நேர்காணலில் நீங்கள் தேர்வாக சில டிப்ஸ்!

0

பணியிட நேர்காணல் என்பது பலருக்கும் டென்ஷனான விஷயம். இது ஒரு சகஜமான விஷயம் தான் அதனால் கவலை கொள்ளவேண்டாம்.

மனதில் படபடப்போடு இண்டெர்வ்யூ சென்றால் நீங்கள் அந்த பணிக்கு தேர்வாவதும் சற்று கடினமாக போய்விடும். அதனால் இத்தனை டென்ஷன் தேவை இல்லை, உங்களால் அதை சுலபாக கடந்து வெற்றி அடையமுடியும். 

நீங்கள் உயர் பதிவிக்கான நேர்காணலுக்கு செல்வதானாலும் சரி, சாதரண ஊழியர் பணியிடத்துக்காக செல்வதானாலும் சரி, இண்டெர்வ்யூ நேரத்தில் தவறு நேருவதும் சகஜம் தான், அதனால் கவலை அடையவேண்டாம். 

நீங்கள் நேர்காணலில் தேர்வாக சில யுக்திகளை பயன்படுத்தினால், அவர்களின் நன்மதிப்பை பெற்று சுலபமாக தேர்வாக முடியும். எப்படி என்று கேட்கிறார்களா? இதோ அந்த சுலபமான டிப்ஸ்...

அலுவலகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் இண்டெர்வ்யூ’விற்கு செல்லும் நிறுவனத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் நேர்காணலுக்கு செல்வது தவறான ஒரு பழக்கம். ஏனென்றால் நேர்காணலில், ‘எங்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்’? ‘நாங்கள் என்ன செய்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா’? என்பன போன்ற கேள்விகள் நிச்சயம் அங்கே கேட்கப்படும் என்று நினைவில் கொள்ளுங்கள். அதனால் அந்த நிறுவனத்தை பற்றி, அதன் செயல்பாடுகள் பற்றி சரியாக ஆராய்ந்து தெரிந்து கொண்டு செல்லுங்கள். 

சரியான உடைகளை அணியுங்கள்

ஃபார்மல்ஸ் என்று அழைக்கப்படும் பணியிடத்துக்கு தகுந்த பேண்ட், சட்டையை நேர்காணலுக்கு அணிந்து செல்லுங்கள். முடிந்தால் புதிதாக வாங்கி அணிந்து செல்லுங்கள், இல்லையேல் நன்கு ஐயர்ன் செய்த உடையை அணிந்து செல்லுங்கள். கசங்கிய சட்டை மற்றும் அடிக்கவரும் கலர் உடைகளை தவிர்ப்பது நல்லது.  

உங்களின் ரெஸ்யூமை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்

உங்களை நேர்காணல் செய்பவர் உங்களின் ரெஸ்யூமில் இருந்து கேள்விகளை கேட்பது நிச்சயம். ரெஸ்யூம் மூலம் நிறுவனத்தை கவர நினைத்து நீங்கள் செய்யாதவற்றை அதில் குறிப்பிட்டிருந்தால் நீங்கள் பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள். அதனால் நீங்கள் விண்ணப்பித்த ரெஸ்யூமை ஒரு முறைக்கு பலமுறை படித்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள தகவல்களைப் பற்றி விரிவாக தயார் செய்து கொள்ளுங்கள் அதன் அடிப்படையில் கேட்க வாய்ப்பிற்கும் கேள்விகளுக்கு பதிலை தயார்படுத்திக் கொள்ளுங்கள். 

உடல்மொழி

நேர்காணலின் போது கேள்வி கேட்பவரை நேருக்கு நேர் கண்களை பார்த்து பதில் அளியுங்கள். அதேபோல் அவர் ஏதேனும் பேசினால் அதையும் கவனமாக கேளுங்கள், அதிலேயே அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும். கேள்வி புரியாவிட்டாலோ, அவர்கள் சொல்லும் விஷயத்தில் சந்தேகம் ஏற்பட்டாலோ, உடனடியாக சந்தேகத்தை தீர்த்து கொள்ள அவர்களை மீண்டும் விளக்கச்சொல்லி கேளுங்கள். நிதானமாக செயல்படுவது உங்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும், மேலும் இக்கட்டான சூழ்நிலையில் பிரச்சனைகளை கையாளும் திறன் உங்களிடம் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்வர். 

கூடுதல் டிப்ஸ்:

1. இண்டெர்வ்யூ செல்லும் முன்பே நீங்கள் உங்களைப்பற்றி சொல்லப்போகும் விஷயத்தை சொல்லிப்பாருங்கள், குறிப்பாக எடுத்துக்காட்டுடன் தயார் செய்து கொள்வது மிகவும் நல்லது.

2. நீங்கள் பணிபுரிந்த முன்னாள் பணியிடத்தை பற்றியும், அங்கிருந்த மேலாளர்கள் பற்றியும் தவறாக பேசுவதை தவிருங்கள். இல்லையேல் அது நேர்காணலின் போது உங்கள் மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்தும். 

3. உங்களின் ரெஸ்யூமின் பல நகல்களை எடுத்து செல்லுங்கள். 

4. இண்டெர்வ்யூவில் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிருங்கள். 

நேர்காணலில் தேர்வு பெறுவதை பற்றி ரொம்பவும் யோசிக்காதீர், ஏனெனில் இது உங்களின் கடைசி இண்டெர்வ்யூ இல்லை. தவறுகள் செய்தால் அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்!. 


Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan