இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா’வின் உடல் தகனம் செய்யப்பட்டது!

0

86 வயதாகும் கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் பலநூறு பாடல்களை மெட்டிசைத்து பாடியுள்ளார். நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் பெற்றவர். 

சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதையும் அவர் பெற்றவர். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர் பாலுமுரளி கிருஷ்ணா. இவர் திருவிளையாடல் படத்தில் பாடிய ‘ஒரு நாள் போதுமா...” என்ற பாடல் இன்றளவும் கேட்பவர் மனதை கரையவைக்கும். 

நேற்று சென்னையில் காலமான பாலமுரளி கிருஷ்ணவின் உடலுக்கு திரையுலகை சேர்ந்தோர்களும், இசைத்துறைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூ. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சிவக்குமார், பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பாடகிகள் சுதா ரகுநாதன், நடிகை வைஜெயந்தி மாலா, வீணை ராஜேஷ் வைத்தியா உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டனர். 

நடிகர் கமல்ஹாசன் இன்று பால முரளி கிருஷ்ணா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ”பாலமுரளி கிருஷ்ணா மிகப்பெரிய சாதனையாளர். அவருடைய மறைவு கலை உலகிற்கு பெரிய இழப்பு. அவரை சந்திக்க, பாடல்களை வாங்கிச்செல்ல பலமுறை இங்கு வந்திருக்கிறேன். அவரது இசை என்றும் வாழும்,” என்றார். 

இசைமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.