செல்லும் இடங்களில் விதைகளைத் தெளிக்கும் சிறுவியாபாரி 

2

மழையின்றி வறட்சியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம்... வெய்யிலின் உக்கிர தாண்டவம் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே தான் போகிறது. மழையும் சென்னை போன்ற பெருநகரங்களை கண்டு கொள்ளவேயில்லை. நிழலைத் தேடும் மக்கள் மரத்தின் அருமையை இப்போது தான் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச்சூழலில் தான் பயணிக்கிற பாதையெங்கும் விதைகளைத் தூவிச் செல்கிறார் சிறுவியாபாரி சுரேஷ்குமார்.

‘‘என்னோட சொந்த ஊர் சிவகங்கை பக்கம் கீழடி. அக்கம் பக்கத்து ஊர்கள்ல இருக்குற கடைகளுக்கு ரொட்டி, முறுக்கு, பிஸ்கட்னு நொறுக்குத் தீனிகளை சப்ளை செய்றேன். தினமும் 150 கி.மீக்கு மேலே டுவீலரில் போக வேண்டியிருக்கும் என்று சொல்லும் இவர் தான் பயணிக்கும் பாதையில் மாற்றம் ஒன்றை செய்து வருகிறார்.  

பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்க போனாலும் மரமா பூத்துக் குலுங்கும். வெயிலோ, சூடோ சுத்தமா எதுவுமே தெரியாது. சாலையோரத்துல வரிசையா புளிய மரங்கள், ஆலமரங்கள் இருக்கும். அதுங்கள நம்பி செருப்பில்லாம கூட வெளியே போகலாம்.

அப்போலாம் வியாபாரத்துக்கு சைக்கிளில் தான் போவேன். எவ்வளவு தூரம் பயணம் செஞ்சாலும் கலைப்பே தெரியாது. ஆனால் இப்போ...

சாலையை விரிவு படுத்துறேன்னு எல்லா மரத்தையும் வெட்டிட்டு ரோட்டுக்கு நடுவில் செடியை நட்டு வைக்குறாங்க. ரொம்ப கொடுமையா இருக்கு. நம்மோட இயலாமையை நினைச்சா அழுகை தான் வருது, என்று வேதனையுடன் பேசுகின்ற சுரேஷ் தன் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி மதுரை ஹைவேயில் போய்க்கிட்டு இருந்தேன். வட இந்திய லாரி டிரைவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர்கள் எங்கெங்கோ கிடைக்கும் விதைகளை பத்திரமா கொண்டு வந்து தாங்கள் செல்லும் வழியெல்லாம் வீசி செல்வதாகச் சொன்னார்கள். 

“அவர்களின் செயல் ரொம்பவே என்னை நெகிழ செய்தது. அவர்களிடமே சில விதைகளை வாங்கி வந்து சாலை ஓரங்களில் தெளித்தேன். அந்த விதைகள் இன்னைக்கு மரமாக வளர்ந்து நிற்குது. அதைப் பாக்கும் போதெல்லாம் மனசுக்கு சந்தோஷமா இருக்கு.”

எப்பவெல்லாம் நெடுஞ்சாலையில் போகின்ற வாய்ப்பு கிடைக்குதோ அப்பவெல்லாம் நல்ல ஆரோக்கியமான விதைகளைச் சாலையின் இரு புறங்களிலும் தூவிவிட்டு தான் செல்வேன். அதற்காக ஓய்வு நேரத்தில் வேம்பு, புங்கன், வாகை மர விதைகளைச் சேகரித்து வைத்திருக்கேன். விதைகள் அனைத்தையும் கூட்டுடன்தான் வீசுவேன். அப்போது தான் கரையான்கள் விதையைச் சிதைக்காமல் கூட்டை மட்டும் அரித்துவிடும். 

”மழை, வெய்யில் எனத் தகுந்த சூழ்நிலை ஏற்படும்போது, அந்த விதைகள் கட்டாயம் முளைத்து விருட்சமாகும். அதைப் பாக்கும் போதெல்லாம் மனதுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது,’’

என்று நம்பிக்கையுடன் முடிக்கும்போது சுரேஷ்குமார் நம்முன் மரம்போல் உயர்ந்து நிற்கிறார்.

வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும் என்பார்கள். அதுபோல, மரங்களின் அருமையைத் தற்போதுதான் நாம் உணரத் துவங்கி உள்ளோம். தன்னார்வலர்கள், தனியார் சமூக அமைப்புகள் ஆங்காங்கே மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். இருப்பினும், மரம் நடுதலை மாநில முழுவதும் முழு இயக்கமாகச் செயல்படுத்தினால்தான், எதிர் காலத்தில் வறட்சியின் பிடியில் நிரந்தரமாகச் சிக்காமல் நாம் தப்ப முடியும். 

கட்டுரையாளர்: வெற்றிடம்

Related Stories

Stories by YS TEAM TAMIL