பைக் மெக்கானிக் தனது மகனை 'குட்டி பில் கேட்ஸ்' ஆக்கிய கதை..!

0

3 வயதில் கணினி படிப்பு..

6 வயதில் கணினி பயிற்சியாளர்..

9 வயதில் கணினி பட்டம்..

15 வயதில் உலகம் சுற்றும் விரிவுரையாளர்..!

- இது இரு சக்கர வாகன மெக்கானிக் தனது மகனை 'குட்டி பில் கேட்ஸ்' ஆக்கிய கதை..!

இன்று மூன்று வயது குழந்தைகள் கைபேசியில் நுழைந்து அனைத்து செயலிகளுக்கு உள்ளும் பயணிப்பது என்பது சாதாரணம். அதுவே 12 ஆண்டுகளுக்கு முன்னால்...? அன்று சிறுவர்கள் கணினிகளை வீடியோ விளையாட்டுக்குத்தான் அதிகமும் பயன்படுத்தினார்கள். ஆனால், டெராடூனை சேர்ந்த அமான் ரஹ்மான் தனது சிறு வயதிலேயே கணினிக்குள் நுழைந்து அனிமேஷன் படங்களை உருவாக்கி, இன்று தனது 15 வது வயதில் உலகம் சுற்றும் அனிமேஷன் விரிவுரையாளர் ஆக பரிணமித்திருக்கிறார். 

இதை சாதனையை உலக சாதனை புத்தகம் அமனை 'உலகின் இளம் விரிவுரையார்' என்று பதிவு செய்து கெளரவித்திருக்கிறது. குட்டி பில் கேட்ஸ் என்று அறியப்படும் இந்த மாணவனுக்கு 11 வயதில் கொழும்பு திறந்த நிலை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியுள்ளது!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இரு சக்கர வாகன மெக்கானிக் முகமது ரஹ்மானின் மகனாக பிறந்த அமன், அனிமேஷன் உலகில் நுழைந்தது ஒன்றும் சாதாரணமானது அல்ல.

"எனக்கு மூன்று வயது இருக்கும் போது அண்ணன் படிப்பதற்காக அப்பா ஒரு பழைய கம்யூட்டர் வாங்கி வந்தாராம். அதனை தொடக்கூடாது என்று எனக்கு கட்டளை. அண்ணன் மட்டும் அதனை பயன்படுத்துவதை பார்க்கும் போது நானும் ஆசையா பார்த்துக் கொண்டு இருப்பேனாம். அம்மா சொல்லுவாங்க. யாரும் இல்லாத நேரம் நான் அதை பயன்படுத்தத் தொடங்கினேன்" என்று. 

"அந்த மூன்று வயதில் துள்ளிக்குதித்து நடனமாடும் எழுத்துக்களை நான் உருவாக்கியதை பார்த்து வியந்த அவர்கள் என்னையும் அந்த கம்யூட்டரை பயன்படுத்த அனுமதித்தார்களாம். பின்னர் மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் மூலம் சின்ன சின்ன வரை கலைகளை நான் உருவாக்க, குடும்பமே மகிழ்ந்து பாராட்டியது என்பது மறக்க முடியாத நினைவுகள். அப்படித்தான் எனக்கு அனிமேஷன் பைத்தியம் பிடித்தது."

என்று யுவர் ஸ்டொரியிடம் மலரும் நினைவுகளை பகிர்ந்தார், அமன்.

மகனின் கணினி மீதான ஆர்வத்தை பார்த்த அப்பா டெராடூனில் உள்ள ஒரு கம்யூட்டர் பயிற்சி பள்ளியில் சேர்த்து விட்டிருக்கிறார். டிசைன், டிசைன் அரீனா, ஜெ.ஐ.சி.ஏ, என்று அந்த பள்ளியில் இருந்த எல்லாவற்றையும் அமன் படித்திருக்கிறார். அடுத்ததாக 2டி, 3டி என்று படிப்பு பயணம் தொடர்ந்திருக்கிறது. அதுவும் ஓராண்டு கல்வி எல்லாவற்றையும் இவர் ஆறு மாதத்துக்குள் படித்து முடித்து அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்திருக்கிறார்.

சரி, அமன் விரிவுரையாளர் ஆனது எப்படி?

"அப்போ ஆறு வயசு இருக்கும். வகுப்பில் அன்றைக்கு டீச்சர் வரவில்லை. பரஸ்பரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். நானும் வகுப்பு எடுத்தேன். சகமானவர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போக என்னை பாராட்டினார்கள். அப்படி தமாஷாக தொடங்கிய கற்பிக்கும் பணி எனக்கு நிரந்தர வேலையாக மாறும் என்று அன்று நான் நினைக்கவில்லை."

என்று சொல்லும் அமன் தனது எட்டு வயதில் ஒரு பயிற்சி பெற்ற விரிவுரையாளர் ஆக மாறிவிட்டிருந்தார்.

நாடு முழுதும் பல கல்லூரிகளுக்கு பயணித்து பயிற்சி வழங்குவதோடு, வெளிநாடுகளுக்கும் சென்று பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். அண்மையில் கொழும்பு சென்று பாடம் நடத்தி வந்திருக்கிறார். மட்டுமல்லாமல் இதுவரை 1000 கும் மேற்பட்ட அனிமேஷன் படங்களையும் அமன் உருவாக்கி இருக்கிறார்.

இவரது திறமையை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதிபா பாட்டில் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர். அதோடு நில்லாமல் சச்சின் டெண்டுலுக்கர், யுவராஜ் சிங் ஆகியோரின் கவனத்தைவும் பெற்றிருக்கிறார்.

அனிமேஷன் என்பது கற்பனை சார்ந்தது. கற்பனை சிறகை எல்லை தாண்டி பறக்க விட்டால்தான் இந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பது அமனின் கருத்து. தற்போது டேராடூன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அமன் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வெளிநாடு சென்று இதேத் துறையில் புதிய தொழில்நுட்பங்ககளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டமாம். அதே போன்று பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு அனிமேஷன் படங்களை தயாரித்து வழங்கும் ஸ்டுடியோ ஒன்றையும் நிறுவ வேண்டும் என்கிற கனவையும் மனதில் வைத்திருக்கிறார். இது மட்டுமல்ல, அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற மற்ற நாட்டினர் இந்தியா வந்து சிறந்த தொழில்நுட்பத்தை கற்றுச் செல்லும் நாட்களை உருவாக்குவதுதான் அமனின் ஆசையாம்.!

அமனின் கனவு நனவாகட்டும்..!

இந்தியில்: ஹரிஷ் | தமிழில் ஜெனிட்டா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

12 வயதில் வார்த்தை உலகின் சூறாவளியான அனிகா ஷர்மா!

18 வயது விஞ்ஞானி கரண் ஜெரத்தின் கண்டுபிடிப்பு மற்றும் புதுமை!