அசாமீஸ், பஞ்சாபி, உருது மொழிகளை சேர்த்து இன்று முதல் 12 இந்திய மொழிகளில் யுவர் ஸ்டோரி!

0

இந்த தீபாவளி நன்னாளில் அசாமீஸ், பஞ்சாபி மற்றும் உருது ஆகிய மூன்று இந்திய மொழிகளில் யுவர்ஸ்டோரி தனது உள்ளடக்கத்தை தொடங்கியுள்ளது. இதனுடன் சேர்த்து பனிரெண்டு இந்திய மொழிகளில் யுவர் ஸ்டோரி தடம் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆங்கில மொழியில் ஆரம்பிக்கப்பட்ட யுவர் ஸ்டோரி ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், வங்காளம், மராத்தி மொழிகளில் செப்டம்பர் மாதத்திலும்; குஜராத்தி, மலையாளம் மற்றும் ஒரிய மொழியில் அக்டோபர் மாதத்திலும் தனது பிராந்திய மொழி சேவையை வரிசியாகத் தொடங்கியது.

ஆரம்பித்த ஒன்றரை மாதத்தில், கிட்டதிட்ட ஆறாயிரம் கதைகளையும், இவற்றில் எட்நூறு அசலான கதைகள் என பல்வேறு பிராந்திய மொழிகளில் வெற்றிகரமாக தனது சேவையை தொடர்ந்து வருகிறது யுவர்ஸ்டோரி.

இந்திய மொழிகளில் உள்ளடக்க சேவை என்றெண்ணும் பொழுது நெல்சன் மண்டேலா அவர்களை மேற்கோள் காட்டுவது அவசியமாகிறது. "மற்றவருக்கு புரியும் மொழியில் பேசும் பொழுது அவர் மூளைக்கு சென்றடையும், இதுவே அவருடைய தாய்மொழியில் பேசும் பொழுது இதயத்துக்கு சென்றடையும்" எனக்கூறுவார் . யுவர்ஸ்டோரியில் உள்ள நாங்கள் அனைவருமே கதைகளை கூறுபவர்கள், இந்த கதைகள் அனைத்துமே எங்களின் வாசிப்பாளர்களை இதய பூர்வமாக சென்றடைபவை.

யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் ஷ்ரத்தா ஷர்மா இது பற்றி கூறுகையில் "அசாமீஸ், பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் எங்களின் சேவையை தொடங்குவதன் மூலம் இந்தியாவின் புதிய எல்லைகளுக்கு எங்களின் தொடர்பை விஸ்தரிக்க உதவும். எந்த ஒரு ஒருங்கிணைப்பிற்கும் முன்னோடி, தொடர்பை ஒருங்கிணைப்பதே ஆகும்".

அவர் மேலும் கூறுகையில் "முன்பே கூறியது போல, நம் தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் எங்களின் சேவையை கொண்டு செல்வதே எங்களின் நோக்கு. பிராந்திய மொழிகளில் கதைகளை கூறுவதன் மூலம் மாற்றத்தை வித்திட முடியும்".

யுவர்ஸ்டாரியின் பிராந்திய மொழிகளின் ஆசிரியர் டாக்டர் அர்விந்த் யாதவ் கூறுகையில் "சில இந்திய மொழிகளில் எங்களின் சேவையை தொடங்கியதும் அதற்கான வரவேற்பு மேலும் பல மொழிகளில் தொடர எங்களை தூண்டியது. நமது மொழியில் கேட்கும், படிக்கும் கதைகள் ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. ஆங்கிலம் பேசாத மக்கள் தங்கள் மொழியில் அவர்களின் கதையை உலகத்திற்கு பகிர்ந்து கொள்ள எங்களின் தொழிநுட்பம் உதவி புரியும்".

யுவர்ஸ்டோரியின் ஆங்கில பதிப்பு வெகுவாக வளர்ந்து வரும் நிலையில், அடுத்த ஓராண்டில் பிராந்திய மொழி பதிப்பு நூறு மில்லியன் இந்தியர்களுக்கும் மேலாக சென்று சேர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். செப்டம்பர் முதல் இந்திய மொழிகளில் கதைகளை இணைய தளம் மூலம் பகிரும் யுவர்ஸ்டோரி, இந்த வருட இறுதிக்குள் செயலி வடிவத்திலும் இனி வெளிவரும். அசல் கதைகள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட ஆங்கில கதைகளின் மொழியாக்கமும் பல்வேறு இந்திய மொழிகளில் தற்பொழுது வாசகர்கள் படிக்கலாம்.

உங்களின் விருப்பமான மொழிகளில் யுவர்ஸ்டோரி கதைகளை படிக்க www.yourstory.com என்ற இணையத்தில் இடது புறம் உள்ள விருப்ப மொழியை இனி நீங்கள் தேர்தெடுக்கலாம்.

இனி உங்கள் மொழியில் யுவர்ஸ்டோரியை படித்து மகிழுங்கள்...