எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற குப்பை சேகரிப்பவரின் மகன்!

0

சமீபத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை எய்ம்ஸ் வெளியிட்டபோது ஆஷாராம் சௌத்ரியின் வீடு கொண்டாட்டத்தில் இருந்தது. 18 வயதான இவர் குப்பை அள்ளுபவரின் மகன். இவர் தனது முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆஷாராம் தனது வெற்றியின் முக்கியத்துவத்தை குடும்பத்தினர், குறிப்பாக தனது அப்பா அறியமாட்டார் என்றார். இவர் மே மாதம் 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 707-வது இடத்தையும் ஓ.பி.சி பிரிவில் 141-வது இடத்தையும் பிடித்துள்ளார் என ’தி க்விண்ட்’ தெரிவிக்கிறது. ஆஷாராம் உடன்பிறந்தவர்கள் இரண்டு பேர். மூத்த மகனான ஆஷாராம் புனேவில் உள்ள தக்‌ஷினா ஃபவுண்டேஷனில் உயர்கல்வி படித்தார். தனது கிராமத்திற்குத் திரும்பி அங்குள்ள மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்.

மத்தியப்பிரதேசத்தின் தேவாஸ் பகுதியைச் சேர்ந்த ஆஷாராமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் வாயிலாக பாராட்டுகையில், 

“எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றதற்கும் ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஸ் படிக்க தேர்வு செய்யப்பட்டதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பீர்கள் என நம்புகிறேன்,” என்றார்.

ராகுல் தனது கடிதத்தில்,

 “உங்கள் வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையிலும் நீங்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றதை நான் அறிவேன். உங்களது அர்ப்பணிப்பிற்கும் கடின உழைப்பிற்கும் உங்களது வெற்றி ஒரு சான்றாகும்,” என குறிப்பிட்டிருந்ததாக பிடிஐ தெரிவிக்கிறது. 

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஆஷாராம் மின்சார வசதியும் கழிவறை வசதியும் இல்லாத வீட்டிலேயே வளர்ந்தார். மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவிக்கையில்,

”என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு நன்றி. உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு நிதி உதவி வழங்க ஆட்சியரிடம் கோரியுள்ளேன். மேலும் அவர் ’மேதாவி வித்யார்த்தி யோஜனா’ திட்டத்திற்கு தகுதியானவர். இதன் மூலம் அவரது கல்வி கட்டணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். நான் அவரைத் தொடர்பு கொண்டு அவரது வெற்றியையும் மன உறுதியையும் பாராட்டுவேன்,” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

“அவரது குடும்பத்திற்கு கான்கிரீட் வீடு, கழிப்பறை, மின்சாரம் ஆகிய வசதிகள் தேவைப்படுவதைத் தெரிந்துகொண்டேன். இவற்றை பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்க இருக்கிறோம். சமூக ஊடகங்கள் தவறான விஷயங்களை மட்டுமே பரப்புகிறது என்றே பலர் நம்புகின்றனர். ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்பக்கூடியது,” என்றார்.

ஆஷாராம் தனது அப்பா அளித்த ஆதரவால்தான் வெற்றியடைந்ததாக தெரிவிக்கிறார். மருத்துவர் ஆகவேண்டும் என்பதும் மக்களுக்கு சேவையளிக்கவேண்டும் என்பதுமே அவரது விருப்பம். ஜூலை மாதம் 22-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க ஜோத்பூருக்குப் புறப்பட்டார். இவரது பயணத்திற்கான செலவை தேவாஸ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பாண்டே ஏற்றுக்கொண்டார். அத்துடன் நிர்வாகம் மாநில அரசாங்க அதிகாரி ஒருவரை ஆஷாராமுடன் ராஜஸ்தானிற்கு அனுப்பி வைத்தது. பிடிஐ உடனான உரையாடலில் அவர் கூறுகையில்,

”நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். எம்பிபிஎஸ் முடித்ததும் நரம்பியல் துறையில் எம்எஸ் படிக்க விரும்புகிறேன்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL