'இளைஞர்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிப்போம்': ‘கமல் கிசான்’ நிறுவனர் தேவி மூர்த்தி

0

வரப்பு நீர், கதிரறுப்பு போன்ற சொற்கள் எல்லாம் இனி வரும் தலைமுறை கற்கவும், அனுபவிக்கவும் வாய்ப்பே இல்லை என்று நம்பிக்கை இழக்கும் போது தான், ஒரு சின்ன மின்மினிப் பூச்சியாய் தோன்றியுள்ள ‘கமல் கிசான்’ (kamal kisan) அமைப்பு, நிச்சயம் விரைவில் விளக்கொளியாக மாறும் என்ற உறுதி அதன் நிறுவனர் தேவி மூர்த்தியின் பேச்சில் மின்னுகிறது.

'கமல் கிசான்' சமூக தொழில்முனைவு அமைப்பின் நிறுவனர் தேவி மூர்த்தியுடன் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ...

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். நான்கு தலைமுறையாக பெங்களூரில் இருந்தாலுமே, வீட்டில் தமிழ் பேசுவதனால் தமிழ் சரளமாகவே வரும்” என மிக இயல்பாக பேசத் தொடங்கினார், தேவி மூர்த்தி.

“ட்ரெக்செல் பல்கலைகழகத்திலிரிந்து, மின் பொறியியல் முடித்துவிட்டு சில நாட்கள் உலோகத் தாள் தயாரிப்புகள் வடிவமைக்கும் என் குடும்பத் தொழிலில் ஈடுபட்டிருந்தேன். பெங்களுரு ஐ.ஐ.எம்-ல் தொழில்முனைவில் முதுநிலை பட்டம் பெற்ற பிறகு, விவசாயம் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினேன். 2011 வரை நான் ஒரு முறைக் கூட, வயலுக்கோ, வரப்பிற்கோ போனது கிடையாது" என்கிறா தேவி.

பெங்களூர், கோயம்புத்தூர், கர்நாடகா, குஜராத், உத்தரப்பிரதேசம் என நாடு முழுக்க பல இடங்களில் உள்ள விவசாயிகளின் கஷ்டங்கள் என்னவாக இருக்கிறது? விவசாய உபகரணங்கள் தயாரித்தால் அதன் மூலம் ஏதேனும் நன்மை ஏற்படுமா? எந்த மாதிரியான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்? என்ற பலக் கேள்விகளோடு சென்று அதற்கான பதில்களை தேடினேன். அதற்குப் பிறகு தான், விவசாயத்தை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் எனக் கண்டறிந்தேன்.”

கமல் கிசான்

தேவி, குறிப்பிடும் இந்த ஆய்வுப் பணியை தொடங்குகையில், அவர் தனி நபராகத் தான் பல ஊர்களுக்கு பயணித்திருக்கிறார். ஆனால், இன்று, தனக்கென எட்டு நபர் கோண்ட குழு ஒன்றை அமைத்துக் கொண்டு, நண்பர்கள், பெற்றோர்களின் முழு ஆதரைவுயும் பெற்றிருக்கிறார்.

அப்படி, 2012-ல் தொடங்கப்பட்டது தான் ‘கமல் கிசான்’. விவசாயத்திற்கு உதவும் கருவிகளை வடிவமைத்து, விவசாயிகளுக்கு அளிக்கும் ஒரு தொடக்க நிறுவனம். நிதியுதவி எதுவும் பெறாமல் தொடங்கப்பட்ட ‘கமல் கிசான்’ அமைப்பிற்கு, மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின், கிராமப்புற தொழில்நுட்பம் மற்றும் வியாபாரக் காப்பு மையமும், வில்க்ரோவும் பெரும் ஆதராவாய் இருந்து வருகிறது.

ஆய்வு முடிந்த பிறகு, தொடக்கத்தில், நாற்று நடும் கருவி ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினோம். 

"அப்போது சந்தையில் இருந்த கருவிகளில், நடப் போகும் நாற்றை விவசாயிகள் தனியே தயாரிக்க வேண்டி இருந்தது இது ஒரு பெரிய குறையாக இருந்தது. அதை, நாங்கள் மாற்றி, பாரம்பரியமாக வயலில் விவசாயிகள் பயன்படுத்தும் நாற்றையே உபயோகித்து ஒரு கருவியை வடிவமைக்க நினைத்தோம். அதில் வடிவமைப்பில் சில சிக்கல்கள் இருந்ததனால், அதை வெளியிடவில்லை”, என மாற்றத்தை நோக்கிய தன் முதல் அடியை விவரிக்கிறார் தேவி.

தயாரிப்புகள்

முதல் தயாரிப்பு, முழுமையடையாத நிலையிலும், மனம் தளர்ந்துவிடாமல் தங்கள் முடிவில் மாற்றம் எதுவுமில்லாமல், அடுத்தத் தயாரிப்பை நோக்கி முன்னேறியிருக்கின்றனர், கமல் கிசான் குழுவினர்.

