'இக்கட்டான சூழலிலும் பொறுப்பை தட்டிக்கழிக்காது எதிர்கொள்ளும் துணிவை என் தாயிடம் கற்றேன்'- கவின்கேர் சிகே.ரங்கநாதன்

1

நாம் அனைவரும் எந்த நிலையை அடைந்தாலும் நம் வாழ்வில் மறவாது, மறக்கமுடியாத நபராக என்றென்றும் இருப்பவர் நமது தாய் தான். சமூகத்தில் உயர்ந்த பதவியை அடைந்தாலும், செல்வந்தராக திகழ்ந்தாலும், கடந்து வந்த பாதையை நினைக்கையில், ஒவ்வொருவரின் வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கும் நபராக திகழ்பவர் அவர்களது தாயாகத் தான் இருப்பார் என்பதில்லை ஐயமில்லை.

'அன்னையர் தினத்தை' கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாளில், தொழிலில் வெற்றிகரமான சிறந்த ஒரு இடத்தை பிடித்தவரும், தனக்கே உரிய நற்குணங்களுடன் சமூகத்தில் மதிக்கக்கூடிய நபராகத் திகழும் கவின்கேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான திரு.சிகே.ரங்கநாதன், தனக்கு என்றென்றும் ஊக்கமாகத் திகழ்ந்த தனது தாயைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

போராடும் குணம்

"எனது பத்தொன்பதாவது வயதில் என் அப்பா இறந்துவிட்டார்.  அப்பா செய்துவந்த பிசினசைப் பற்றி அன்றுவரை அறியாத எனது அம்மா, உடனடியாக சந்தர்ப்பத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்டு செயலில் இறங்கினார். பிசினசை அவரே பொறுப்பேற்று நடத்த முடிவுசெய்து, அப்பா விட்டுச்சென்ற கடமைகளையும் முடிக்க துணிவுடன் நின்றார்" எனக் கூறினார் ரங்கநாதன்.  

“நான் என் அம்மாவிடம் பெரிதாய் மதிப்பது அவருடைய போராடும் குணம். அவ்வளவு சுலபமாக ஒரு விஷயத்தை முடியவில்லை என ஒத்துக்கொள்ளமாட்டார். அதே சமயம் நினைத்த இடத்தை அடையும்வரை தொடர்ந்து முயற்சித்து, போராடி அதில் வெற்றியும் அடைவார்."

சூழலுக்கு ஏற்ப சமாளிக்கும் திறன்

இவரது தந்தை தீடிரென இறந்ததால், தொழில் கடன்கள் இருந்தது. வங்கியில் இரண்டு லட்சம் ரூபாய் செலுத்தவேண்டிய சூழல் இருந்தது ஆனால் அந்த அளவு குடும்பத்தில் நிதி இல்லை. அப்போதும் மனம் தளராது என் அம்மா சொன்னது,

"சொத்தை விற்று அந்த கடனை அடைக்கலாம். அதற்குச் சேர்ந்து போராடலாம் என என்னையும் என் சகோதரர்களையும் ஊக்கப்படுத்தினார். மருத்துவப்பயிற்சி மேற்கொண்டு வந்த எனது ஒரு அண்ணனும், வழக்கறிஞராக இருந்த மற்றொரு சகோதரரும் அம்மாவிற்குத் துணையாக நிற்க குடும்ப பிசினசில் ஈடுபடத்தொடங்கினர்."

வருங்காலத்தை மட்டும் சிந்தித்து வாழ்

தனது மனதில் ஆழப்பதிந்த தனது தாயின் மற்றொரு குணத்தைப் பற்றி ரங்கநாதன் பெருமைப்பட கூறுகையில்,

"முடிந்துபோன விஷயத்தை மீண்டும் யோசிக்காதே, மனம் தளராதே மற்றும் அதை மறந்து முன்னெறிச்செல். கடந்ததை நினைத்து வருத்தப் படுவது அவருக்கு கொஞ்சமும் பிடிக்காது. அவரும் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பதை பார்த்திருக்கிறோம். அதனால் எங்களது வாழ்க்கை முறையே அப்படி மாறிப் போனது". 

அழுது புலம்புவதை விடு

கடினமான காலங்கள் வரும் போது நாம் அழுவோம். ஆனால் என் அம்மாவுக்கு அழதால் பிடிக்காது. அழுதால், வெங்காயத்தை கண்ணில் பிழிந்து விடுவேன் என்பார்.

"எந்த ஒரு விஷயமானாலும், வீட்டில் இழப்போ, தோல்வியோ, தொழிலில் நஷ்டமோ எதுவாக இருந்தாலும் அதை நினைத்து அழுது, புலம்புவது என் அம்மாவிற்கு சுத்தமாகப் பிடிக்காது. என்னையும் என் சகோதரர்களையும் சிறுவயது முதலே மனம் தளராமல் துணிந்து செயல்படவே ஊக்கப்படுத்தியுள்ளார். அதுவே எனக்கு இன்றுவரை என் தொழிலிலும் நன்மையை பயந்து வருகிறது."

பொறுப்பேற்றுக்கொள்ளுதல்

பிசினசுக்காக நிறைய நண்பர்கள், உறவினர்களிடமிருந்து இவரது அப்பா இருபதாயிரம், பத்தாயிரம் என பத்திரம் ஏதுமின்றி கடன் பெற்றிருந்தார். பெரிய தொகை இல்லாததால் ரசீது எல்லாம் இல்லை. அதுவும் கூட சேர்ந்து மொத்தமாக இரண்டு லட்சத்திற்கு வந்தது. அப்பா தீடிரென இறந்ததால் பலரும், 'ரசீது இல்லாததால் எனக்குத் தெரியாது எனச் சொல்லுவிடு'என அம்மாவிடம் அறிவுறுத்தினார்கள். ஆனால அம்மா ஒரே வார்த்தையில், 

“அவரோட கடன் என்றால், அது என்னுடைய கடனாகும். ரசீது எல்லாம் கேட்கப் போவதில்லை. அவரை நம்பிக் கொடுத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு வருடம் அவகாசம் கேட்டு அவர்களிடம் திரும்பக் கொடுத்துவிடுவேன்” என்று சொன்னார். 

"நமது பொறுப்பை எந்தவொரு தருணத்திலும், இக்கட்டான காலக்கட்டமாக இருப்பினும் தட்டிக்கழிக்கக்கூடாது, துணிந்து நின்று பொறுப்பேற்று அந்த கடமையை முடித்தேறவேண்டும், " என்பதை நான் என் தாயிடம் அன்று கற்றேன்.

இன்றுவரை எனது நிறுவனத்திலும் அதை பின்பற்றி வருகிறேன் என்கிறார் ரங்கநாதன். 

இழந்த வாய்ப்புக்களை கொண்டாடதே என்று அம்மா அடிக்கடிச் சொல்வார். ஒரு பிரச்சினையிலிருந்து தப்பித்து ஓடாமல், தொலைநோக்குப் பார்வைக் கொண்டு, போராடி வெல்ல வேண்டும் என்ற பக்குவமும் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட முக்கியமான பாடம்.

"இன்று, என் குழுவினரிடம், இந்த தவறை செய்து விட்டோம், அவ்வளவு தான், அதை பற்றியே புலம்புவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை, இனி மேல் நடக்க வேண்டியதை பார்ப்போம் எனச் சொல்வேன்".

குடும்பத் தொழிலைவிட்டு ரங்கநாதன் தனது சொந்த நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்த போது, அவரது அம்மாவுக்கு சற்று வருத்தம் இருந்ததாக தெரிவித்தார். "அம்மா வேண்டாம் எனச் சொன்னார். எதற்காக தனியாய் போய் தடுமாற வேண்டும், சகோதரர்களோடு சேர்ந்து இருக்க என்னை வலியுறுத்தினார்," என்றார். 

ஆனால், நான் தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என உறுதியாக நினைத்தேன். ஒருக்கட்டத்தில் அதன் காரணமாய் வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போதும் கூட என் அம்மா,

‘எங்கிருந்தாலும் வெற்றிகரமாய் வாழ்’ எனச் சொல்லி அனுப்பினார். ஆனாலும், எப்படி இருக்கிறாய்? நான் எதாவது உதவி செய்ய வேண்டுமா? என விசாரித்துக் கொண்டே தான் இருப்பார், என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

'அன்னையர் தினம்' கொண்டாடும் இவ்வேளையில் சிகே.ரங்கநாதன் எல்லாருக்கும் கூறுவது ஒன்றே ஒன்று தான். 

'நம்மை இவ்வளவு அருமையாய் பார்த்துக் கொண்டு வளர்த்த அம்மாவிடம் நன்றியாய் இருங்கள். அவர்களை என்றும் நினைத்துப் பார்த்து, அவர்களுக்குரிய மரியாதையை செலுத்தி, தேவையை பூர்த்தி செய்யுங்கள். இது நம் எல்லாருடைய தலையாய கடமையாகும்." 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan