உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை உலகிற்கு உணர்த்தும் வீடியோ வாலின்டியர்கள்!

0

மத்தியப் பிரதேசம் பாகாயனில் உள்ள ஒரு பள்ளியில் 201 மாணவர்கள் படிக்கின்றனர். அந்தப் பள்ளியில் நாற்பது நாட்களில் இரண்டு முறை மட்டுமே மதிய உணவு அளிக்கப்பட்டது. மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் தினந்தோறும் அளிக்கப்பட வேண்டிய உணவு. இப்பிரச்சனை தொடர்பாக உள்ளூர் பத்திரிகையாளர் ஆர்த்தி பாய், குறும்படம் ஒன்றை எடுத்தார். மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய அந்தப் படத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அவல நிலையை விளக்கினார். மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு அந்தப் படம் போக, அவர்கள் நடவடிக்கை எடுத்து அடுத்த நாளில் இருந்து மதிய உணவுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினர்.

மற்றொரு சம்பவம் ஜார்கண்ட் மாநிலம், மதுராப்பூரில் நடந்தது. அங்கு ஒரு ட்ரான்ஸ்பார்மர் பழுதாகி நான்கு ஆண்டுகளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. ட்ரான்ஸ்பார்மரை சரி செய்ய வேண்டுமானால் அதற்கு 20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டார்கள் மின்வாரியத் துறை அதிகாரிகள். ஆர்த்தி பாய் போலவே முகேஷ் என்னும் உள்ளூர் பத்திரிகையாளர், இந்தப் பிரச்சனையை குறும் படமாக எடுத்தார். உடனடியாக இதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு, ட்ரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டு, ஒரே மாதத்தில் மின்சாரம் வந்தது.

146 மாவட்டங்களில் இது போல வீடியோக்கள் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் 200 பேர் வரையில் இருக்கின்றனர். அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த ஆர்த்திபாயும், முகேஷூம். இந்தத் திட்டம் “மக்கள் மொழியில் செய்திகள்” என்ற பெயரில் 2003ல் ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்தவர் ஜெசிக்கா மேபெரி. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட, பாரபட்சம் பார்க்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தங்களது உரிமை எதுவென்று தெரியாத மக்களின் பிரச்சனைகளை இரண்டில் இருந்து ஐந்து நிமிட படமாக எப்படி பதிவு செய்வது என ஜெசிகா மேபெரி பயிற்சி அளிக்கிறார். அந்த அமைப்புக்குப் பெயர் "வீடியோ வாலன்ட்டியர்ஸ்" (Video Volunteers -VV).

எப்படி ஆரம்பித்தது விவி?

கடந்த 2002ல் நியூயார்க்கைச் சேர்ந்த ஜெசிகா மேபெரி, அமெரிக்க இந்திய அறக்கட்டளையின் டபிள்யூ. ஜே. கிளின்ட்டன் ஃபெலோவாக இந்தியாவிற்கு வந்தார். ஊரகப் பகுதியில் உள்ள பெண்களுக்கு படம் எடுப்பது பற்றி பயிற்சி அளிப்பதற்காக அவர் வந்தார். இந்தியர்களின் படைப்பாக்கத் திறனைக் கண்ட அவர், அந்தத் திறனை வைத்தே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கத் தீர்வு காணலாம் என அறிந்தார். கேட்கப்படாத மக்களின் குரலை அனைவரையும் கேட்கச் செய்ய பிரதானப் பத்திரிகையாளர்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்த வீடியோ வாலன்ட்டியர்ஸ் அமைப்பைத் தொடங்கினார்.

“உலகின் சக்தி வாய்ந்த ஊடகங்கள் எல்லாம் உள்ள ஒரு நாடு இது. ஆனால் கிராமப்புற மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பிரதான ஊடகங்களில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இடம் பெறுகின்றன. அரசின் ஒரு திட்டம் நடைமுறைக்கு வருகிறதா என்பதைப் பற்றி விவாதிக்கும் ஒரு பத்திரிகையாளர் அதன் கடைசிப் பயனாளி பற்றி அறிவதில்லை. ஊடகவியலாளரோ அல்லது பார்வையாளரோ யாருக்குமே அசல் பிரச்சனை என்ன என்று புரிவதில்லை”

என்கிறார் ஜெசிகா.

விவி எப்படி வேலை செய்கிறது?

விளிம்பு நிலையில் உள்ள மக்களின் குரலை பிரதான ஊடகங்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இருந்த போதிலும் தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் அவர்களுடைய பிரச்சனைகளை அனைவருக்கும் எடுத்துச் செல்வதிலும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சக்தி வாய்ந்த வாகனங்களாக செயல்படுகின்றன.

வீடியோ ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்ற ஆர்வமுடையவர்களுக்கு விலை அதிகமில்லாத சாதாரண கேமராக்களை வைத்தே பயிற்சி அளிக்கிறது விவி. படமாக்குவதற்குரிய பிரச்சனையை எப்படிக் கண்டறிவது? அதை எப்படித் தருவது? அந்தப் பிரச்சனைகள் குறித்த ஒவ்வொருவரின் மனநிலையையும் அவர்கள் தேடும் தீர்வையும் உள்ளடக்கிய படமாக அதை எப்படி உருவாக்குவது? என்று ஒவ்வொரு நிலையிலும் விவி பயிற்சி அளிக்கிறது. அவர்கள் படமாக்கியதற்குப் பிறகு கோவாவில் உள்ள விவி தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள எடிட்டர்கள் படத்தை இறுதி வடிவத்திற்கு கொண்டு வந்து வெளியிடுகின்றனர்.

ஒரு விவி செய்தியாளர் படம் எடுக்கிறார்
ஒரு விவி செய்தியாளர் படம் எடுக்கிறார்

ஒவ்வொரு விவி செய்தியாளருக்கும் அவர்கள் அளிக்கும் வீடியோக்களுக்குத் தகுந்தாற் போல் ஆயிரத்து 500ல் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை தரப்படுகிறது. சிறந்த வீடியோக்கள் ‘தாக்கத்தை ஏற்படுத்தும் வீடியோக்கள்’ என்ற வரிசையில் கொண்டு வரப்பட்டு அதற்கு 5 ஆயிரம் வரையில் தருகிறார்கள். இதில் பெரும்பாலான செய்தியாளர்கள் பகுதி நேரப் பணியாளர்கள்தான். விவசாயத் தொழிலாளர்கள், காய்கறி விற்பனையாளர்களாக இருப்பவர்கள். சமூக மாற்றத்தை விரும்பக் கூடியவர்கள். ஒரு சிலர் ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையாக விவி-க்காகவே தங்களை அற்பணித்துக் கொள்கிறார்கள்.

விவி வித்தியாசமான முறையிலும் தனிச்சிறப்பான வகையிலும் பணியாற்றுகிறது. டெஹல்கா, நியூஸ் லாண்டரி, ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர் போன்ற பெரும் ஊடக நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. எப்போதும் புதிய செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு புதிய வித்தியாசமான செய்திகளை விவி அளிக்கிறது. அவர்கள் தங்கள் வழியாக பிரதான ஊடகங்களுக்கு அந்தச் செய்திகளை அளிக்கின்றனர். ஊடக உலகை மேலும் ஜனநாயகமயப்படுத்தும் விதமாக லாப நோக்கமற்ற அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் விவி இணைந்து பணியாற்றுகிறது.

சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் விவி நடத்துகிறது. 'சட்டப் பிரிவு 17- தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்' என்பது அதில் ஒன்று. இதைப் பற்றிச் சொல்லும் ஜெசிகா, “2012ல்தான் இந்தப் பிரச்சார இயக்கத்தை தொடங்கினோம். தீண்டாமைப் பிரச்சனை என்பது உள்ளூர் மட்டத்தில் தீர்க்கக் கூடியதல்ல. அந்த அளவுக்கு அது உள்ளூர் மக்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்துள்ளது. தீண்டாமையின் பல்வேறுபட்ட வடிவங்களை ஊடக வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் இதை ஒரு மிகப்பெரிய தேசியப் பிரச்சனையாக அங்கீகரிக்கச் செய்ய வேண்டும் என்பதும் அரசு இதற்குத் தீர்வுகாணக் கடமைப்பட்டுள்ளது என வலியுறுத்துவதும்தான் எங்களது இறுதி இலக்கு” என்கிறார். ஒரு தலித் குழந்தையை பள்ளியில் தனியாக உட்கார வைப்பதில் இருந்து, உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களின் வழியே தலித்துகள் செருப்பணிந்து போகக் கூடாது என்பது வரையிலான தீண்டாமையின் அத்தனை வடிவங்களையும் விவி வீடியோவாக்கியுள்ளது. இதுவரையில் 60 வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சாரம் தொடர்கிறது.

இது தவிர வேறு பல பிரச்சார இயக்கங்களையும் நடத்துகிறது விவி. கல்வி உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ரைட் டூ எஜூக்கேஷன் – பாஸ் யா ஃபெயில்? என்ற பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது விவி. கல்வி உரிமை செயல்படுத்தப்படுவது தொடர்பாக அறிந்து கொள்ள இதுவரையில் 100 பள்ளிகளில் கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறது விவி. இதே போல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு, அதில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவி செய்தியாளர்கள் இதுவரையில் 120 வீடியோக்களை எடுத்துள்ளனர்.

மாற்றம் சாத்தியமா?

“ஒரே வார்த்தையில் பதில் சொல்வதானால் “ஆமாம்”. இதுவரையில் விவி 3 ஆயிரம் வீடியோக்களை எடுத்துள்ளது. அதில் 617 வீடியோக்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று பூரிக்கிறார் ஜெசிகா. ‘சட்டப்பிரிவு 17- தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்’ பிரச்சாரத்தின் மூலம் மாற்றம் நடந்த ஒரு வெற்றிச் சம்பவத்தை நினைவு கூர்கிறார் அவர்,

“ராஜஸ்தானில் உள்ள ஒரு ஊரகப் பகுதியில் உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களின் வழியே தலித்துகள் செருப்பணிந்து செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒருவர் அந்தத் தெரு வழியாக செருப்பணிந்து வரவில்லை என்றால் அவர் தலித் எனப் புரிந்து கொள்ளலாம். இதை விவி செய்தியாளர் தனது வீடியோவில் பதிவு செய்தார். அது மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கி, தற்போது அந்தப் பழக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.”

அடுத்து என்ன?

“தரவுகளை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த விரும்புகிறோம்” என்கிறார் ஜெசிகா. தங்களின் வீடியோக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்ள போன் சர்வேக்களை எடுக்க விவி திட்டமிட்டுள்ளதாக அவர் விளக்குகிறார். “அரசுத் திட்டங்களின் உண்மை நிலை குறித்த தரவுகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் 50 கழிப்பறைகளைக் கட்டுவதற்கு மாநில அரசு திட்டமிடுகிறது என வைத்துக் கொள்வோம். ஆனால் அது கட்டுவதென்னமோ ஐந்துதான்? இதை எப்படி வெளி உலகிற்கு எடுத்துச் செல்வது? புகார் செய்வது? இந்த உரிமைக்காக அந்த ஜனங்கள் எப்படி போராடுவார்கள்? அரசின் அனைத்துத் திட்டங்களும் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். அவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. இதை நோக்கித்தான் விவி காலடி எடுத்து வைக்க இருக்கிறது. ஊழலையும் வளர்ச்சித் திட்டங்களில் பாரபட்சம் பார்க்கப்படுவதையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியாக இது இருக்கும் என நான் நம்புகிறேன்” என்கிறார் ஜெசிகா

சமூகத் தொழில் முனைவராக இந்தியாவில் ஜெசிகாவின் அனுபவம் எப்படி என்று கேட்டால், அவர் பின்வருமாறு பதில் சொல்கிறார்.

“இங்கு ஏற்கனவே அற்புதமான தீர்வுகள் இருக்கின்றன. அவற்றை அமல்படுத்துகிறேன் அவ்வளவுதான். விவி மூலம் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வைக்கிறோம். ஏனெனில் அவர்களைத் தவிர வேறு யாரும் அதைச் செய்ய முடியாது.” 

ஆக்கம் : ஸ்வேதா விட்டா | தமிழில்: சிவா தமிழ்ச் செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

சமூக பொறுப்பு தொடர்பு கட்டுரைகள்:

ஒடிசாவில் மலையின மக்களுக்காகத் துவக்கப்பட்ட சமூக நிறுவனம்!

கல்வி கற்பித்தலில் பிசித்ரா பாத்சாலாவின் தனித்துவமான அனுகுமுறை!