கழிவு மேலாண்மையில் பங்களிக்கும் குப்பை சேகரிக்கும் பெண்கள்!

0

குப்பையுடன் காட்சியளிக்கும் சாலைகள், பலனற்ற திடக்கழிவு மேலாண்மை ஆகிய இரண்டுமே இந்தியா போன்ற பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளில் தவிர்க்கமுடியாத பிரச்சனைகளாகும். சாலைகளில் குப்பை சேகரிப்பவர்கள் என சுட்டிக்காட்டப்படும் குடிசைவாழ் பெண்கள் இந்தியாவில் உள்ள குப்பைகளை தங்களது குடும்பத்திற்கான வாழ்வாதாரமாகவே மாற்றியுள்ளனர்.

இந்தப் பெண்கள் தங்களது குடும்பத்தின் உணவுத் தேவைக்காக மறுசுழற்சிக்கு உகந்த கழிவுகளை சாலையோரங்களில் இருந்து சேகரித்து விற்பனை செய்கின்றனர். இந்தக் கழிவுகள் இவ்வாறு சேகரிக்கப்படாமல் போனால் இவை சுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்தும். ஆனால் இவர்களால் இந்தக் கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்தத் தொழிலில் இந்தியாவில் மட்டும் சுமார் 4 மில்லியன் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கையானது இந்தத் தொழில் மிகவும் சௌகரியமானது என்பதை உணர்த்தவில்லை. இவர்கள் தினமும் அதிகாலை இரண்டு மணியிலிருந்து மூன்று மணிக்குள் அன்றைய பணியைத் துவங்குகின்றனர். அவர்களுக்குள் பகுதிகளைப் பிரித்துக்கொண்டு சுமார் 8-10 கிலோமீட்டர் நடக்கின்றனர். குப்பைகளை கொட்டும் இடங்களிலும் குறுகிய சாலைகளிலும் குப்பைகளை தேடி அலைகின்றனர்.

நகரின் சாலைகளில் போடப்பட்டிருக்கும் மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களை தங்களது கைகளால் சேகரிக்கின்றனர். சுமார் 20 கிலோ மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களை சேகரிக்க குறைந்தபட்சம் 1000 முறை கீழே குனிந்து நிமிர்கின்றனர். அவற்றை பெரிய பைகளில் போட்டு தலையிலும் கைகளிலும் சுமந்து செல்கின்றனர். அவர்களது இடத்தை அடைந்ததும் சேகரித்த குப்பைகளை வகைப்படுத்தி கழிவுகளை சேகரிக்கும் மையத்தில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் தினமும் சுமார் 100-140 ரூபாய் வரை கிடைக்கும். அதைக் கொண்டு குடும்பத்துடன் பசியை போக்கிக் கொள்கின்றனர்.

இத்தகைய அபாரமான சேவை செய்த பிறகும் இந்தப் பெண்களுக்கு மரியாதையோ நியாயமான ஊதியமோ நமது சமூகத்தால் வழங்கப்படுவதில்லை. இது மிகவும் வருத்தமான முரண்பட்ட விஷயமாகும். அது மட்டுமல்லாது இவர்கள் நமது சமூகத்தின் பெரும்பாலான மக்களால் தீண்டத்தகாவர்களாக நடத்தப்படுகிறார்கள்.

இவர்கள் ஒவ்வொரு நாளும் சுரண்டப்படுவதை புரிந்துகொள்ள ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்கலாம். இவர்களது படிப்பறிவில்லாத நிலையையும் ஏழ்மையையும் பயன்படுத்திக் கொண்டு மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை வாங்கும் பெரும்பாலான இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலைக்கு பொருட்களைப் பெற்றுக்கொண்டு இந்தப் பெண்களை ஏமாற்றுகின்றனர்.

20 கிலோ கழிவுகளை சேகரிக்கும் ஒரு பெண் அந்தக் கழிவுகளுக்கான சந்தை விலையாக கிலோவிற்கு 8 ரூபாய் என்கிற கணக்கில் 160 ரூபாய் பெறவேண்டும். ஆனால் அவர் சேகரித்த பொருட்கள் 18 கிலோ எடை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு கிலோவிற்கு 6 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் அவருக்கு 108 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. 

அதாவது ஒவ்வொரு நாளும் இந்தப் பெண்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தொகையிலிருந்து 60 சதவீதத் தொகையை இவர்கள் இழக்க நேரிடுகிறது.

மேலே குறிப்பிட்டது போன்ற நியாயமற்ற நடைமுறைகளால் பெரும்பாலான பெண்கள் இடைத்தரகர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு அவர்களிடம் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் மறுசுழற்சி செய்வதற்கான பொருட்களுக்கு குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டாலும் அவர்களிடம் மட்டுமே விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

இந்தியாவில் கழிவு மேலாண்மை பிரிவு ஒழுங்கப்படுத்தப்படாமல் இருப்பதால் இந்தப் பெண்களால் இந்த நடைமுறையை எதிர்த்துப் போராட முடிவதில்லை. 

இவ்வாறு இழைக்கப்படும் அநீதிகளால் இவர்களது ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. இத்தகைய கடின உழைப்புடன்கூடிய உற்சாகமற்ற பணியிலிருந்து இவர்களால் சற்றும் ஓய்வெடுக்க முடிவதில்லை. குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க முடிவதில்லை. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவே போராடுகின்றனர். இந்தியாவில் நாம் மிகுந்த பெருமையுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடி வரும் வேளையில் சில நொடிகள் செலவிட்டு அனைத்து சிரமங்களையும் தாண்டி ஆரவாரமின்றி தங்களது சேவையை வழங்கும் இவர்களை வணங்குவோம்.

நாம் இவர்களை வணங்கினால் மட்டும் போதாது. இவர்களது நிலையை மேம்படுத்த நம்மால் இயன்றவற்றை செய்வோம் என உறுதி ஏற்போம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரச்சனை பெரிதாக இருப்பினும் அதன் தீர்வு மிகவும் எளிதானதாகும். நாம் அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. 

இந்தியாவில் கழிவு மேலாண்மை தொடர்பான மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் கிட்டத்தட்ட 85 சதவீத உலர் மற்றும் ஈரக் கழிவுகள் கலந்துவிடுகின்றன. இதனால் ஈரக் கழிவுகளை உரமாக்கவும் முடிவதில்லை உலர் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் முடிவதில்லை. 

இதன் காரணமாக இத்தகைய கலவைகள் நிலப்பரப்புகளில் கொட்டுப்பட்டு பல நூறாண்டுகளாக அழுகிப்போய் மாசுபடச் செய்கிறது. அதே சமயம் உலர் கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாமலும் போகிறது.

கழிவுகள் உற்பத்தியாகும் இடமான நமது வீட்டிலேயே நாம் அவற்றை வகைப்படுத்தத் துவங்கினால் மிக அதிகளவிலான உலர் கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம். அப்போது சாலைகளில் குப்பைகளை சேகரிப்பவர்கள் தினமும் நமது வீட்டிற்கு வந்து வகைப்படுத்தப்பட்ட கழிவுகளை சேகரித்துச் செல்வார்கள். அவர்களின் வருவாயும் அதிகரிக்கும். தெருக்களில் கழிவுகளை சேகரிக்கவேண்டிய அவசியம் இருக்காது. அத்துடன் ஈரக் கழிவுகள் உரமாக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கான மற்றொரு பரிசாகும். மொத்தத்தில் அனைவரும் பலனடையலாம். 

சுருக்கமாகச் சொல்வதானால் கழிவுகள் உற்பத்தியாகும் இடமான வீடுகளிலேயே கழிவுகள் வகைப்படுத்தப்படுவதே கழிவு மேலாண்மை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாகும்.

எண்ணற்ற நிறுவனங்கள் சாலைகளில் குப்பை சேகரிக்கும் பெண்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறது. அத்துடன் குப்பைகள் உற்பத்தியாகும் இடத்திலேயே அவற்றை வகைப்படுத்துவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அஹமதாபாத்தில் உள்ள SEWA, புனேவில் உள்ள SWaCH, பெங்களூருவில் உள்ள WOW (Well-being Out of Waste) போன்றவை சில பிரபல நிறுவனங்களாகும். ஆனந்த் பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மேலாண்மைக்கான கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்களின் மற்றொரு முயற்சிதான் ’பார்யவரன் மித்ரா’. இது அஹமதாபாத்தின் காந்தி ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு அரசு சாரா நிறுவனமாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : அனந்த் திவாரி | தமிழில் : ஸ்ரீவித்யா

(பொறுப்புத் துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துக்களாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)