இரு தேசிய சாதனைகளை முறியடித்த டெல்லியின் குடிசைப்பகுதியைச் சேர்ந்த நிசார்!

0

நிசார் அஹமத் டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன். இவரது அப்பா ரிக்‌ஷா இழுப்பவர். அம்மா வீட்டு வேலைகள் செய்து வருகிறார். குறுகிய தொலைவிற்கு விரைவாக ஓடும் விளையாட்டான குறுவிரை ஓட்ட வீரர் (sprinter) ஆகவேண்டும் என்கிற நிசாரின் கனவிற்கு குடும்பச் சூழல் ஒரு தடையாக இருக்கவில்லை. கடும் உழைப்பையும் உறுதியையும் துணையாகக் கொண்டு ஏற்கெனவே இரண்டு தேசிய சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

நிசார் தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரியுடன் ஆசாத்பூரைச் சேர்ந்த படா பாக் குடிசைப் பகுதியில் நூறு சதுர அடி அளவுகொண்ட அறையில் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஓடுவதற்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் ஷூக்கள் அணியாமலேயே நிசார் அபாரமாக ஓடுவதைக் கண்டார். அப்போதுதான் நிசாருக்கு இயற்கையிலேயே திறமை இருப்பதை உணர்ந்தார். அவரை மண்டலங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார்.

நிசார் அதிக சிரமங்களின்றி போட்டிகளில் வென்றார். அதன் பிறகு பயிற்சியாளர் நிசாருக்கு பயிற்சியளிக்கத் துவங்கினார். பள்ளிப்படிப்பு ஒருபுறம் பயிற்சி மற்றொருபுறம் என நிசார் நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கிறார். அவருக்குத் தேவையான சத்தான உணவை அவரது பெற்றோரால் வழங்க முடியவில்லை. இவ்வாறிருந்தும் பதினாறு வயதிற்குட்பட்டோருக்கான தேசிய சாதனையை இருமுறை முறியடித்துள்ளார். அவரது அம்மா ஷாஃபிக்குனிஷா ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நேர்காணலில் குறிப்பிடுகையில்,

”என் மகனின் சாதனை குறித்து அறிந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. எப்பேர்பட்ட நிலையிலும் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம். என் மகனுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்கமுடியாததை நினைத்து மிகவும் வேதனையடைகிறேன். அதிகபட்சம் வாரத்திற்கு ஒரு முறை அவருக்காக இறைச்சி வாங்கிக் கொடுக்கிறோம். அவ்வளவுதான். என்னிடம் பணம் இருந்தால் அவரது ஆரோக்கியத்திற்காக அவருக்கு கொட்டைவகைகளும் பழங்களும் வாங்கிக்கொடுப்பேன்.

நிசார் ஓடுவதை இதுவரை அவரது பெற்றோர் பார்த்ததில்லை. ஏனெனில் வேலைக்கு செல்லாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவ்வாறு வேலையைத் தவிர்த்தால் அவர்களால் அன்றைய வருவாயை ஈட்டமுடியாமல் போகும் நிலை ஏற்படும். நிசாரின் கடும் உழைப்பும் நேர்மையும் அவரது பெற்றோர் பெருமைப்படும் அளவிற்கு அவர் மென்மேலும் சிறப்பிக்க உதவும். ஆனால் அதைக்காட்டிலும் அவரது அம்மாவைக் குறித்தே நிசார் கவலை கொள்கிறார். அவரை வீட்டு வேலைகள் செய்து கஷ்டப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே நிசாரின் விருப்பமாக உள்ளது.

”இந்தியாவில் விளையாட்டு சார்ந்த கலாச்சாரம் சிறப்பாக இல்லை. இந்தப் பிரிவில் ஒருங்கிணைந்த கலாச்சாரம் உருவாகவில்லையெனில் எப்போதும் பதக்கங்களை வெல்ல இயலாது. இது குறித்து ஆய்வு செய்யவேண்டிய அவசியம் உள்ளது,” என்று சிஎன்பிசி நேர்காணலில் தெரிவித்தார் விளையாட்டு வீரரான போரியா மஜும்தார். 

மக்கள்தொகை எண்ணிக்கையில் உலகளவில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடான இந்தியா ஒலிம்பிக்ஸ் போட்டியில் குறுவிரை ஓட்டம் விளையாட்டில் இதுவரை தங்கம் வென்றதில்லை. தங்கம் வெல்வதற்கும் விளையாட்டில் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் நசீர் போன்ற இளம் வீரர்களின் திறமைகள் ஊக்குவிக்கப்படவேண்டும்.

கட்டுரை : Think Change India