சீரமைக்க கல்வி மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதும் இவ்விருவரின் பொதுவான நம்பிக்கையாகும்.

இந்நிறுவனம் பிரச்சனைகளுக்கான தீர்வை தயாராக வைத்திருப்பவர்கள் (துவக்கநிலையில் இருக்கும் தொழில்முனைவோர்) மற்றும் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் (நவீன சுகாதார வசதியை அணுக இயலாத குடிமக்கள்) ஆகியோரிடையே நிலவும் இடைவெளியை நிரப்ப முயல்கிறது. 

தீர்வு காண முயல்வோருக்கு திறன் பயிற்சியும் தொழில்நுட்பத்தை அணுகுவதற்காக வாய்ப்பையும் வழங்குகிறது. அத்துடன் பிரச்சனைகளை சந்திப்போருக்காக இவர்கள் சொந்தமான சிறு நிறுவனங்களை அமைக்கவும் 1M1B உதவுகிறது.

நிலையான தொழில்முனைவு மாதிரிகளை உருவாக்க தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரப் பிரிவில் செயல்படும் மிகப்பெரிய ஜாம்பவான்களை அணுகுவதற்கான வாய்ப்பையும் 1M1B வழங்குகிறது.

இந்த சிறு நிறுவனங்கள் வாயிலாக சேகரிக்கப்படும் தரவுகள் அந்தப் பகுதியின் சுகாதார தேவைகளை சிறப்பாக மதிப்பிட உதவுவதாகவும் தீர்வுகளை ஆராய உதவுவதாகவும் சுவாதி குறிப்பிட்டார். இந்த சந்தையை அணுகுவதில் தீவிரம் காட்டி வரும் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட்களுக்கு இவை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சுகாதார வசதிகள் தேவைப்படும் நபர் அவற்றை அணுக உதவும் வகையில் எங்களது நிபுணத்துவத்தையும் செயல்படுத்தும் தொகுப்பையும் வழங்கி இந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். அடுத்ததாக சுகாதார வசதியை நேரடியாக வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் மாதிரி தொடர்பாக பணிபுரிந்து வருவதாக சுவாதி தெரிவித்தார். இந்த நடவடிக்கை இந்த மையங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இந்திய கிராமப்புறங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள் மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் வியட்னாமிலும் செயல்பட உள்ளனர்.

ஆர்ஃபன் இம்பேக்ட் உடன் இணைந்து வியட்னாமிய அனாதை இல்லங்களிலும் பணியாற்றுகின்றனர். இந்த இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் 18 வயது நிரம்பியதும் வெளியேறிவிடுவார்கள். அந்த நிலையில் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். எனவே இங்கிருந்து வெளியேற உள்ளவர்களுக்குத் தொழில்முனைவு கல்வியிலும் வாழ்க்கைத் திறன்களிலும் பயிற்சியளிக்கின்றனர். கருப்பின மக்கள் மற்றும் இஸ்பானிய சமூகத்தில் இருக்கும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி அமெரிக்காவில் இவர்கள் பல நிறுவனங்களுடன் பணியாற்றி வருகின்றனர்.

1 பில்லியன் மக்களுக்காக 1 மில்லியன் நபர்களுக்கு பயிற்சியளித்தல்

1M1B உதவித்தொகை மட்டுமே கொண்ட மாதிரியில் இருந்து பெரியளவில் நிதி உயர்த்தி சேவையளிக்கும் மாதிரியாக விரிவடைந்துள்ளது. 2015-ம் ஆண்டு டெல்லியில் அதன் இண்டெர்ன்ஷிப் ப்ரோக்ராமை அறிமுகப்படுத்தி அதன் செயல்பாடுகளைத் துவங்கியது.

”கிட்டத்தட்ட அதே சமயத்தில் நியூயார்க்கிலும் கரீபியன் தீவுகளிலும் இதே போன்ற ப்ரோக்ராமை அறிமுகப்படுத்தினோம். எங்களது திட்டங்கள் இளம் தலைவர்களால் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மிலனில் நடைபெற்ற UC Berkeley’s Global Social Venture Competition-ல் (GSVC) காட்சிப்படுத்தி முதல் ஆண்டிலேயே ஒரு ஸ்டார்ட் அப் 25,000 டாலர் நிதி உயர்த்த உதவினார்கள்,” என்றார் சுவாதி.

2015-ம் ஆண்டு இறுதியில் உத்தர்காண்ட் பகுதியில் அதே மாதிரியான திட்டத்தை துவங்க ஒரு சர்வதேச நிறுவனத்திடமிருந்து நிதி உயர்த்தினர். 

“இதில் நகரில் வசிக்கும் இளைஞர்களை உத்தர்கண்ட் பகுதியில் உள்ள கிராமங்களில் பணியில் ஈடுபடுத்தினோம். அதன் பிறகு தொலை தொடர்பு வாயிலாக சுகாதார பராமரிப்பு, கிராமப்புற சுற்றுலா மற்றும் வாழ்வாதாரம் போன்றவை சார்ந்த முயற்சிகளைத் துவங்கினோம். கிராமங்களிலும் இரண்டாம் நிலை நகரங்களிலும் மற்ற ஸ்டார்ட் அப்களையும் ஈடுபடுத்தி ’ஸ்மார்ட் சிட்டீஸ் சேலஞ்சில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப்பிரதேச அரசாங்கத்தின் ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்திற்காக 2016-ம் ஆண்டு 1M1B பெர்க்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. ஒன்றிணைந்த கிராமப்புற புதுமை ஆய்வகத்தையும் (rural co-innovation lab) அறிமுகப்படுத்தினர். இதில் முதல் முறையாக ஸ்டார்ட் அப்களும் கிராமப்புற தொழில்முனைவோரும் ஒன்றிணைக்கப்பட்டனர். இதன் மூலம் வெறும் மூன்றே மாதத்தில் 16 வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஏழு தொழில்முனைவோரையும் உருவாக்கினர்.

