போதைப் பழக்க அடிமையான பஞ்சாப் கிராமத்தை கால்பந்து மூலம் மீட்டெடுக்கும் மனிதர்!

0

2016-ம் ஆண்டு வெளியான ’உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தில் பஞ்சாபில் நிலவும் போதைப் பழக்கம் தொடர்பான பிரச்சனை குறித்து விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மாநிலத்தில் பல காலமாகவே இந்த பிரச்சனை நிலவி வருகிறது. இங்குள்ளவர்களில் 15-35 வயது வரையிலும் உள்ள 8,60,000க்கும் அதிகமான இளைஞர்கள் ஏதோ ஒரு வகையில் போதை மருந்தை எடுத்துக்கொள்வதாக இந்திய அரசாங்கத்தின் ஆய்வு தெரிவிக்கிறது என 2017-ம் ஆண்டின் பிபிசி அறிக்கை குறிப்பிடுகிறது. பெரிய நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை இந்த தீயபழக்கம் பரவியுள்ளது.

பஞ்சாபின் ஜலந்திரில் உள்ள தெஹ்சில் ஃபில்லார் பகுதியில் உள்ள ரூர்கா கலன் கிராமத்திலும் இதே நிலைமையே நீடிக்கிறது. ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொறியாளரான குர்மங்கல் தாஸ் சோனி விளையாட்டுகள் வாயிலாக மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

’யூத் ஃபுட்பால் கிளப்’ என்கிற பெயரில் குர்மங்கல் தனது கிராமத்தில் ஒரு கால்பந்து அணியைத் துவங்கினார். 2003-ம் ஆண்டு இந்த அகாடமி பதிவு பெற்ற ஒரு சங்கத்துடன் இணைந்துகொண்டது. இந்தச் சங்கம் தற்போது கிளப்பின் நிதி நிலவரத்தை மேற்பார்வையிடுகிறது. இந்த கிளப்பிற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அணி உருவான முதல் சில ஆண்டுகளிலேயே பஞ்சாப் கால்பந்து லீக்கின் இரண்டாவது டிவிஷனில் விளையாடியது.

இந்தக் கால்பந்து கிளப் வெற்றிகரமாக செயல்படத் துவங்கியதை அடுத்து ரூர்கா கலனில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துக்கொண்டது. தங்குமிட வசதியுடன்கூடிய கால்பந்து அகாடமியைச் சேர்ந்த 40 மாணவர்களின் செலவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. 12 கிராமங்களில் உள்ள 12 மையங்களில் 2,000 குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி, கிட் போன்றவை வழங்கப்படுகிறது.

இந்த கிளப் கணிணி பயிற்சி மையத்தையும் நிர்வகித்து வருகிறது. இங்கு 300 மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாது 84 சிறுமிகளுக்கு கால்பந்து பயிற்சியும் 100 கபடி விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவும் வழங்குகிறது. அத்துடன் சுகாதார பரிசோதனைகள், இளைஞர்கள் மேம்பாடு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள் போன்றவற்றையும் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.

தி ட்ரிப்யூன் உடனான உரையாடலில் குர்மங்கல் கூறுகையில்,

“பஞ்சாபில் போதைப் பழக்கத்திற்கு மக்கள் அடிமையாவது மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இங்குள்ள இளைஞர்களுக்கு சரியான முன்னுதாரணம் இல்லை. இவர்கள் சிறப்பாக கற்று தங்களது திறன் கொண்டு முன்னேற உதவும் வகையில் ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறோம்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA