ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு உதவும் செயலி 'Current Affairs'

1

நாம் தினந்தோறும் எவ்வளவோ செய்திகளை படிக்கிறோம். அதில் எத்தனை உங்களுக்கு நினைவில் இருக்கிறது?. பெரும்பாலான செய்திகளை படித்து முடித்ததும் மறந்துவிடுகிறோம் என்பதே உண்மை. ஆனால் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு செய்திகள் முக்கியம். அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது அதைவிட முக்கியம். குறிப்பாக அரசுத்தேர்வுகள், வங்கித்தேர்வுகள் போன்றவற்றிலும், அன்றாட செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அதற்கு உதவும் செயலியை வடிவமைத்திருக்கிறார்கள் டெஸ்ட்புக் நிறுவனத்தினர்.

டெஸ்ட்புக் குழு
டெஸ்ட்புக் குழு

யார் இவர்கள்?

'டெஸ்ட்புக்' (Testbook) என்ற நிறுவனம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். கடந்த ஜனவரி 2014 - ம் ஆண்டு ஆறு ஐஐடி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து துவங்கிய நிறுவனம் தான் இது. அசுதோஷ் குமார், நரேந்திர அகர்வால், மனோஜ் முன்னா, பிரவீன் அகர்வால் (ஐஐடி பாம்பேவில் பயின்றவர்), யத்வேந்தர் சம்பவாத் மற்றும் அபிஷேக் சாகர் (ஐஐடி டெல்லியில் பயின்றவர்) ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டது. பிறகு வேறு வேறு போட்டித்தேர்வுகளையும் உள்ளே கொண்டுவந்திருக்கிறார்கள். CAT, SBI PO, SBI CLERK மற்றும் IBPS PO ஆகியவை அக்டோபர் 2014 - ல் சேர்க்கப்பட்டிருக்கிறது. பொதுஅறிவு மற்றும் நடப்பு விவரங்களையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் லெட்ஸ்வென்சர் மற்றும் ஏஎச்வென்சர் ஆகிய நிறுவனங்கள் உட்பட, சில சிறு முதலீட்டு நிறுவனங்களிலிருந்தும் சுமார் 1.5 கோடி ரூபாய் நிதியாக பெற்றிருக்கிறார்கள்.

இந்த செயலி என்ன செய்கிறது?

"டெய்லி கரண்ட் அஃபயர்ஸ் மற்றும் க்விஸ்” என்ற பெயரில் அன்றாட செய்திகளை 370 எழுத்துக்களில், ஆண்ட்ராய்டு செயலியில் வழங்குகிறார்கள். இது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கிடைக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி தினம்தினம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, செய்திகளாக ஒருவர் படிக்க முடியும். படித்து முடித்த பிறகு அந்த செய்தி தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். அந்த செய்தியை எவ்வளவு படித்து புரிந்துகொண்டோம் என்பதை கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை தவறான விடையளித்திருந்தால் மீண்டும் அதே செய்திக்கு சென்று சரிபார்க்கலாம்.

போட்டித்தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதம். முக்கியமல்லாத செய்திகளை தவிர்க்கவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த செயலி வெறும் 20 நாட்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2.3 எம்.பி அளவே உள்ள இந்த செயலியை 2ஜி இணைய வேகத்திலும் பயன்படுத்தலாம் என்பது சிறப்பான ஒன்று. எனவே எத்தகைய செல்போன் வைத்திருப்பவர்களும் இதை பயன்படுத்த முடியும்.

நடப்பு நிகழ்வுகளை தெரிந்துகொள்ள ஏன் தனியே செயலி உருவாக்க வேண்டும்? என்ற கேள்விக்கு அசுதோஷ் பதிலளித்தார்.

முதலில் நிறைய பாடங்களை உள்ளடக்கிய ஈ-லேர்னிங் செயலி ஒன்றை உருவாக்கினோம். ஆனால் அது அதிக அளவு சேமிப்பை எடுத்துக்கொண்டது. கரண்ட் அஃபயர்ஸுக்கு இணைய இணைப்பு ஒரு பிரச்சினையாக இருந்தது. அரசாங்க வேலைகளுக்கும், எல்லா விதமான போட்டித்தேர்வுகளுக்கும் இது அத்தியாவசியமான ஒன்றாக இருந்ததால், தனியே ஒரு செயலி உருவாக்கிவிட்டோம். இது 4 கோடி பேர் கொண்ட வலுவான சந்தையை குறி வைக்க உதவியது.

இந்த செயலியை இலவசமாகவே பயன்படுத்தலாம் என்பது சிறப்பு. மிகப்பெரிய வெற்றியடைந்த பிறகு பல்வேறு வழிகளில் பணமீட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். இப்போதைக்கு ஆண்ட்ராய்டில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் விண்டோஸ் மற்றும் ஐஓஎஸ் செயலியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

சிறப்பம்சம்

* நூறு வார்த்தைகள் கொண்ட செய்தியை கொண்டிருக்கிறது. அதற்கு பிறகு கேள்விகள் கேட்கப்படுகிறது.

* முக்கியமான செய்திகளை மட்டும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதை இணைய இணைப்பு இல்லாத சமயத்தில் கூட எடுத்து படிக்க முடியும்

* நோடிஃபிகேசன்களை பார்க்கவோ, தடைசெய்யவோ வகை செய்யப்பட்டிருக்கிறது.

பிடித்தமானவை

இந்த செயலி எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சின்ன சின்ன புல்லட் பாயிண்டுகளை பயன்படுத்தி அன்றாட செய்திகளை தருகிறார்கள். இது படிக்கவும், புரிந்துகொள்ளவும் உதவும் முக்கிய அம்சம். படித்து முடித்த உடனேயே கேள்விகள் கேட்கப்படுவதால், அவற்றுக்கு பதிலளிக்கும்பொழுது நம் மனதில் எளிதில் பதியும்.

ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் இருப்பதால், அவரவருக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இந்தியாவின் பெரும்பாலோர்க்கு இந்த இரு மொழிகள் புரியும் என்பதால், மிகப்பெரிய சந்தை இதற்கு இருக்கிறது. செய்திகளை புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு,பிறகு படிக்கும் வசதியும் இதில் இருக்கிறது.

செய்ய வேண்டியவை

தற்பொழுது செய்திகளை சின்னசின்ன புல்லட் குறிகளாக கொடுக்கிறார்கள். முழுமையான செய்திகளை படிக்க வழி இல்லை என்பது ஒரு பின்னடைவு. இந்த சேவையும் கிடைத்தால், ஒரு செய்தியின் முழுமையான வடிவத்தை ஒருவர் தெரிந்துகொள்ள இது உதவும்.

ஒருவர் தன் நண்பர்களை இந்த செயலியில் இணைத்து, அவரோடு க்விஸ் போட்டி வைத்து போட்டி போட்டு வெற்றி பெறுவது போல கேம்கள் எதாவது இருந்தால், பயனர்களை தொடர்ந்து செயலிக்குள்ளேயே தக்கவைக்க உதவும்.

யுவர்ஸ்டோரி ஆய்வு

ஆண்டுக்கு 70 - 80 லட்சம் இந்தியர்கள், சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் வங்கித்தேர்வு எழுதுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் என்பதால், இந்த செயலிக்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது. கரண்ட் அஃபயர்ஸ் என்ற ஒன்று எல்லா போட்டித்தேர்வுக்கும் அவசியமான ஒன்று என்பது இந்த செயலிக்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்த சந்தையில், ஆன்லைன் த்யாரி, ஷர்மா டுடோரியல்ஸ், ஜக்ரான் போன்ற பலரும் இருப்பதால் போட்டி வலுவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு செயலிகள் அன்றாடம் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் செய்தி செயலிகள் முக்கியமானவை. அதுவும் கல்வி சார்ந்த செயலிகள், கல்விச்சந்தையையே புரட்டிபோட்டிருக்கின்றன. எனினும் பாரம்பரியமான கல்விமுறையை இவற்றால் காலி செய்ய முடியாது என்பது கவனிக்க வேண்டியது. செய்திகளை வெறுமனே படிப்பதோடல்லாமல், அதை புரிந்து, மனதில் நிறுத்துவதற்கு தேவையான உதவிகளை இந்த செயலி செய்வதால் இது நிச்சயம் வெற்றி பெரும் என்றே தோன்றுகிறது.

இந்த செயலியை தரவிறக்க : CurrentAffairs

ஆங்கிலத்தில் : HARSHITH MALLYA | தமிழில் : Swara Vaithee

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இதே போன்று போட்டித்தேர்வு செயலிகள் தொடர்பு கட்டுரைகள்:

உள்ளூர் மொழியில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக உதவும் கல்வி வழிகாட்டி செயலி

பிராந்திய மொழி செய்திகளை சுருக்கமாக வழங்கும் 'வேடுநியூஸ்'