’உலக பத்திரிகை சுதந்திர தினம்’- காலத்தின் கண்ணாடியை பாதுகாப்பது அவசியம்!

0

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிகவும் முக்கியமானது பத்திரிகை. கடந்த கால நிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள், பண்டைய வரலாறு, கல்வி, அறிவியல், கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல் போன்ற பலவற்றை செய்திகள் மற்றும் படங்கள் மூலமாக மக்களுக்கு உண்மைத்தன்மை மாறாமல் கொண்டு சேர்ப்பதே பத்திரிகைகளின் தலையாய பணி ஆகும்.

உலகின் ஒவ்வொரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும், அதன் உண்மைத்தன்மை மாறாமல் உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப் படுத்துபவை பத்திரிகைகள் தான். அப்படிப்பட்ட பத்திரிகைகளை யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக செயல்பட விட்டால் தான் உண்மை செய்திகளை உலகம் பெற முடியும்.

இதன் அடிப்படையில் தான் ஐக்கிய நாடுகள் சபை 1993-ம் ஆண்டு மே 3-ம் தேதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மே 3-ம் தேதி, ‘பத்திரிகை சுதந்திர தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதன் முக்கிய நோக்கமே பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்றவை தான்.

1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக ’பத்திரிகை சுதந்திர சாசனம்’ (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

கடந்த 1997ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், இந்நாளில் ஆபத்து காலத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடும் பத்திரிகையாளர் அல்லது அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு யுனெஸ்கோ விருது வழங்கி கவுரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விருது, ‘யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது’ என அழைக்கப்படுகிறது.

கொலம்பியப் பத்திரிகையாளரான கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கிலெர்மோ விருதுடன் 25,000 டாலர் பணமும் பரிசு வழங்கப்படுகின்றது. விருதுக்குத் தகுதியானவர்களை சுமார் 14 நபர்களைக் கொண்ட குழு தேர்ந்தெடுக்கிறது.

யார் இந்த கிலெர்மோ?

'எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த கிலெர்மோ, போதை பொருள் மாபியா கும்பலின் சட்டவிரோத கடத்தலை அம்பலப்படுத்தியவர். இதனால் கடந்த 1986ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அவரது பத்திரிகை அலுவலகத்தின் வாயிலில் வைத்து சமூகவிரோதிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திரிகை சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை தந்த அவரது பணியை பாராட்டி, கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் கிலெர்மோ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

கிலெர்மோவின் படுகொலைக்குப் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

விருதுக்கு தேர்வான போட்டோகிராபர்:

இந்த ஆண்டிற்கான விருது எகிப்தியன் போட்டோகிராபர் மக்மவுத் அபு செயித்திற்கு அளிக்கப்பட உள்ளது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற போரட்டத்தின் போது போட்டோ எடுத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

மரியாதை:

இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருதுபொருளை மையமாக கொண்டு பத்திரிகை சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, ‘பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் தன்னிச்சையாக செயல்படுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்நாளில் நாட்டிற்காக உயிர் நீத்த பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதையும் செலுத்தப்படும்.

133வது இடத்தில் இந்தியா:

பிரான்சின் 'ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' அமைப்பு, உலகில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை பற்றிய 2018ம் ஆண்டுக்கான தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டது. 

180 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், முதலிடத்தில் நார்வே உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களை முறையே சுவீடன், நெதர்லாந்து பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 133வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் தேவை:

பத்திரிகைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பும், விருப்பமும். ஆனால், அப்படி உள்ளதை உள்ளபடி காட்டும் காலக்கண்ணாடியாகச் செயல்பட, பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சுதந்திரம் தேவை. பத்திரிகைகள் வெளிப்படையாக, நடுநிலையோடு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மட்டுமே, சமுதாயம் முன்னேறி, நாடும் வளர்ச்சி பெற முடியும்.