அதிவிரைவு ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க்குகள் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இணைப்பு!

0

நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளை அதிவிரைவு ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என்பதை இந்திய அரசாங்கம் இலக்காகக் கொண்டிருந்தது. சமீபத்தில் பாரத்நெட் திட்டத்தின் உதவியுடன் முதல் கட்டமாக குறிப்பிடத்தக்க அளவு இந்த இலக்கை எட்டியுள்ளது. 200 மில்லியனுக்கும் அதிகமான கிராமப்புற இந்தியர்கள் பயனடையும் வகையில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் அதிவிரைவு இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

”திட்டத்தை உருவாக்கி அனைவரையும் ஒருங்கிணைத்து வெற்றியடையவேண்டும் என்பதே பாரத்நெட் திட்டத்தின் செயல்முறையாகும். இது உலகின் மிகப்பெரிய கிராமப்புற பிராட்பேண்ட் திட்டம். இந்தத் திட்டம் வாயிலாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாகக்கூடும்,”

என நம்பிக்கை தெரிவித்தார் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா.  2,50,000 கிராம பஞ்சாயத்துகளை ப்ராட்பேண்ட் நெட்வொர்க் வாயிலாக இணைக்கும் கிராமப்புற டிஜிட்டல் புரட்சி வரவிருப்பதால் பாரத்நெட்டின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளுக்கான இலக்கு 2019-ம் ஆண்டு மார்ச் மாதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போதும் அதற்கு முன்பே பணிகளை முடிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநில மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து மலிவான விலையில் கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு ப்ராட்பேண்ட் சேவைகளை வழங்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு உருவாக்கப்பட்ட ’டிஜிட்டல் இந்தியா’ மற்றும் ’மேக் இன் இந்தியா’ இரண்டு முயற்சிகளுமே அவரது தனித்துவமான திட்டங்களாகும். 

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகள் உள்ளன. இந்த முயற்சிகள் ஒவ்வொன்றும் இந்தியாவை தகவல் சார்ந்த பொருளாதாரமாக மாற்ற தயார்படுத்தும் விதத்திலும் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம் குடிமக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் நோக்கத்துடனும் திட்டமிடப்படப்பட்டுள்ளது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பல்வேறு மத்திய அமைச்சகங்கள் அல்லது துறைகள் மற்றும் மாநில அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டதிற்கான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு பிரதமர் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு மின்னணு ஆட்சிமுறையின் தற்போதைய முயற்சிகள் சீரமைக்கப்படுகின்றன.

கட்டுரை : Think Change India