இன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்...

16 வயது முதல் வானில் பறந்து கொண்டிருக்கும் இளம் பைலட்டான ஐமி பர்ன், தனது சாகசங்களை இண்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் ஆக்கி இணைய புகழ் பெற்றிருப்பதோடு, பறக்கும் கனவை நிறைவேற்றிக்கொள்வது சாத்தியமே எனும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்.

0

இன்ஸ்டாகிராம் புகழுக்கு ஒரு விலை இருக்கிறது. பலரை இன்ஸ்டாகிராம் புகழ் தேடி வருகிறது. பலர் அந்த புகழை தேடிச்செல்வதோடு, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யவும் தயாராக இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அசர வைக்க வேண்டும் என்பதற்காக பிரமிக்க வைக்கும் இடங்களை தேடிச்சென்று படம் எடுத்து பகிர்ந்து கொள்கின்றனர். இதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் அளவுக்கும் சிலர் செல்வதுண்டு. இதற்காகவே தனி விமானத்தை வாடகைக்கு விடும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றும் இருக்கிறது.

ஆனால் நியூசிலாந்தைச்சேர்ந்த 20 வயது இளம் பெண் ஐமி பர்னுக்கு (Aimee Burn) இந்த கவலை எல்லாம் இல்லை. ஏனெனில் பறப்பது தான் ஐமிக்கு பொழுதுபோக்கு. அதுவே அவருக்கு தொழிலும் கூட. அதனால் அவர் பறந்து கொண்டே இருக்கிறார். இதன் பயனாக அசர வைக்கும் காட்சிகளை வானில் இருந்து படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் மூலம் ஐமி பகிரும் படங்கள் அவருக்கு 19,000 க்கும் அதிகமான ஃபாலோயர்கள் பெற்றுத்தந்து இணையத்தில் புகழ் பெறவும் வைத்திருக்கிறது. இந்த புகழால் அவரும் இன்ஸ்டாகிராம் நட்சத்திரங்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். ஆனால், ஐமி புகழையோ, பணத்தையோ இலக்காக கொண்டு இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. 

பறப்பதை நேசிக்கும் சாகசப்பிரியரான ஐமி, பைலெட்டாகும் கனவு தொட்டு விடும் தூரம் தான் எனும் நம்பிக்கையை இளைஞர்கள், இளம் பெண்களிடம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இன்ஸ்டாகிராமில் தனது சாகசப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பறப்பதற்காக எனக்கு பணம் கொடுக்கின்றனர், எனக்கு பிடித்தமானதை நான் செய்து கொண்டிருக்கிறேன் என அவர் பேட்டி ஒன்றில் உற்சாகமாக கூறியிருக்கிறார். நியூசிலாந்து நாட்டின் வெலிங்கடன் நகர் வடகே அமைந்துள்ள, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும், டோங்காரியா உள்ளிட்ட மலைப்பகுதிக்கு மேல் தான் அவர் வானில் வட்டமடிக்கிறார். இங்குள்ள மூன்று எரிமலைகளுக்கு மேல் சுற்றுலா பயணிகளை தனி விமானத்தில் அழைத்துச்சென்று சுற்றி காண்பித்து ரசிக்க வைப்பது தான் அவரது பணி. இதை தான் அவர் உற்சாகமாக செய்து வருகிறார்.

எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எழில் மிகு காட்சிகளை வானில் இருந்து கிளிக் செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/aimeburn/?hl=en) பகிர்ந்து கொண்டு வருகிறார். எரிமலையின் தோற்றம், மலைப்பகுதியின் மனதை சொக்க வைக்கும் காட்சிகளோடு, தனது விமான செல்பீக்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

20 வயதில் இப்படி தனி விமானத்தில் பறந்த படி, சுற்றுலா பயணிகளை ஐமி மகிழ்விப்பது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அவரது கதையை கேட்டால் இதில் வியக்க ஒன்றுமில்லை எனத்தோன்றும். ஏனெனில் அவருக்கு 12 வயதாக இருந்தே போதே விமானத்தில் பறப்பதில் ஆர்வம் வந்துவிட்டதாக கூறுகிறார். என்னுடைய தந்தையிடம் இருந்து பெட்ரோல் மரபணு எனக்கும் வந்திருக்க வேண்டும், அந்த வயதிலேயே விமான இஞ்சின்களின் சத்தம் எனக்கு சங்கீதமாக கேட்டது என்கிறார் ஐமி.

ஒரு முறை ஏர்போர்ட்டில் பாம்பார்டியர் கியூ-300 விமானத்தை பார்த்த போது அதன் டர்பன் ஒலி, சங்கீதமாக கேட்டதாகவும், அப்போதே அதை கட்டுப்படுத்தி இயக்கவேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார். அதன் பிறகு 15 வயதில் முதல் முறையாக விமானத்தை சோதனை முறையில் இயக்கி பார்த்தவர் 2014 ல் முறைப்படி ஒராண்டு பயிற்சி பெற்றார். 18 வயதில் கமர்ஷியல் பைலெட் உரிமம் பெற்றவர், 19 வது வயதில் விமான ஓட்டுனர் பயிற்சியாளராகவும் மாறினார்.

இந்த ஆண்டு துவக்கம் முதல் எரிமலைக்கு மேல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறார். மலைப்பகுதியில் பருவநிலை மாறிக்கொண்டே இருக்கும், எனவே ஒவ்வொரு நாள் பறப்பதும் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும், இது உற்சாகமானது என்கிறார். 

“தான் அழைத்துச்செல்லும் பயணிகள் முகத்தில் மகிழ்ச்சியையும், புன்னகையையும் பார்ப்பது தன்னை ஊக்கப்படுத்துவதாக கூறுபவர், மேலும் அதிக இளம் பெண்கள் பறப்பதற்கு வர வேண்டும் என்கிறார். அந்த நோக்கத்துடன் தான், தனது சாகசங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவதாக கூறுகிறார்.’

இரு தரப்பைச்சேர்ந்தவர்களையும் ஈர்க்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும், விமான பைலெட்டாவது எட்டக்கூடிய கனவு தான் என்றும் கூறுகிறார். பெண் என்பதால் தான் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை என்று கூறுபவர், பைலெட்டாக, கணிதப்புலியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை ஆர்வம் இருந்தால் போதும் என்கிறார்.

வாழ்க்கையில் எது செய்வதாக இருந்தாலும் , குறிப்பாக தொழில் வாழ்க்கை எது செய்வதாக இருந்தாலும் அது உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது முக்கியமானது என தன்னைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு அவர் டிப்ஸ் அளிக்கிறார். உங்களுக்கு ஆர்வம் அளிக்காத பாடத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலவிடுவதற்கு முன், உங்களுக்கு எதில் ஆர்வம் என்பதை கண்டறியுங்கள் என்றும் அவர் சொல்கிறார்.

ஐமி பர்ன் பற்றிய டெய்லி மைல் செய்தி: http://www.dailymail.co.uk/news/article-5919659/Meet-Aimee-Burn-flies-tourists-active-volcanoes-New-Zealand-living-age-20.html

Related Stories

Stories by cyber simman