'பூம் பூம் ரோபோ டா...' குருக்ஷேத்ரத்தில் ரோபோக்களின் அணிவகுப்பு!

பொறியியல் மாணவர்கள் கலக்கும் அறிவியல் களம் 

0

நவீன உலகத்தின் அறிவியல் அதிசயங்களில் ஒன்று மனிதனின் கட்டளையை ஏற்று, எதையும் தானே செய்யும் ரோபோக்கள். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 17–ஆம் தேதி தொடங்கிய குருக்ஷேத்திரா தொழில்நுட்ப ஆண்டு விழாவிலும் பார்வையாளர்களின் அறிவுக்கண்ணை தொட்டுள்ளன கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள அதிசய ரோபோக்கள்... அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு:

தூய்மைக்கு உதவும் ‘ஸ்வச்-பாட்’ ரோபோ

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 'ஸ்வச் பாரத்' திட்டத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட ரோபோவாக இருக்குமோ என்று நீங்கள் யூகித்திருந்தால் உங்களுக்கு நூறு மதிப்பெண்கள்! இதற்கான எண்ணம் தோன்றியதோ கல்லூரி வளாகத்தில் தான். மரங்கள் சூழ்ந்த கல்லூரி சாலைகளில் அவ்வப்போது விழும் இலைகளையும் குப்பைகளையும் நாள் முழுவதும் சுத்தம் செய்ய தேவைப்படும் மனிதவளம் அதிகம். எத்தனையோ விஷயங்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாம் இதற்கு ஒரு தீர்வை ஏன் கண்டுபிடிக்கக்கூடாது என்று எண்ணி தங்கள் மூளையை கசக்கிப் பிழிந்து இந்த தூய்மை செய்யும் ‘ஸ்வச்-பாட்’ ரோபோவை உருவாக்கியுள்ளனர் நான்கு பேர் கொண்ட மாணவர் குழு. 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் கிரண் பிரானேஷ், வீணா ப்ரியலக்ஷ்மி, விக்னேஷ்வரன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிக்கும் சங்கர சுப்ரமணியன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ரோபோவால் ப்ளூ-டூத் தொழில்நுட்பத்துடன் மொபைல் ஆப்-பை பயன்படுத்தி கல்லூரி வளாகம், பூங்காக்கள், வீட்டு தோட்டம் என ஓரளவுக்கு சமமான தரைகளை உடைய இடங்களை தூய்மைப்படுத்த முடியும். 

“இந்த ரோபோவில் உள்ள சக்கரங்களையும் மோட்டார்களையும் இன்னும் மேம்படுத்தினால் சாலைகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதில் மேலும் மண்ணை ஃபில்ட்டர் செய்யும் கருவி பொருத்தினால் கடற்கரையையும் சுத்தம் செய்யலாம்” என்கிறார் விக்னேஷ்வரன். 

பத்து கிலோவிற்கும் குறைவான எடையை உடைய இந்த ரோபோ, சுமார் முப்பது கிலோ அளவிலான குப்பைகளை சேகரிக்கும் திறன் கொண்டது. ஒரு மாதத்தில் உருவான இந்த ரோபோவை உருவாக்க இவர்கள் செலவிட்டது பத்தாயிரம் ரூபாய். உங்கள் ஸ்மார்ட் போனில் ஒரு தட்டு தட்டினால், உங்கள் வீட்டு தோட்டத்தை பளிச் ஆக்க்கிட்விம் இந்த சூப்பர் ரோபோ...

பார்வையற்றோரின் உதவிக்கு ‘டெக்ஸ்டர் பாட்’ ரோபோ

குருக்ஷேத்திரா தொழில்நுட்ப ஆண்டு விழாவின் அதிகாரபூர்வமான அடையாள மேஸ்காட் இந்த ‘டெக்ஸ்டர் பாட்’ ரோபோ. அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் கொண்ட குழு இந்த மேஸ்காட்டிற்கு உயிர் அளித்துள்ளனர். விழாவிற்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினரின் புகைப்படத்தை முன்னரே இந்த ரோபோவின் உள்ளே ப்ரோக்ராம் செய்துவிட்டால், அவரைக் கண்டதும் அறிந்து, அவருடன் கை குலுக்கி அவரை மேடைக்கு அழைத்துச் செல்லும் திறன் வாய்ந்தது இது. இந்த செயல்பாடு அனைத்தும் ஒரு ஸ்மார்ட் போன் ஆப் மூலமாகவே செய்ய இயலும். 

எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிக்கும் ரகுராமன், கௌதமன், ஸ்ரீராம், சபரீஷ், மெட்டிரியல் சயின்ஸ் துறையில் படிக்கும் திருநாவுக்கரசு, பிரிண்டிங் துறையில் படிக்கும் கிருஷ்ணா பாலாஜி மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் பிரசன்னா வெங்கடேஷ் அடங்கிய குழு உருவாக்கியிருக்கும் இந்த ரோபோவால் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளையும் பதிவு செய்யமுடியும். இருபத்தைந்தாயிரம் ருபாய் செலவில், இருபத்தைந்து நாட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது இது. பார்வையற்றோருக்கு சாலைகளை கடக்கவும், அவர்களுக்கு ஒரு தோழனாய் உதவவும் பயன்படுகிறது, பார்க்க சிறுபிள்ளை போல் இருக்கும் இந்த சுட்டி ரோபோ.

எதிரிகளை கண்டறிய ‘ஸ்பை-பாட்’ ரோபோ

ஆமையின் உருவத்தில் காட்சியளிக்கும் இந்த சீரியஸ் ரோபோ நிலத்திலும், நீரிலும் செயல்பட வல்லது. இதனுள்ளே மறைவாக பொருத்தப்பட்டுள்ள கேமராவின் உதவியுடன் எதிரிகளை நோட்டம் பார்த்து, அவர்கள் எவ்வளவு தொலைவில் உள்ளனர் என்பதை நேரலையாக பதிவு செய்யலாம். 

“இராணுவத்திற்கும், கடற்படைக்கும் உதவும் திறன் கொண்ட இந்த ரோபோ, காடுகளில் விலங்குகளின் நடமாட்டத்தையும் பார்வையிட உதவும். இது பார்க்க ஆமை போல வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதனை ரோபோ என்று கண்டறிவது கடினம்.” என்கின்றார் இதனை உருவாக்கிய குழுவை சேர்ந்த சுபாஷினி. 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் சுபாஷினி, நிஷா சிங்க், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிக்கும் கௌசல்யா மற்றும் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் படிக்கும் லோகேஷ் பிரபுராஜ் ஆகியோர் சேர்ந்து இரண்டரை வாரங்களில் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். மற்ற ரோபோக்களை போலவே ப்ளூ-டூத் மூலம் வேலை செய்கிறது இந்த கலக்கும் ரோபோ.

பூம் பூம் ரோபோடா... என்று அனைவரையும் முணுமுணுக்கவைத்த வெள்ளித்திரையின் எந்திரனை மிஞ்சிவிட்டன இந்த கல்லூரி சூப்பர் ஸ்டார்கள் அறிவியல் ஆர்வத்தைக் கொண்டு உருவாக்கியுள்ள ஆச்சரியப்படுத்தும் ரோபோக்கள்...

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்