1M1B-க்கு 2017-ம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. டாடா ட்ரஸ்ட்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இவர்களது கூட்டு திட்டமான StartUp Gurukool வாயிலாக ஆறு மாதங்களில் 21 ஸ்டார்ட் அப்களை ஆதரித்து 149 வேலை வாய்ப்புகளை இந்தியாவின் நான்கு மாநிலங்களில் உருவாக்கினர்.

1M1B போட்டிகள் நிறைந்த நீண்ட செயல்முறைக்குப் பிறகு 2017-ம் ஆண்டு இறுதியில் UN DPI (United Nations Department of Public Information) உடன் கூட்டுறவு ஏற்படுத்தியது. விரைவிலேயே 2018-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த சுமார் 30 பேர் அடங்கிய குழுவுடன் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் ஒரு மிகப்பெரிய நிகழ்வை நடத்தினர்.

நகர்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளுடன் பணியாற்றி அங்குள்ள குழந்தைகள் மனதில் தொழில்முனைவு கருத்துகளை பதியவைத்ததாக சுவாதி தெரிவித்தார். இவர்களது நிறுவனம் நகர்புற திட்டமான ’ஃப்யூச்சர் லீடர்ஸ்’ திட்டத்தை பெங்களூருவைச் சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தியது. படைப்பாற்றலுடன்கூடிய வடிவமைப்பு உத்திகள், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் மாட்யூல்கள் உள்ளிட்ட 45 பாடதிட்டங்களை நிறைவுசெய்த பிறகு மாணவர்கள் திட்டங்கள் மேற்கொள்ள கிராமப்புறப் பகுதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து செயல்பட வாய்ப்பளிக்கப்படும்.

சர்வதேச பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது மாணவியின் அம்மா தனது மகள் இந்த திட்டத்தில் பங்கேற்ற பிறகு மிகவும் பணிவாக நடந்துகொள்வதை கவனித்ததாக கூறி நன்றி தெரிவித்தார். அவரது ப்ராஜெக்ட் நிறைவடைந்த பிறகும் கிராமத்தில் எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்,” என சுவாதி நினைவுகூர்ந்தார்.

அடுத்த சில மாதங்களில் ஃப்யூச்சர் லீடர்ஸ் முயற்சியை பிற இந்திய நகரங்களிலும் சிங்கப்பூரிலும் விரிவடையச் செய்வதே இவர்களது திட்டமாகும்.

எவ்வாறு செயல்படுத்தினார்?

இவர்களது செயல்பாடுகள் காரணமாக ஆந்திராவில் தொலைதூரப் பகுதியில் வசிக்கும் வயதான தம்பதி நீரிழிவு நோயை முறையாக நிர்வகிக்க அமெரிக்காவில் உள்ள மருத்துவரிடம் தொழில்நுட்பம் வாயிலாக ஆலோசனை பெறுகின்றனர். குறைவான வருவாய் ஈட்டி வந்த முந்திரி பயிரிடும் விவசாயி ஒருவர் தற்போது ஒரு ஸ்டார்ட் அப்பின் உதவியுடன் தனது தயாரிப்புகளை ஒரு சர்வதேச உணவகத்திற்கு விநியோகித்து வருகிறார்.

”ஒவ்வொரு முறை ஒரு புதிய நாடு அல்லது புதிய பகுதியில் செயல்படத் துவங்கும்போதும் பயனர்கள் சிறிது தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே அவர்களது நிலையை உயர்த்த வந்தவர்களாக எங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் ஒரு பார்ட்னராகவே அவர்களை அணுகுகிறோம். அதே போல் தீர்வுகளை உருவாக்குவதில் அவர்களையும் ஈடுபடுத்துகிறோம். தயார்நிலையில் இருக்கும் தீர்வுகளை வழங்குவதில்லை. அனைத்து தகவல்களையும் நேரடியாக களத்தில் செயல்படும் நபர்களிடமிருந்து தெரிந்து கொள்வது சிறந்தது என்பதால் கிராமத்தில் உள்ள எங்களது குழு உறுப்பினர்களை முக்கிய சந்திப்பில் பங்கேற்க வலியுறுத்துகிறோம்,” என்றார் சுவாதி.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்தவரை சுவாதி ஒரு இளம் குழந்தையின் அம்மா என்பதால் அதிக தூரம் பயணிப்பது சவாலாகவே இருந்தது. “இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தினேன். அவசியம் செல்லவேண்டிய சூழல் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்கிறேன். இல்லையெனில் ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு பகுதியில் இருக்கும் குழு உறுப்பினர்களுடன் அவர்கள் இருக்கும் பகுதியின் நேரத்தைப் பொருத்து தொடர்பில் இருக்கிறேன். இளம் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன். ஸ்கிரீனிங் முகாமின் போது மாவட்ட ஆட்சியருக்கு தொலைதொடர்பு சுகாதாரம் சார்ந்த முன்வடிவத்தை ஆன்லைன் மூலம் திரையிலேயே விவரித்தேன்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா