இலவச இ-ஆட்டோ சேவையை வழங்கும் கேரள சுகாதார மையம்!

0

வயநாட்டில் உள்ள நூல்புழா குடும்பச் சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர். தஹர் மொஹமத் நோயாளிகளின் போக்குவரத்து வசதிக்காக இ-ஆட்டோ யோசனையை முன்வைத்தார். விரைவில் சுகாதார மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு சேவையளிக்க எலக்ட்ரிக் ஆட்டோவிற்காக இரண்டு லட்சம் ரூபாயை நூல்புழா பஞ்சாயத்து ஒதுக்கியது. இந்த முயற்சி ஆரம்பகட்ட அல்லது இறுதி தூர பயணத்திற்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டதாகும்.

”எங்களது க்ளினிக்கின் தொற்று அல்லாத நோய் பிரிவிற்கு 60 வயதுக்கும் மேற்பட்ட எத்தனையோ நோயாளிகள் வருகின்றனர். அவர்கள் பேருந்து நிலையத்திற்குத் திரும்பச் செல்ல போராடுவதை பார்த்திருக்கிறேன். அதை எளிதாக்க முயற்சி எடுக்கவேண்டும் என தீர்மானித்தேன்,” 

என்று தஹர் ’தி நியூஸ் மினிட்’-க்கு தெரிவித்துள்ளார்.

முழுமையாக சார்ஜ் செய்யப்படும் பட்சத்தில் இந்த ஆட்டோ 85 கிலோமீட்டர் வரை செல்லும். அவசரகாலத்தில் இதை ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ’மனோரமா இங்கிலீஷ்’ தெரிவிக்கிறது. இந்த ஆட்டோ சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால் தொடர் செலவுகளைக் குறைக்கும் என நிர்வாகம் தெரிவிக்கிறது.

சுல்தான் பத்தேரி பகுதியில் அமைந்துள்ள சுகாதார மையத்தில் ’கேரள பிறவி’ என்றழைக்கப்படும் கேரள மாநிலம் உருவானதன் அடையாள தினமான நவம்பர் 1-ம் தேதி மிகப்பெரிய அளவில் அறிமுகமாகத் தயாராகி வருகிறது. தஹர் கூறுகையில்,

 “பேருந்து நிலையத்திலிருந்து சுகாதார மையத்தை வந்தடையவும் அங்கிருந்து திரும்ப பேருந்து நிலையத்தைச் சென்றடையவும் இலவச வசதி செய்து கொடுக்க உள்ளோம். வயதான நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், இளம் தாய்மார்கள் ஆகியோருக்கு இந்த வசதி அளிக்கப்படும். இதன் மூலம் அருகாமையில் உள்ள பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்து பேருந்தில் அவர்கள் வீட்டிற்குச் செல்லலாம்.

ஏசி வசதியுடன்கூடிய சுத்தமான அறைகள் மற்றும் சிறப்பான வசதிகளுடன் நூல்புழா குடும்ப சுகாதார மையம் இந்தியாவின் சிறந்த சுகாதார மையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேசிய தர உத்தரவாத சான்றிதழும் பெற்றுள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA