திருச்செங்கோட்டில் சாதனை: இரண்டே நாளில் 2018 பெண்கள் வெப்சைட் உருவாக்கி அசத்தினர்!

சேலம் மற்றும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த 2018 மாணவிகள் மற்றும் பெண்கள் வெப்சைட் உருவாக்கக் கற்றுக்கொண்டு இச்சாதனையை படைத்துள்ளனர்.

4

சேலம் அருகே திருச்செங்கோட்டில் 2018 பெண்கள் சேர்ந்து சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்துள்ளனர். அதாவது இப்பெண்களுக்கு ஹேக்கத்தான் நிகழ்வை நடத்தி  இரண்டே நாட்களில் தங்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கி அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். சத்தமில்லாமல் நடந்த இந்த சாதனைக்கு சொந்தக்காரர் செந்தில்குமார்.

மிகப்பெரிய எம்.என்.சி. நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்த்த செந்தில்குமார், தற்போது தொழில் முனைவோராக உள்ளார். மென்பொருள் துறையில் வேலை பார்த்த இவருக்கு ஏன் பெண்கள் பெருமளவில் இந்தத் துறையில் இல்லை என உள்ளுக்குள் எழுந்த கேள்வியே, இன்று இத்தனை பெண்களை சாதனையாளர்கள் ஆக்கியுள்ளது.

“எல்லா முன்னணி மென்பொருள் நிறுவனங்களிலும் ஹார்ட்வேர் துறையில் ஆண்களே பெருமளவில் உள்ளனர். பெண்களை விரல்விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலும் அவர்கள் ஹெச்.ஆர். அல்லது அக்கவுண்ட் செக்சனில் தான் இருப்பர். காரணம் பெண்கள் இந்தத் துறைக்கு ஏற்றவர்கள் அல்ல என்ற பிம்பம் தான். இதனை உடைக்க வேண்டும் என நான் நினைத்தேன். அதற்கான முயற்சிதான் இத்தகைய ஹேக்கத்தான்கள்,” என்கிறார் செந்தில்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மகேந்திரா குரூப் ஆப் இன்ஸ்டியூசன்ஸ்-ல் கடந்த 3 மற்றும் 4-ம் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2018 பெண்கள் கலந்து கொண்டனர். கல்லூரி மற்றும் பணிபுரியும் பெண்கள் இதில் பெருமளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல் நாளன்று இணையதளம் தொடங்குவதற்கான அடிப்படை பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டுள்ளன. இரண்டாவது நாளில் தாங்கள் கற்றுக் கொண்டதற்கு செயல்வடிவம் கொடுத்து ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கென தனித்தனியே இணையதளம் உருவாக்கியுள்ளனர்.

செந்தில் குமார்
செந்தில் குமார்

“இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே மென்பொருள் துறையில் பின் தங்கிய நகரங்களில் உள்ள பெண்களுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். எல்லா முன்னணி நிறுவனங்களுமே பெண்களுக்கான முன்னேற்றத்திற்கென பல்வேறு ஸ்கார்ஷிப்புகளை அளிக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் சிறுநகரத்து பெண்களைச் சென்று சேர்கிறதா என்றால் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு இது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லை. எங்களது இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் அங்குள்ள பெண்களும் மென்பொருள் துறையில் சளைத்தவர்கள் இல்லை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்,” எனக் கூறுகிறார் செந்தில்.

திருச்செங்கோட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஆசியன் வோர்ல்ட் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்துள்ளது. அடுத்தகட்டமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. ஏனெனில் இதற்கு முன் இத்தனை பெண்கள் ஒரே இடத்தில் சேர்ந்து ஒரே நேரத்தில் இணையதளத்தை உருவாக்கியதில்லை என்கிறார் செந்தில்.

மகளிர் தினத்திற்கு சில தினங்கள் முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடத்தக் காரணம் பற்றி செந்தில் கூறுகையில், 

“மகளிர் தினம் என்றாலே பெண்களுக்கு கோலப்போட்டி, சமையல் போட்டி வைத்து பரிசுகள் வழங்குகிறார்கள். இந்தத் துறைதான் பெண்களுக்கு என எழுதப்படாத விதி போல் இது உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் ஹார்டுவேர், சாப்ட்வேர் என டெக்னாலஜியிலும் சாதிக்க இயலும். அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதற்கான முன்னெடுப்பாகவே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்” என்கிறார்.

சேலத்தைத் தொடர்ந்து இந்தாண்டு இம்மாத இறுதியில் மதுரையில் இதே போன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார் செந்தில். இதில் சேலத்தை விட அதிக எண்ணிக்கையில் பெண்களைக் கலந்து கொண்டு, பயன் பெற வைக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார். இப்படியாக அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் பத்தாயிரம் பெண்களையாவது இணையதளம் தொடங்க கற்றுத்தர இலக்கு வைத்துள்ளார். இந்த பத்தாயிரம் பெண்கள் என்பது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பீஹாரில் ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.

போதிய கணினி மற்றும் இணைய வசதியில்லாமல் இருந்தபோதும் இரவும் பகலும் எப்படியும் கற்றுக் கொண்டே தீருவது என வெறி கொண்டு திருச்செங்கோடு பெண்கள் வெப்சைட் உருவாக்க உழைத்துள்ளனர். சரியான வழிகாட்டிகள் இல்லாததே இப்பெண்கள் தங்கள் இணையத் திறமையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தடையாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்பது தான் செந்திலின் இலட்சியமாம்.

“பெரு மென்பொருள் நிறுவனங்கள் தரும் சலுகைகளைப் பெற வேண்டிய உண்மையான பயனாளிகள் சிறு நகரங்களில் தான் உள்ளனர். பெண்கள் இந்தத் துறைதான் தனக்கானது என சிறு வட்டத்திற்குள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. பெரிய உலகில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு பெரு நிறுவனங்களின் உதவியும் தேவை. அவர்கள் உரிய அறிவும், தெளிவும் பெற்று சொந்தக் காலில் நின்றாலே சமூகத்தில் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்,” என்கிறார் செந்தில்.