'வெஜிடபிள் ப்ளாண்டர்’ என்ற தயாரிப்பொன்றை வெளியிட்டிருக்கிறோம். பிறகு, ‘பிளாஸ்டிக் மல்ச்சிங்’; அடிப்படையில், விளைநிலத்தில் செடிகள், பயிர் இருக்கும் இடம் தவிர்த்து மற்ற நிலத்தில் பிளாஸ்டிக் விரிக்கப்பட்டிருக்கும். இந்த பிளாஸ்டிக் விரிப்பு இருப்பதனால், அங்கே களை வர வாய்ப்பில்லை. இதன் காரணமாக நுண்ணுயிர் செயல்பாடுகள் அதிகரித்து, உற்பத்தியும் செழிப்பாக இருக்கிறது. தண்ணீர் இல்லாத இடங்களில் நிலத்தில் இருக்கும் ஈரத்தன்மையை தக்க வைக்கவும் இது உதவுகிறது. அந்த பிளாஸ்டிக் விரிப்பை அமைப்பதற்கும் ஒரு கருவி வடிவமைத்தோம்.

"கரும்பு நடும் கருவி ஒன்றை வடிவமைத்திருக்கிறோம். வழக்கமான முறையில் நடவு செய்ய, ஒரு ஏக்கர் நிலத்துக்கு நாலிலிருந்து ஐந்து நாட்கள் வரை ஆகும். ஆனால், எங்கள் கருவியை உபயோகிக்கும் போது, அதே வேலையை ஐந்து மணி நேரத்தில் முடித்து விடலாம்”, எனத் தம் தயாரிப்புகளைப் பற்றி கூறுகிறார்.

பல தயாரிப்புகள் வடிவமைப்பு நிலையில் இருக்கிறது. கமல் கிசானின் தயாரிப்புகள் எந்தெந்த பகுதிகளில் பயன்படுத்தப் படுகிறது எனக் கேட்டபோது, ‘தற்போது, கர்நாடகாவின் வடக்கில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக, ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் அறிமுகப் படுத்தவிருக்கிறோம். விரைவில், நாடு முழுக்க எங்கள் சேவையை விரிவுப்படுத்துவோம்’ என்கிறார் தேவி மூர்த்தி.

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைப் பற்றி பேசிய போது, “அது உபயோகமானது தான். அதன் மூலம் நன்மைகள் தான் அதிகம் இருக்கிறது. விவசாயிகள் என்னுடன் ‘வாட்ஸ்-அப்’பில் கலந்துரையாடுகிறார்கள். என்னை பொறுத்தவரையில், எந்தத் தொழில்நுட்பமும், அளவறிந்து உபயோகிக்கப்பட வேண்டும், அவ்வளவு தான்” என்றார்.

விவசாய அனுபவம்

“என் கைகளால் செய்த கருவிகளை எடுத்துச் சென்று, விளை நிலத்தில் அதை செயல்படுத்திப் பார்க்கும் போது, ஒரு பெருமை ஏற்படுவது இயர்க்கை தானே! நகரத்தில் இருந்து வந்து நமக்காக பணிபுரிகிறார்களே என விவசாயிகளும் உற்சாகமாகிறார்கள். அவர்கள் ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை, நன்றாக இருக்கிறது அந்த வாழ்க்கை, நான் என்னை அதிர்ஷ்டசாலியாக உணரும் நேரம் அது தான்”,

என்று தான் வயலில் இறங்கி வேலை செய்த அனுபவத்தை நினைவு கூர்ந்து மகிழ்கிறார் தேவி மூர்த்தி.

விவசாயப் பணியாட்களின் இடத்தில் கருவிகளை அறிமுகப்படுத்துவதால், அந்த பணியாளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பிலையா?

பணியாட்கள் எங்கே இருக்கிறார்கள்? விவசாயிகளின் மிகப் பெரிய பிரச்சினையே, பணியாட்களின் பற்றாக்குறை தான். உண்மை என்னவென்றால், பணியாட்களை வைத்து வேலை செய்வது எளிது. விவசாயி ஒருவர், தன் நிலத்தில், விவசாயத்திற்காக கருவிகளை உபயோகிப்பதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆனால், இங்கே பணியாட்களே இல்லாத போது வேறென்ன செய்வது? என்கிறார்.

இன்று, நெல் நடவு செய்யும் ஒரு இடத்தில் சென்று பார்த்தால், அங்கிருப்பவர்கள் நிச்சயம் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த பெண்களாய் தான் இருப்பார்கள். மூன்றாம் தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. விவசாயியின் மகனிற்கே விவசாயம் செய்ய விருப்பமில்லையே? இந்த நிலையில் தான், விவசாயம் செய்ய வரும் இளைஞர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

தொழில் முனைவை நோக்கி, நம் இளைஞர்களின் கவனம் திரும்பியிருக்கு பொழுது, விவசாயத்தின் மூலமாகவும் நேர்மறையான விளைவுகளை கொண்டு வர முடியும் என்பதற்கு சான்றாய் இருக்கும் ‘கமல் கிசானின்’ முயற்சியை மதித்து, வரவேற்கிறோம். மேன்மேலும், பல நவீனங்களோடு விவசாயியையும், விளைநிலத்தையும் ரட்சிக்கவும் வேண்டுகிறோம்.