சென்னை முதல் தில்லி வரை 2200 கிமீ சைக்கிளில் பயணித்த சதீஷ்!

நான்கு சுவற்றுக்குள் வேண்டாவெறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பவர்களை எல்லாம் தட்டி எழுப்பி, உங்களுடைய பாஷன் எதுவோ அதை பின்பற்றுங்கள் என்று சொல்லவே, தனியாக சென்னையில் இருந்து தில்லி வரை சைக்கிளில் பயணித்த சதீஷ் குமாரின் நோக்கம். 

0

சென்னையின் ராமாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார். ஃபேஸ்புகில் சதீஷ் பாண்டலெரோ என்று பெயர் வைத்திருக்கிறார். பாண்டலெரோ யார், அவர் எப்படி ஊக்கமாக இருந்தார் என்று ஆர்வமாய் கேட்க தொடங்கியதும்,  

“சுட்டி டிவில வந்த ஒரு ஸ்பானிஷ் கார்ட்டூன்ல வர்ற ஆளு. அவர் நல்லது செய்வார். அதனால பிடிச்சுது, அந்த பேர சேத்துக்கிட்டேன்,” என்றார். 

இவ்வளவு எளிதும், இனிதும் தான் சதீஷ் குமாரின் பயணக்கதை. சதீஷின் அப்பா டெய்லர், அம்மா துணி இஸ்திரி செய்பவர். பள்ளிப்படிப்பு முடிந்ததும், சத்யபாமா கல்லூரியில் கல்விக்கடன் பெற்று சேர்ந்து படித்திருக்கிறார். கல்லூரி முடிந்ததுமேயே வேலை கிடைத்திருக்கிறது. 

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைகளின் யதார்த்தத்தை நாம் அறியாமல் இல்லை. தன் துறையில் இருப்பவர்கள் எல்லாருமே, மன அழுத்தம் தாளாமல் பயணங்களை மருந்தாக தேர்வு செய்வதை சதீஷ் கவனித்திருக்கிறார். இப்படி இருக்கும் போது சதீஷ் குமாருக்கு கிரெடிட் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.  

“ஐ.டில இருந்த எல்லாருக்கும் சேர்லயே உட்கார்ந்திருக்கோமேனு ஒரு கவலை இருந்துட்டே இருக்கும். எனக்கு கிரெடிட் கார்டு கெடச்சதும் எல்லாரும் அதை சரியா யூஸ் பண்ணுன்னு சொல்லிட்டே இருந்தாங்க. நான் ஹாங்காங்குக்கு டிக்கெட் புக் பண்ணி அங்க போயிட்டு வந்துட்டேன். எல்லாரும் ஷாக் ஆயிட்டாங்க,” என விவரிக்கிறார்.

இப்படியாகத் தான் சதீஷ் தன்னுடைய பயண ஆர்வத்தை முதல் முறையாக கண்டுகொண்டார். பிறகு, இந்தியாவில் சின்ன சின்ன பயணங்களாக தொடர்ந்திருக்கிறார். ஹிப்பிக்களை போல பெரியளவு காசில்லாமல் பயணிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது. 

காஷ்மீரில் இருக்கும் லே, லடாக்கிறகு போன போது இந்தியன் ஆயில் வண்டியில் லிஃப்ட் கேட்டு போனதாக சொல்கிறார். மாற்றத்திற்காக பயணிக்கும் பலரைப் போலவே சதீஷும், சொகுசாக டூரிஸ்டுகளை போல பயணிப்பதை எப்போதும் விரும்பவில்லை. கூடவே, பெரும்பாலான பயண ஆர்வலர்களிடம் இருந்து சதீஷ் மாறுபடும் இடம், அவர் முன்னெடுத்து சென்ற பிரச்சாரம். 

“எல்லா இடங்களிலும் வேலைகள் இருக்கிறது. அதாவது நமக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யணும்னா நம்ம அணுகுமுறைய மாத்தணும். ஒரு வழக்கமான தினசரிக்குள்ள மாட்டிக்க கூடாது. அதனால தான் Fear the routine அப்படிங்குற பிரச்சாரத்தோட சைக்கிளிங் பண்ண முடிவு பண்ணேன்,” என்கிறார். 

நாம் எல்லாருமே பிரம்மாண்ட பிரச்சாரங்களுக்கு மட்டுமே பழக்கப்பட்டிருப்போம். உணவை வீணாக்க வேண்டாம், பெண் வலிமை, கல்வியின் அவசியம் போன்றவற்றை பற்றிய பிரச்சாரங்கள் எவ்வளவு அவசியமோ அதே அளவு, உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை செய்யாதீர்கள் என்பதும் அவசியமான பிரச்சாரம் என்பதை உணர்த்த நினைத்ததற்காகவே சதீஷை பாராட்டலாம். 

பூட்டான், நேபாளம் என பயணத்திட்டத்திற்கு ஆலோசனை செய்து, கடைசியில் சென்னையில் இருந்து தில்லி வரை போவது என்று முடிவு செய்திருக்கிறார். தில்லி வரை போவதற்கு அவர் தேர்ந்தெடுத்த வாகனம் சாதாரண சைக்கிள், அதுவும் ஆறு ஆண்டுகள் பழைய சைக்கிள் என்பது சுவாரசியமானது. 

“அது எப்படியோ பத்திரமா தில்லி வரை கொண்டு போய் சேர்த்திருச்சு...” என்று உற்சாகமாக பகிர்கிறார். 

2018 மே 26- ஆம் தேதி தன்னுடைய பயணத்தை சென்னை ராமாபுரத்தில் இருந்து சைக்கிளில் தொடங்கியிருக்கிறார் சதீஷ். அங்கிருந்து கும்மிடிப்பூண்டி வழியே ஆந்திராவுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கே சந்தித்த ஒரு நபர் கோவிலில் தங்கிக்கொள்ளும்படி யோசனை கொடுக்க, அடுத்தடுத்து கோவில்களில் தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார் சதீஷ். 

சைக்கிள் டயர் பஞ்சர் ஆனது, காவல்துறையினரின் அன்பு, கிடைக்கும் இடங்களில் மொபைல் சார்ஜ் செய்து கொள்வது, வழி நெடுக மனிதர்களை நண்பர்களாக்குவது என பல அதிரடி திருப்பங்கள் நிறைந்ததாக அவருடைய பயணம் இருந்திருக்கிறது. 

வழித்துணைக்கு யாரும் இல்லாத போதிலும் கூட, மனிதர்கள் தனக்கு உதவிக் கொண்டே இருந்ததாக சதீஷ் சொல்கிறார். ஹைதராபாத்தில் கிஷன் குமார் ரெட்டி, மத்திய பிரதேசத்தின் முன் அறிந்திருக்காத ஒரு குடும்பமும், சதீஷ் தங்கி ஓய்வெடுக்க உதவியிருக்கிறார்கள். உணவும், ஆசீர்வாதமும் தந்து அனுப்பிய அந்த குடும்பங்களை எல்லாம் அன்போடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறார் சதீஷ். மேலும், தன்னுடைய பயணம் பற்றிய விவரங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து கொண்டிருந்ததை வைத்து, மஹாராஷ்டிராவில் இருக்கும் ‘என்சைக்ளோபீடியா’ எனும் சர்வதேச தரத்திலான சைக்கிள் சர்வீஸ் நிறுவனத்தின் ஓனர் இவரை தொடர்பு கொண்டிருக்கிறார். 

சதீஷின் சைக்கிளுக்கு இலவசமாக சர்வீஸும் செய்து கொடுத்து, தங்குவதற்கு இடமும் உண்டாக்கி கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வடக்கிற்கு பயணப்பட்டிருக்கிறார். வட-இந்தியாவை பற்றிய பயம் ஒன்று நமக்கு இருந்து கொண்டே இருப்பதாக சொன்ன சதீஷ், உண்மையில் மக்களோடு பழகி பார்த்தால் அது பெரிய அச்சுறுத்தலாக இருப்பதில்லை என்றும் சொல்கிறார். 

டெண்ட், ஜி.பி.எஸ் என பெரிய சாதனங்கள் எதுவும் இல்லாமல், வெறும் ஸ்லீப்பிங் பேக்கோடு பயணித்த சதீஷிற்கு இந்த மாதிரியான உதவிகள் பெருமளவு நம்பிக்கையை கொடுத்திருக்கின்றன. 

கூடவே, தொழில்நுட்பம் தனக்கு நிறைய கைகொடுத்ததாகவும் சதீஷ் சொல்கிறார். வெறும் கூகுள் மேப்பை வைத்து தான் ஒவ்வொரு ஊருக்கும் சென்றிருக்கிறார். எந்த ஹைவேயில் போவது என்று தேர்ந்தெடுப்பதில் இருந்து, அன்றிரவு தங்கிக் கொள்ள கோவில்கள் எதாவது இருக்கின்றனவா என பார்ப்பது வரை கூகுள் மேப் உதவியிருக்கிறது. தன்னுடைய பயணத்தின் விவரங்கள் எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததனால், அடுத்தடுத்து தங்கும் வசதிகளின் விவரங்களும் தெரிய வந்திருக்கின்றன. 

அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுக்கு சைக்கிளில் பயணிக்க வேண்டும் என்பது சதீஷின் கனவாக இருக்கிறது. அதற்காக ஸ்பான்சர்கள் தேடிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு காரில் போய் வந்த மகளிர் குழுவை சேர்ந்த மீனாட்சி சாயிடம் பேசியதாகவும் சொல்கிறார். 

 “வீட்டை கவனிச்சுக்கவும், படிக்குறதுக்கு எடுத்த லோனை கட்டவும் இப்போ ட்ராவல் இண்டஸ்ட்ரில வேலை செஞ்சுட்டு இருக்கேன்,” என்று தெரிவிக்கிறார். 

சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடர்பவர்கள் எல்லாரும் தன்னை ஒரு முன்னோடியாக பார்ப்பது சதீஷுக்கு பெருமிதம் அளிக்கிறது. இருபத்தெட்டு நாட்களில், ஐந்து நாட்கள் இடைவேளையோடு, 2200 கிமீ சைக்கிளில் செல்வது சாதாரண காரியம் இல்லை என்றாலும்,

‘என்னால் முடிகிறதென்றால், உங்களாலும் முடியும் என்று தானே அர்த்தம்’ என்று நிறைவு செய்கிறார்.