வெறுங்காலுடன் ஓடி தங்கம் வென்ற செருப்பு தைப்பவரின் மகள் சயாலி!

0

மஸ்ஜிதியின் 'சில்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படம் நினைவிருக்கிறதா? தன் தங்கைக்கு உதவுவதற்காக ஒரு சிறுவன் பள்ளிப் போட்டியில் வெறுங்காலுடன் ஓடுவானே... ஆம், கிட்டத்தட்ட அதுபோன்ற நிஜக் கதையின் நாயகிதான் சயாலி. இவர், செருப்பு தைப்பவர் ஒருவரின் மகள் என்பதுதான் மாறுபட்ட அம்சம். சயாலி ஓட்டப்பந்தயப் போட்டியில் வெறுங்காலுடன் ஓடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தன் பெற்றோருக்கு உதவும் பொருட்டு கூடுதலாக பணம் ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த ஓட்டப்பந்தயம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மும்பையின் பரேலில் உள்ள ஆர்.எம். பட் உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி சயாலி. இவர் 3000 மீட்டர் தூரத்தை 12:27.8 மணித்துளிகளில் கடந்து, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ஓட்டப் பந்தயப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். பாதி தூரத்தைக் கடந்தபோது வெயிலில் தன் கால்கள் சுட்டெரிந்த வலியையும், உடலின் தளர்ச்சியையும் நினைவுகூர்ந்த சயாலி, எப்படியாவது முதலிடம் பெற்று பரிசை வென்றிட வேண்டும் என்ற உத்வேகம்தான் தன்னை உந்தித் தள்ளியது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

சயாலியின் தந்தை மங்கேஷ் மாதம் ரூ.3000-ல் இருந்து 10000 வரை மட்டுமே சம்பாதித்து குடும்பத்தைக் கவனிப்பவர். "நான் சம்பாதிக்கும் சிறு தொகையும் என் இரு மகள்களின் படிப்புக்கே சரியாக இருக்கிறது. என் மூத்த மகள் மயூரி, இன்பர்மேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ படிப்பு படிக்கிறார். என் மனைவி சவிதா உடல்நிலைக் குறைவால் படுத்துக் கிடக்கிறார். இந்த நிலையில், எங்களுக்கு இன்று சயாலி பெருமை தேடி தந்திருக்கிறார்" என்று மிட் டே-விடம் உணர்வுபூர்வமாகச் சொன்னார் அந்த ஏழைத் தந்தை.

படங்கள் உதவி - மிட் டே