கிளீன்டெக் துறையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் 'பிரிட்ஜ்டாட்ஸ்'

0

நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க பேராசிரியர் மற்றும் அறிவியலாளர்களை அணுகும் போது, அவர்கள்  எதிர்பார்க்கும் பலன்கள் கிடைப்பதில்லை. இந்த தேவையை பூர்த்தி செய்யவே "பிரிட்ஜ்டாட்ஸ்" (Bridgedots) என்ற  நிறுவனத்தை, ஐ.ஐ.டி யில் (IIT BHU) பயின்ற தன்மே பாண்ட்யா  மற்றும் நிகார் ஜெயின்  தோற்றுவித்தனர். இந்த தொழில்முன்முயற்சி நிறுவனம்  கல்வித்துறை மற்றும் தொழில் நிறுவனங்களை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. 

தொழில் நிறுவனங்களின்  தொழில்நுட்ப பிரச்சனைகளை  களையும் பொருட்டு, பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானிகளுடன் கூட்டு சேர்ந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றனர்.

 இது பற்றி தன்மே கூறுகையில்:

பிரிட்ஜ்டாட்ஸ்  நிறுவனம்; ரசாயனங்கள்,  பாலிமர்கள், மேம்பட்ட பொருட்கள் மற்றும்  கழிவு பொருட்கள் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துகிறது. இந்த பொருட்களின் பயன்பாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறோம். பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளை நிபுணர்களாக பணி அமர்த்துகிறோம், அவர்கள் செலவிடும் நேரத்திற்கேற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT-BHU ) ரசாயன பொறியியல் பட்டம் பெற்றவர்  தன்மே. பின்னர் கொள்முதல் ஆலோசனை நிறுவனத்தில் பணி புரிந்துள்ள இவர், பல ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுக்கு உதவி புரிந்துள்ளார்.  

வளரும் நிறுவனமாக...

ப்ரிட்ஜ்டாட்ஸ்  நிறுவனம் வாரனாசியில் உள்ள ஐ.ஐ.டி.யில் உள்ள தொழில்முனைவர்களுக்கான  வர்த்தக தொழில்நுட்ப மையத்தில் உருவாகியது. விதை நிதியாக பதினான்கு லட்சத்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்த மையத்தை தவிர நொய்டாவிலும்  அலுவலகம் உள்ளது. இவர்களுக்கு  இந்தியா, அமரிக்கா, ஐரோப்பா, வளைகுடா  மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய  நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களாக கழிவு மற்றும் கழிவு நீர், ரசாயனம், கட்டுமான ரசாயனங்கள், மேம்பட்ட பூச்சுகள் மற்றும்  ஒப்பனை ஆகிவற்றை எதிர்கொள்ளும் விதமாக பொருட்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் காணும் அனைத்து பொருட்களும் நாங்களே உருவாக்கியது. எங்கள் குழுவில் மொத்தம் ஐந்து முதல் ஆறு பேர் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பயின்றவர்கள். கடந்த நான்கு வருடங்களில் இது வரை பத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் , தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்கியுள்ளோம். தற்பொழுது எட்டு வாடிக்கையாளர்களுக்காக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த சேவைகளை அளிக்கிறோம்.

சந்தைப்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி பிறகு இதை வாடிக்கையாளர் வணிக மயமாக்க தொழில்நுட்ப  பரிமாற்றத்தின் அடிப்படையில்  அளிக்கிறோம்.  மூன்று முதல் பத்து லட்சம் வரை மதிப்பு கொண்ட இத்தகைய திட்ட வடிவமைப்பை முடிக்க முன்னூறு முதல் ஆயிரம் மணி நேரம் ஆகும் என்கிறார் தன்மே.

பொருட் தயாரிப்பு மற்றும் வளர்ச்சி..

தன்மே மேலும் கூறுகையில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த சேவைகள் மட்டுமே எங்களின் வணிக இலக்கு அல்ல. வாடிக்கையாளர்களுக்காக தொழில்நுட்ப தயாரிப்பில் ஈடுபட்டாலும், அதிக மதிப்புள்ள தொழில்நுட்பங்களை வர்த்தக மயமாக்குதலே எங்களின் இலக்கு.

இரண்டு தொழில்நுட்ப தயாரிப்பில் தொடங்கினோம். முதலாவதாக மாநகராட்சி அளவில் திடக்கழிவு சிகிச்சை பிரச்சனைக்கு தீர்வு காணுதல்; மற்றொன்று அரிசி உமி சாம்பலிலிருந்து  சிலிகாவை பிரித்தெடுத்தல்.

அரிசி உமி சாம்பலிலிருந்து,  உயர் நிலை தர சிலிக்காவை பிரித்தெடுக்கும் புதுமையான தொழில்நுட்பத்தை பிரிட்ஜ்டாட்ஸ்  நிறுவனம் தயாரித்துள்ளது. உயிரி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழில்துறை கொதிகலன்களில் அரிசி உமி எரிபொருளாக  பயன்படுத்தப்படும். இதனுடைய கழிவே அரிசி உமி சாம்பலாகும். ஐநூறு மில்லியன் டன்னுக்கும்  மேற்பட்ட அளவில் அரிசி உற்பத்தியாகும் நிலையில், இது நூறு மில்லியன் டன் அளவிலான அரிசி உமி ஆகிறது. 

குறைந்த விலை, உயர் கலோரி மதிப்பு கொண்டதால் அரிசி உமி உயிரி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழில்துறை கொதிகலன்களில் எரிபொருள் பயன்பாட்டிற்கு  ஏற்றதாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் பத்து மில்லியன் டன் அளவிலான சாம்பல் உலகம் முழுவதும் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.  குறைந்த வர்த்தக மதிப்பு உள்ளதால் இவை நிலபரப்பு அல்லது திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. இது சுற்றுப்புற சூழலை பாதிக்கிறது. 

தொழில்நுட்பத்தை கொண்டு இந்த சாம்பலிலிருந்து தயாரிக்கப்படும் சிலிக்காவை  டயர்களில் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது ஐந்து முதல் ஏழு விழுக்காடு வரை எரிபொருள் நுகர்வை சேமிக்கலாம். இந்த வகை சிலிக்கா  டயர்கள் உருளும் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதால் எரிபொருள் சிக்கனம் மட்டுமின்றி ஈரமான பிடியில் இலகுவாக செல்லவும், கிரீன்ஹவுஸ் வாயுக்கள் உமிழ்வையும் கட்டுப்படுத்துகிறது.  

எரிபொருள் சேமிப்பு மட்டுமின்றி சுற்றுசூழலையும் இந்த செயல்முறை பாதுகாக்கிறது. என்கிறார் தன்மே. "இது மட்டுமின்றி இதிலிருந்து கிடைக்கும் மற்ற இணை பொருட்களால்,  எங்களின் இலாபம் பதினைந்து முதல் இருபது விழுக்காடு அதிகமாகிறது. "

உலகிலேயே இது போன்று  தயாரிக்கும் வெகு சில நிறுவனமாக  நாங்கள் இருக்கிறோம்.  இந்த சிலிக்காவை ஆய்வுக்கு உட்படுத்தி ஒப்புதலும் அளித்திரிக்கிறது உலகின் முன்னோடி டயர் நிறுவனம்.. இந்த செயல்முறைக்கான PCT காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளோம்.

அங்கீகாரங்கள்..

டெக்சாஸ் பல்கலைகழகத்தின் அங்கமான பன்னாட்டு சந்தைப்படுத்தும் குழு நடத்தும்  சர்வதேச வர்த்தக வளர்ச்சிக்காக ப்ரிட்ஜ்டாட்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து எட்டு நிறுவனங்கள் மட்டுமே  தெரிவு  செய்யப்பட்டுள்ளன. 2015 க்கான டிஎஸ்டி லாக்ஹீட் மார்டின் (DST-Lockheed Martin) இந்தியா இன்னவேஷன் வளர்ச்சி திட்ட விருதையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. சர்வதேச கிளீன்டெக்  வளர்ச்சி திட்டம்   2015 என்ற திட்டத்தின் அரை இறுதிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வணிக அளவில் பைலட் ஆலை அமைத்திட பல்வேறு முதலீட்டார்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தன்மே கூறுகிறார். அடுத்த மூன்றாண்டுகளில் ப்ரிட்ஜ்டாட்ஸ் தனது தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆலை அமைக்கப் போவதாக கூறுகிறார். இதைத் தவிர உலகெங்கும் உள்ள அரிசி பயிரிடும் நாடுகளிலும் கூட்டமைப்பு முறையில் ஆலைகள் அமைக்கப் போவதாக தன்மே கூறுகிறார்.

இந்நிறுவனத்தின் வருடாந்தர வளர்ச்சி நூறு சதவிகிதமும், வருவாய் அடிப்படையில் பார்த்தால் அறுபது லட்சத்திற்கும் மேலாக இந்த ஆண்டு இருக்கக்கூடும். "ஏழாயிரம் டன் உற்பத்தி திறனை அடுத்த மூன்றாண்டுகளில் அடைந்து ஐம்பது கோடி அளவில் வருவாயை ஈட்டுவதே எங்கள் இலக்கு" என்கிறார் தன்மே.  

http://www.bridgedots.com/