ஊழியர்களின் மகிழ்ச்சியே நிறுவன வெற்றியின் முக்கிய அம்சம்: ஒரு பார்வை!

0

உலகம் அதிக டிஜிட்டல்மயமாகி வருகிறது. தானியங்கல் முறை, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களை அதிகம் சார்ந்துள்ளது. இத்தகைய சூழலில் பணியிடத்தில் இருக்கும் மனித வளங்கள் கவனிக்கப்படாமலும் அங்கீகரிக்கப்படாமலும் போகிறது. 

நிறுவனங்கள் பெரும்பாலும் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்படும் நிலையில் சிறப்பான நிறுவனங்கள் மனித வளங்களைக் கொண்டே உருவாக்கப்படுகிறது. ஆகவே பணியிடக் கலாச்சாரத்தில் மனிதவளம் என்கிற அம்சத்தை எவ்வாறு மறுஅறிமுகம் செய்வது என்கிற கேள்வி பல தொழில்முறையினரிடையே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. 

முழுமையான விதத்தில் அணுகப்படும்போது வெளித்தோற்றத்தில் இருப்பது போன்று சவால் நிறைந்ததல்ல என்பதை அறியலாம். பணியிடங்களில் ஒரு சில பகுதிகளில் மனிதவளத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகமுடியும். 

மனித வளத்தில் ’மனிதன்’ என்கிற அம்சத்தை இணைத்தல்

நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடையே உணர்வு ரீதியான இணைப்பை ஏற்படுத்தி புரிதல், பண்படுத்துதல், வளர்த்தெடுத்தல் ஆகிய பண்புகளை ஊக்குவிப்பது அவசியமானதாகும். மக்களை பணியுடன் இணைக்கும் உணர்வுகள் பணியிடத்தில் உள்ள வாடிக்கையாளர்களிடம் கவனம் செலுத்தக்கூடிய, புதுமையான சிந்தனையுடன்கூடிய, குழு சார்ந்த அல்லது திறமையான ஊழியர்களின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த உணர்வு ரீதியான இணைப்பு கூட்டுபணி, பணியாளர் மனநிறைவு, பணியிடத்தில் ஒன்றியிருத்தல், நிதித் திறன் உள்ளிட்டவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

விருப்புரிமை முயற்சிகள் (discretionary efforts) என்று பரவலாக பயன்படுத்தப்படும் சொல்லானது நியமிக்கப்பட்ட கடமைகளைத் தாண்டி விருப்பத்துடன் மேற்கொள்ளப்படும் கூடுதல் முயற்சிகளாகும். ஊழியர்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை நிறுவனங்கள் எந்த அளவிற்கு உருவாக்கிக்கொடுக்கிறது என்பதே அதை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இதை சாத்தியப்படுத்த பணியின் நோக்கம் ஒருவரின் நம்பிக்கையுடன் ஒத்திசைந்து இருக்கவேண்டும். உதாரணத்திற்கு உலகிலேயே மிகச்சிறந்த தயாரிப்பை உருவாக்கவேண்டும் என்பதும் உலகை சிறப்பாக மாற்ற வணிகதைப் பயன்படுத்தவேண்டும் என்பதும் ஒத்திசைந்திருக்கவேண்டும்.

பெரும்பாலான நிறுவனங்கள் ஆரோக்கியம், தொடர்பில் இருத்தல் போன்ற முதல் நிலை இணைப்பையே ஊழியர்களுடன் ஏற்படுத்திக்கொள்கிறது. வெகு சில நிறுவனங்களே நல்ல மேலாளர்களை உருவாக்குதல், செயல்திறன் அமைப்புகளை உருவாக்குதல் போன்ற நிலையை எட்டுகிறது. அதிலும் மிகக்குறைந்த நிறுவனங்களே நம்பிக்கை உருவாக்குவது, நிறுவனத்தின் நோக்கத்துடன் தனிநபர் நம்பிக்கை ஒன்றியிருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. இதை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.

மாற்றத்தை ஏற்படுத்துதல்

மாறி வரும் இன்றைய உலகில் நவீன இளம் தலைமுறையினரே ஊழியர்களாக இருப்பதால் பல்வேறு நிறுவனங்கள் தங்களது திறமையான ஊழியர்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்யத் தேவையான சில திட்டங்களையும் முயற்சிகளையும் அறிமுகப்படுத்துகிறது.

பெரும்பாலான பணியிடங்கள் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் மற்றும் மனிதவள கொள்கைகளைக் கொண்டுள்ளது. இவை வெளிப்படத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. அத்துடன் நிபுணர்கள் மற்றும் தலைமைக்குழுக்களிடையே இருக்கும் தகவல்தொடர்பு சார்ந்த தடைகளைத் தகர்த்தெறியவும் இவை உதவுகிறது. இன்று நாம் காணும் முன்னணி நிறுவனங்கள் அனைத்துமே வண்ணமயமான அலுவலக அமைப்பைக் கொண்டுள்ளது.

ஊழியர்கள் உள்ளார்ந்த மகிழ்ச்சியடையும் நிலையை எட்டவும் இவை உதவுகிறது. மேலும் சிஇஓ-க்களுடனான சந்திப்பு அமர்வுகள், நெட்வொர்க் இணைப்புகள், வாராந்திர சந்திப்புகள் போன்றவை தலைமைக்குழுவுடன் நேரடியாக தொடர்புகொள்ள உதவும் அம்சங்களாகும். இவை ஆரம்பகட்ட இணைப்பில் இருக்கும் சிக்கல்களைக் களைந்து செயல்திறன் மேம்பட உதவும். இந்த அமர்வுகளில் பங்கேற்க ஊழியர்கள் அயல்நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு கிடைப்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்கும்.

ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு செவிமடுத்து அவர்களது கருத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கினால் செயல்திறன் அதிகரிப்பதுடன் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறும் விகிதமும் குறையும். ஊழியர்களின் விருப்பம், கவலை, கோரிக்கைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தால், நிறுவனம் அவர்களது கருத்துகளுக்கு செவிமடுக்கிறது என்பதையும் அவர்கள் மீதுள்ள அக்கறை உணர்வும் வெளிப்படும். 

பல நிறுவனங்கள் ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அதற்கேற்ற மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது, உதாரணத்திற்கு சாதாரண உடை அணிவதை அனுமதித்தல், வாழ்க்கைத் துணையை அதே பணியிடத்தில் பணியிலமர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஊழியர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தபட்டுள்ளது.

சில ஸ்டார்ட் அப்களும் மனதளவில் இளமையாக செயல்படும் நிறுவனங்களும் நூலகங்கள், இணையதள கஃபேக்கள், விளையாட்டு பகுதிகள், ஊழியர்களுக்கான பிரத்யேக விளையாட்டு பகுதிகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த சில ஆண்டுகளில் மனித வளத் துறையின் பொறுப்புகள் வெகுவாக மாறியுள்ளது. மனித வளம் என்பது பெரும்பாலும் ஊழியர்கள் பலனடையும் வகையிலான திட்டங்களை நிர்வகித்தல், கொள்கைகள் வரைதல், பணியிலமர்த்துதல், சாத்தியக்கூறுகள் நிறைந்த ஊழியர்களை நேர்காணல் செய்தல் என நிர்வாகம் சார்ந்ததாகவே கருதப்பட்டு வந்தது. எனினும் தற்போது நிறுவனங்கள் மனித வள செயல்பாடுகளை நிறுவனத்தின் உத்தி திட்டமிடல் நடவடிக்கைகளிலேயே இணைத்துக்கொள்ள துவங்கியுள்ளது. இது பலனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. இன்றுள்ள மனித வள தலைவர்கள் நிறுவனத்தின் தலைமைக் குழுவிடம் புதிய கொள்கைகளையும் முயற்சிகளையும் பரிந்துரைக்கின்றனர். நிறுவனம் தீவிரமாக செயல்படும் பிரிவு ஒன்வொன்றிற்கும் ஏற்ற அறிவு மற்றும் திறமையை நிறுவனம் அணுகுவதை உறுதிசெய்யவே இத்தகைய கொள்கைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

அலுவலகச் சூழல்

இனிமையான அனுபவம் என்பது பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் அலுவலகத்தினுள் நுழையும் முதல் நாள் துவங்குகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக் கதையை எடுத்துரைக்கும் பணியில் இணையும் அனுபவம் துவங்கி அலுவலகத்தில் உள்ள பொழுதுபோக்கு வசதிகள் வரை புதிய ஊழியர் சௌகரியமாக உணரவேண்டும். வெறும் எண்ணிக்கைக்காக அவர் பணியிலமர்த்தப்படவில்லை என்பதை தெளிவாக்கவேண்டும். அவர்கள் தங்களுக்கே உரிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதால் அவர்கள் நிறுவனத்தின் சொத்து. அவர்கள் வளர்ச்சியடையவும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

நவீன உடற்பயிற்சி வசதி, பல்வேறு உணவு வகைகளை உள்ளடக்கிய உணவகங்கள், வருடம் முழுவதும் மேற்கொள்ளப்படும் சுகாதார முயற்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவையே வெற்றிக்கான ரகசிய மந்திரமாகும். 

தொழில்முறையினர் தங்களது நலனிலும் முழுமையான ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவதால் பணியிடங்களில் இத்தகைய வசதிகளை அதிகம் எதிர்நோக்குகின்றனர். துறையில் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் மருத்துவ அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஊழியர்களின் அவசர மருத்துவ தேவைகளுக்காக மருத்துவருடன் கூடிய முழுமையான அமைப்பாக செயல்படுகிறது.

எனினும் இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே ஊழியர்களை ஊக்கத்துடன் வைத்திருக்க உதவாது. ஊழியர்கள் தங்களது தொழில்நுட்ப வல்லமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் விதத்தில் நிறுவனங்கள் ஹேக்கதான்கள், டிஜிதான்கள் போன்ற புதுமையான யோசனைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இவற்றை எண்ணற்ற நிறுவனங்கள் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான டூலாகவும் பயன்படுத்துகிறது. தற்போது புதிய திறன்களைக் கற்பிக்கும் முயற்சிகளை கற்றல் மற்றும் வளர்ச்சிக் குழுக்கள் தவறாமல் இணைத்துக்கொள்கிறது. திறன் கற்பிக்கும் முயற்சிகள் ஒரு முதலீடாகவே கருதப்படுகிறது. ஊழியர்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு இதன் பலனை அடைவார்கள்.

மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் நிபுணர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் அற்புதமான வாய்ப்புகளை வழங்கிவருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான தொழில்முறையினரும் இதையே எதிர்பார்க்கின்றனர்.

”மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மற்றவர்களையும் மகிழ்விப்பார்கள்” என்கிறார் ஜெர்மனியில் பிறந்த நாட்குறிப்பு நூலை எழுதிய புகழ்பெற்ற ஆன் ஃபிராங்க். இன்றைய மனித வள முதலீடு மேலாண்மை சூழலில் இது மிகச்சரியாக பொருந்தும். ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு ஊழியர் நிச்சயம் செயல்திறன் மிக்க ஊழியராக இருப்பார். இத்தகைய செயல்திறன் மிக்க ஊழியர்களே வளர்ச்சியை சாத்தியப்படுத்துவார்கள். எனவே ஊழியர்களை மகிழ்ச்சியாகவும் ஊக்கத்துடனும் வைத்திருப்பதே முக்கியமாகும். உலகளவிலான திறன்களையும் அவர்களது செயல்திறனையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : தன்வீர் சௌலத் (இவர் Synechron நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் பொது மேலாளர்) | தமிழில் : ஸ்ரீவித்யா

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிப்பவை அல்ல.)