மகளிருக்காக ஒரு மறுபிறப்பு: பெண்சக்திக்கு துணைநிற்கும் அமைப்பு!

0

சமூக நலன்கள் மீதான ஈடுபாட்டின் விளைவாக, இந்த இளைஞர் 2004-ம் ஆண்டு கடத்தப்பட்டார். ஆனால், தன்னைக் கடத்தியவர்களின் பிடியில் இருந்து தப்பிய பின்னர்தான், பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள தீர்மானித்தார். பிகார் மாநிலம் சாம்பரனில் உள்ள ராக்ஸல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பொறியாளர், குந்தன் ஸ்ரீவத்சவா என்ற இந்த இளைஞர்தான் இப்போது நாட்டின் இளம் சமூகப் போராளிகளுள் ஒருவராகத் திகழ்பவர்.

யூனிவர்சல் ஹியூமானிட்டி விருது, பிதாதிஷ் விருது உள்ளிட்ட பல்வேறு மனிதநேய விருதுகளைப் பெற்ற குந்தன், தன் வியக்கத்தகு வாழ்க்கைக் குறிப்புகளை நினைவு கூறும்போது, "கல்வி அமைப்புகளை சரிசெய்வதற்காக, அரசு நிர்வாகக் குளறுபடிகளுக்கும், மாஃபியாக்களுக்கும் எதிராக போராடியதன் காரணமாகவே நான் கடத்தப்பட்டேன். அந்த குண்டர்கள் பிடியில் அச்சுறுத்தலுடன் மறைவிடத்தில் ஏழு நாட்கள் அடைக்கப்பட்டேன். அந்தச் சோதனையில் இருந்து பிழைப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், ஏழு நாட்களுக்குப் பிறகு ஒரு வழியாக அவர்களது பிடியில் இருந்து தப்பித்தேன். அப்படித் தப்பிக்கும்போது என் கால் மீது பாய்ந்த துப்பாக்கித் தோட்டாவையும் தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று" என்று தன் மறுபிறப்பை சிலிர்ப்புடன் விவரிக்கிறார் .


குந்தன் ஸ்ரீவத்சவா
குந்தன் ஸ்ரீவத்சவா

இந்தச் சம்பவமே இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. குந்தன் தனது வீட்டுக்குத் திரும்பிய பிறகுதான், தனது போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் மேன்மையையும் உணர்ந்தார். "எல்லா முயற்சிகளையும் என்னால் எளிதில் கைவிட்டிருக்க முடியும். ஆனால், அந்தச் சம்பவம்தான் என்னை மென்மேலும் வலுவானப் போராளியாக உருவெடுக்க வைத்தது" என்கிறார் அவர்.

அதன்பின்னர், தனது படிப்பை முடித்து பொறியியல் பட்டம் பெற்றதைக் குறிப்பிடும் அவர், "எனது படிப்பை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நான் கடத்தப்பட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு, என் தம்பி புற்றுநோயால் இறந்தார். அதேவேளையில், சமூகத்துக்காகவும் கல்விக்காகவும் உரிய அளவில் பங்காற்ற வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடன் இருந்தேன்" என்கிறார்.

தன் கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதில் பல முயற்சிகளைத் தொடர்ந்தார். பின்னர், டெல்லிக்குச் சென்ற அவர், 91மொபைல்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியத் தொடங்கினார்.

"எனக்கும் என் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு வேலை மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், டெல்லியில் குடியேறிய பிறகு, பெண் கொடுமைகள் குறித்த தகவல்களை அவ்வப்போது கேட்கவும் படிக்கவும் நேரிட்டது. அப்போதுதான் "ஹியூமானிட்டி ஃபவுண்டேஷன்" (Humanity Foundation) அமைப்பில் என்னை இணைத்துக்கொள்ள முடிவு செய்தேன். நம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற நோக்கத்துக்காக செயலாற்றும் இந்தத் தன்னார்வ நிறுவனம் முழுக்க முழுக்க இளைஞர்களால் இயங்கப்படுகிறது" என்கிறார் குந்தன்.

துடிப்பான இளைஞர்களால் நடத்தப்படும் ஹியூமானிட்டி ஃபவுண்டேஷன், ஒரு முழுமையான தற்சார்பு அமைப்பாகும். இதைக் கோடிட்டுக் காட்டும் அவர், "எங்கள் அமைப்பை நடத்துவதற்காக, நாங்கள் யாரிடமும் நன்கொடை பெறுவது இல்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டுதான் செயல்படுத்தி வருகிறோம்" என்கிறார்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைத் தடுக்கப் போராடுவது மட்டுமின்றி, பெண்கள் பலரின் மறுவாழ்வுக்கு இந்த அமைப்பின் மூலம் உறுதுணைபுரிகிறார் குந்தன். "பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சுத் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல்கள், வரதட்சணைக் கொடுமைகள் முதலான கொடூரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய உதவிகளைச் செய்து வருகிறோம். அவர்கள் சமூகத்தில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு வேண்டிய வலிமையையும், உத்வேகத்தையும், வல்லமையையும் பெறுவதற்கு தேவையான உதவிகளைச் செய்கிறோம்" என்கிறார் குந்தன்.


இவற்றுடன், இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான சமூக மாற்றங்களுக்கு வித்திடும் வகையில், ஆன்மாவின் குரல்கள் என்ற செயல்திட்டத்தையும் இந்த அறக்கட்டளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது குறித்து விவரிக்கும் குந்தன், "நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பேச்சாளர்கள் பலரையும் அழைத்து வந்து, உளவியல் நோய்க் கூறுகள், மன மாற்றங்கள் போன்ற பல முக்கியத் தலைப்புகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என்கிறார்.

நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றால், சமூகத்தின் வேர்களில் இருந்து பிரச்சினைகள் களையப்பட வேண்டும் என்று கூறும் அவர், "சமூகத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். அதற்காக, இளம் தலைமுறையினரை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறோம். எனவே, பள்ளிகளுக்குச் சென்று பாலின சமத்துவம், ஆரோக்கிய உணவுகள், சுகாதாரம் உள்ளிட்ட பல தலைப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்கிறார்.

நம் சமூகத்தில் நாம் உருவாக்கிய அக்கறையின்மைப் போக்கினை பேசும் 'டைட்டில் இஸ் அன்டைட்டில்' (Title is Untitle) என்ற தலைப்பிலான புத்தகத்தையும் சமீபத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார் குந்தன்.

"கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல்... இவையெல்லாம் வெறும் விவாதத் தலைப்புகளாக மட்டுமே நீடிக்காமல், இவை அனைத்தையும் நாம் நிஜமாக்க வேண்டியது அவசியம். அதற்கு, ஒவ்வொரு தனி மனிதரிடம் இருந்தும் மாற்றம் தொடங்கப்பட வேண்டும்" என்கிறார் குந்தன் உறுதியாக .