சரும நல ஆலோசனை வழங்கும் இணைய கிளினிக் 'மைடெர்மஸி'

0

அன்கித் குராணாவுக்கு 'மைடெர்மசி'யை(My Dermacy) துவக்குவதற்கான எண்ணம் உண்டான விதம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. அவர் அரிப்பால் பாதிக்கப்பட்ட போது தான் இது நிகழ்ந்தது.

'யுரேக்கா' கணம்

“நான் நிறைய பயணம் செய்தேன். சரும சிக்கல் ஏற்படும் போது சரும நல மருத்துவர்களை நாடிச்செல்ல சோம்பல் கொண்டிருந்தேன். இது போன்ற ஒரு பயணத்தின் போது டெர்மடிடிஸ் பாதிப்பு உண்டானது. உடனே ஒரு புகைப்படம் எடுத்து மருத்துவரின் ஆலோசனை பெற முடிந்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன்” என்கிறார் அன்கித்.

இதே எண்ணத்தின் அடிப்படையில் தில்லியை சேர்ந்த தொழில்முன்முயற்சியான மைடெர்மஸி, இன்று பயனாளிகள் தங்கள் சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான ஆலோசனகளை ஒரு செல்ஃபி மூலம் பெறலாம் என உறுதி அளிக்கிறது.

பின்னணி

அமெரிக்காவின் ஓஹையோவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பயோமெடிகல் பட்டம் பெற்றவரான அன்கித், சரும நலப்பிரிவில் பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருந்தார். அவருக்கு பல சரும நல மருத்துவர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதே நேரத்தில் இணை நிறுவனரான கொலம்பியா பிஸினஸ் ஸ்கூல் பட்டதாரியான குபேர் வர்த்தக நிர்வாக அனுபவத்தை பெற்றிருந்தார்.

துவக்கம்

2013 ல் அன்கித் மற்றும் அவரது இணை நிறுவனரும், சி.டி.ஓ.வுமான குபேர் சர்மா, மைடெர்மஸியை துவக்க தீர்மானித்தனர். சரும நல மற்றும் சிகை அலங்கார தயாரிப்புகள் மற்றும் பாலியல் நல தயாரிப்புகளுக்கான இ-காமர்ஸ் தளமாக இதை துவக்கினர். பெரும்பாலான தொழில்முன்முயற்சிகள் போலவே ஒரு கட்டத்தில் தங்கள் திசையை மாற்றிக்கொண்டு ஆன்லைன் சரும கிளினிக்காக செயல்பட திர்மானித்தனர்.

“இ.காமர்ஸ் தளமாக செயல்பட்டது உற்சாகம் அளித்தது என்றாலும் சரும நல ஆலோசனைக்கு பெரிய சந்தை இருப்பதை உணர்ந்தோம். விரைவாக துவக்கினால் இந்தியாவில் முதல் முயற்சியாக இருக்கும் என நினைத்தோம்” என்கிறார் அன்கித். ஒரு சில லட்சங்கள் முதலீட்டில் சாட் வசதி அடிப்படையிலான ஆலோசனை தளமாக 2015 மே மாதம் இதை துவக்கினர்.

சந்தை வாய்ப்பு

சரும நல தொழில் தொடர்பாக 2014 ல் ஃபிராஸ்ட் & சலைவன் வெளியிட்ட அறிக்கை படி, இந்தியாவில் 2015 ல் 19 கோடி பேர் சரும நில பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சரும நல பிரிவு அதிக வளர்ச்சி கண்டு வருவதையும் எதிர்காலத்தில் இந்த பிரிவில் நல்ல முதலீட்டிற்கான வாய்ப்பு இருப்பதையும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் 7,000 டெர்மடாலிஜிஸ்ட்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆக இந்தியாவில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 0.49 சரும வல்லுனர்களே உள்ளனர். அமெரிக்காவில் இது 3.2 ஆக இருக்கிறது. இந்த இடைவெளியை போக்கும் வகையில் மைடெர்மஸி செயல்படுகிறது. 150 க்கும் மேற்பட்ட வல்லுனர்களை கொண்டுள்ள இந்த இணைய கிளினிக், சருமம், கேசம் மற்றும் பாலியல் நலம் சார்ந்த கேள்விகளுக்கு சாட் மூலம் பதில் அளிக்கிறது.

இதில் இணைந்துள்ள வல்லுனர்கள் தங்கள் அனுபவத்திற்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். பிஸினஸ் வேர்ல்டு ஆக்ஸிலேட்டர் திட்டத்தில் அங்கம் வகிக்கும் இந்த இணையதளம், கடந்த 3 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் தனிப்பட்ட பயனாளிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளது. இவர்களில் 90% ஆலோசனைகள் இந்தியாவில் இருந்து கேட்கப்பட்டவை.

“பயனாளிகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவதற்கான மேடையாக இருப்பதால் எந்த கேள்வியும் விநோதமானவை அல்ல என்றாலும் சில மிகவும் நகைச்சுவையானதாக இருக்கிறது. "நாளை எனக்கு திருமணம் நடக்கிறது, முகப்பருவுக்கு என்ன செய்வது, விரைவில் திருமணம் ஆக உள்ளது, எனது பிறப்புறுப்பில் ஒரு மரு போன்ற வளர்ச்சி இருக்கிறது, படம் எடுத்து அனுப்பட்டுமா? போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன” என்கிறார் அன்கித் சிரித்து கொண்டு...

தனித்தன்மை

பெரும்பாலான இதர இணைய மருத்துவமனைகள் வீடியோ ஆலோசனை வழங்கினாலும் அது தேவையில்லை என்கிறார் அன்கித். “எங்களுக்கு வீடியோ தேவையில்லை. ஏனெனில் சரும நல வல்லுனர்கள் சருமத்தின் புகைப்படம் மூலம் அதன் நிலையை அறிந்து கொள்ள பயிற்சி பெற்றுள்ளனர். டெலி-ரேடியாலஜி மற்றும் டெலி-டெர்மடலாஜி ஆகியவை தான் "ஸ்டோர் அண்ட்ஃ பார்வர்ட்" முறையை பின்பற்ற முடியும் என்றும் தொலைமருத்துவம் மூலம் மற்ற மருத்துவ துறைகள் இணையத்தில் இரண்டாவது கருத்து பெற மட்டுமே பயன்படுத்தலாம்’ என்கிறார் அவர்.

ஸ்டோர் அண்ட் ஃபார்வர்ட் முறை பாதுகாப்பான இ-மெயில், குறுஞ்செய்தி அல்லது சாட் மூலம் டிஜிட்டல் புகைப்படம், ஆவணம் மற்றும் வீடியோ போன்ற மருத்துவ தகவல்களை அனுப்பி வைக்கிறது. டெர்மடாலஜிஸ்டுடன் ஆலோசனை பெற உதவுவதுடன் மைடெர்மஸி டாக்டர்களுக்கான மருத்துவ தகவல்களையும் அளிக்கிறது. சரும நல கிளினிக்குகளையும் பட்டியலிடுகிறது.

“மைடெர்மஸி மற்றும் இதர இணைய மருத்துவமனைகளுக்கு இடையிலான வேறுபாடு என்ன என்றால் நாங்கள் டெர்மடாலஜி மற்றும் தொடர்புடைய நல சிகிச்சையில் முழுமையான அமைப்பை அளிக்கிறோம். எங்கள் தளம் டாக்டர்-நோயாளி தொடர்பு, டாக்டர் -தொழில்நுட்ப சப்ளையர்கள் தொடர்பு மற்றும் சேவையாளர்கள் மற்றும் பிராண்ட்களின் தொடர்பை வழங்குகிறோம்” என்கிறார் அன்கித்.

போட்டி

டாக்டர் ஆலோசனை பிரிவில் பலவித சேவைகளை வழங்கும் லிபரேட் ஐகிளினிக், ஹெல்த்கேர் மேஜிக், ஹெல்த் ஈமைன்ட்ஸ், மெடி ஏஞ்சல்ஸ், ஹெல்பிங் டாக் மற்றும் பிராக்டோ ஆகிய நிறுவனங்களுடன் இந்த தளம் போட்டியிருகிறது. பிராக்டோ விரைவில் இணைய ஆலோசனை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் ஃபர்ஸ்ட்டெர்ம், கிலாரா, மைடெர்மடாலாஜிஸ்ட் ஆன்கால்.காம் மற்றும் ரியல்செல்ஃப் ஆகிய சர்வதேச தளங்கள் மைடெர்சஸியுடன் நேரடியாக போட்டியிடுகின்றன.

எதிர்காலம்

டெர்மடாலஜி மற்றும் பாலியல் நலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறிய நகரங்களுக்கும் இந்த சேவையை கொண்டு செல்ல அன்கித் மற்றும் குபேர் திட்டமிட்டுள்ளனர்.

”இரண்டாம் கட்ட அல்லது முன்றாம் கட்ட நகரங்களை சேர்ந்த ஒருவர் அருகே உள்ள டெர்மடாலிஜிஸ்ட் பற்றி கேட்கும் போது 150 கிமீ தொலைவில் உள்ள ஒருவரை பரிந்துரைக்க தயங்குகிறோம். எனவே யாரிடம் பேசி ஆலோசனை பெறலாம் என்பதை மட்டும் பரிந்துரைக்கிறோம். இந்த மருத்துவர்கள் நேரில் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்ய விரும்புகிறோம்” என்கிறார் அன்கித் உற்சாகமாக.