திருநங்கைகளுக்கான பள்ளிக்கூடம் கேரளாவில் விரைவில் தொடக்கம்!

0

திருநங்கைகளுக்கென தனி பள்ளிக்கூடம் ஒன்று கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் தொடங்கப்பட உள்ளது.  

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு என தனி கொள்கையை கடந்த ஆண்டு கொண்டுவந்து செய்திகளில் இடம்பெற்றது கேரள மாநிலம். சமூகத்தில் திருநங்கைகள் சந்திக்கும் பாகுபாடை களையவும், அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கொள்கையின் படி,

”திருநங்கைகளுக்கு என தனி நீதி அமைப்பு தேவை. அவர்களின் உரிமைகள் சமமாக பார்க்கப்பட்டு, பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு சரியான பாலின அடையாளச் சான்றிதழ்கள் வழங்கப்படவேண்டும்.“ 

தற்போது மீண்டும் ஒருமுறை கேரளா, திருநங்கைகளுக்கு ஆதரவு குரல் அளிக்கும் விதத்தில் ஒரு செயலை செய்துள்ளது. திருநங்கைகளுக்கென தனி பள்ளிக்கூடம் ஒன்று கேரள மாநிலத்தில் வரப்போகிறது. இந்த முயற்சி இந்தியாவில் முன்னோடியாக இருக்கப் போகிறது. கொச்சியில் சஹாஜ் சர்வதேச பள்ளி எனும் பெயரில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி இந்த பள்ளிக்கூடம் தொடங்க உள்ளது. பிரபல திருநங்கை கல்கி சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக இந்த பள்ளியை துவக்க உள்ளார். 

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் இதுபற்றி திருநங்கை ஆர்வலர்கள் விஜயராஜா மல்லிகா, மாயா மேனன் மற்றும் ஃபைசல் சிகே ஆகியோர் இணைந்து பள்ளிக்கூடம் பற்றி அறிவித்தனர். முதல் கட்டமாக 10 திருநங்கை மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் தேசிய திறந்தவெளி பள்ளிக்கூட திட்டத்தின் கீழ் படிப்பார்கள் என்று தெரிவித்தனர். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்த விஜயராஜா மல்லிகா,

“ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் ஒன்றிணைந்து இந்த முயற்சியை எடுக்க முன் வந்துள்ளனர். திருநங்கைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை அளிப்பதே இந்த பள்ளியின் நோக்கம் ஆகும். தற்போது பள்ளியை துவக்க நிதியுதவி செய்ய சிலர் உள்ளனர். பள்ளி இயங்க தொடங்கியதும், மேலும் நிதி தேவைக்கு கேரள அரசின் உதவியை நாட உள்ளோம்,” என்றார். 

பள்ளியின் பாடத்திட்டம் பலவகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடோடு கூடிய கல்வி அளிக்கப்படும். 10-ஆம், 12-ஆம் வகுப்பு தேர்வுகளும் பிற பள்ளிகளை போல் இங்கும் நடத்தப்படும். ‘சனாத்தனா’ அதாவது பத்தாம் வகுப்போடு பள்ளியில் இருந்து இடைநிற்றல் செய்யும் திருநங்கைகளுக்கான திட்டத்தின் முக்கிய மூளை விஜயராஜா ஆகும். ட்ரான்ஸ் இந்தியா அமைப்பில் பணிபுரியும் ஆறு திருநங்கைகளின் உதவியோடு   இந்த முயற்சியை அவர் செய்து வருகிறார். 

டெக்கன் க்ரானிகலுக்கு பேட்டி அளித்த விஜயராஜா,

“கொச்சி மெட்ரோ திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக அறிவித்தாலும், கல்வித் தகுதி அவர்களுக்கு ஒரு தடையாக இருந்து வருகிறது.”

இந்த பள்ளியை தொடங்க இடம் தேடி அலைந்துள்ளனர் இவர்கள். அதற்காக இடம் தேடியபோது 50 நில உரிமையாளர்களால் நிராகரிக்கப்பட்டனர். இருப்பினும் ஒரு கிருத்தவ அமைப்பினர் இடமளிக்க முன்வந்து பள்ளிக்கான இடத்தை லீசுக்கு தர ஒப்புக் கொண்டுள்ளனர். 

கட்டுரை: Think Change India